விஜய்யின் புதிய டார்கெட்!
"பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள் ளார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இப்படம், விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, குடும்ப பாசம், காதல், லேசான ஆக்சன் என குடும்ப ஆடியன்ஸை டார்கெட் செய்யும்விதமாக எடுக்கப்பட உள்ளதாம்.
இந்த படத்தில் கதாநாயகி உட்பட மற்ற அனைத்து கதாபாத்திரங்களி லும் யார், யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத சூழலில், விரைவில் படத்தின் நாயகி யார் என்பதைப் படக்குழு அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாம். நாயகிக்கான இந்த ரேஸில், ராஷ்மிகா மந்தானா மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர்தான் தற்போதைக்கு டாப் ஸ்பாட்டில் இருக்கிறார்களாம்.
புனித் ராஜ்குமாருக்கு கௌரவம்!
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள "ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றி வைக்கப்பட்டு, தற்போது ஒருவழியாக மார்ச் 25 அன்று வெளியாகும் என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 என இரண்டு தேதிகளை அறிவித்த படக்குழு, இதில் ஏதோ ஒரு தேதியில் "ஆர்.ஆர்.ஆர்.' படம் வெளி யாகும் என அறிவித்திருந்தது. ஆனால், இந்த இரண்டு தேதிகளும் இல்லாமல் புதிதாக மார்ச் 25-ஆம் தேதியைப் படக்குழு தேர்வு செய் துள்ளதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதாலும், படத்தின் பட்ஜெட்டை கருத்தில்கொண்டும் ஏப்ரல் வரை தாமதிக்காமல் மார்ச் மாதத்திலேயே படத்தை வெளியிடப் படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப் பட்டதுபோல, மார்ச் 18 படத்தை வெளியிடப் படக்குழு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்நிலையில், மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் பிறந்த தினம் மார்ச் 17-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் அவர் கடைசியாக நடித்த "ஜேம்ஸ்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் அனைத்து திரையரங்குகளிலும் "ஜேம்ஸ்' வெளியாக இருப்பதால், அதே நாளில் தங்கள் படத்தை வெளியிட வேண் டாம் என்பதற்காகவே "ஆர்.ஆர்.ஆர்' படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம். "ஜேம்ஸ்' படத்தின் பணிகள் முழுவதும் முடிவடையும் முன்னே புனீத் ராஜ் குமார் மறைந்த நிலையில், அவரது அண்ணன் சிவராஜ்குமார், தனது தம்பிக்காக இப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய சினிமாவில் முதன் முறையாக...!
பார்த்திபனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான "ஒத்த செருப்பு'’படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சென்ற ஆண்டு தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் "இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்த சுவாரஸ்ய மான அப்டேட் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் நாயகனான ரஹ்மானுடன் மேலும் இரண்டு ஆஸ்கர் வெற்றியாளர்கள் இப்படத்திற்காகக் கூட்டணி அமைக்கவுள்ளனராம். அதன்படி, "ஸ்பைடர் மேன்', "மென் இன் பிளாக்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய கட்டாலங்கோ லியோன் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "விப்லாஷ்' படத்தின் சவுண்ட் டிசைன் பணிக்காக ஆஸ்கர் வென்ற கிரைக்மான் இப்படத்திற்கு சவுண்ட் டிசைனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே படத்தில் மூன்று ஆஸ்கர் விருது வென் றோர் இணைந்து பணியாற்றுவது இந்திய சினிமாவில் இதுவே முதன்முறை.
பாய்ச்சலில் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
பிரபாஸ், பூஜாஹெக்டே நடிப் பில் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி உள்ள "ராதே ஷ்யாம்', பான் இந்தியா படமாக மார்ச் 11 அன்று ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள சூழலில், இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின், "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.
இதேபோல, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள "எதற்கும் துணிந்தவன்' படத்தையும், அதே வாரத்தில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் "எஃப்.ஐ.ஆர்' படத்தையும் "ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனமே வெளியிடவுள்ளது என முன்னரே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-எம்.கே.