தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜாவை போட்டியின்றித் தேர்வு செய்ய வைத்தவர் ஆர்.கே.செல்வமணி. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதாலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் திட்டத்தோடும் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா.
இதன்பிறகு... சங்கத்தில் மூன்று அணிகள் உருவானது.
"சர்கார்' கதை விஷயத்தில் பாக்யராஜின் நியாயமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்.கே. செல்வமணி தரப்பு இருந்ததால்...
செல்வமணியை தோற்கடிக்கும் திட்டத்தோடு பாக்யராஜ் தலைமையில் ஒரு டீம், ஆர்.கே. செல்வமணி தலைமையில் ஒரு டீம், டைரக்டர்கள் அமீர் மற்றும் எஸ்.பி.ஜனநாதன் தலைமையில் ஒரு டீம்... என மூன்று டீம்கள் உருவானது. ஆனால்... நடிகர் சங்க தேர்தலில் தலைவராக போட்டியிட்டு... இன்னும் ரிசல்ட் கிடைக்காத சலிப்பில்... டைரக்டர் சங்க தேர்தலில் போட்டியிட பாக்யராஜ் மறுத்ததால்... பாக்யராஜ் டீம் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
செல்வமணி டீம், அமீர் டீம் இடையே போட்டி நிலவியது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமீர், தன்னைப்போல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாதனுக்கு வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டிருந்தார். இதேபோல் அமீரின் மனுவில் ஜனநாதன் கையெழுத்துப் போட்டிருந்தார்.
ஒருவர் மனு தள்ளுபடியானாலும் இன்னொருவர் நிற்கலாம் என்கிற முடிவில் இப்படி கையெழுத்திட்டிருந்தனர்.
"ஒரு பதவிக்கு போட்டியிடுபவர் அதே பதவிக்கு போட்டியிடுபவரை வழிமொழிந்து கையெழுத்திட்டது தவறு' என்கிற பாயிண்ட்டைப் பிடித்து... அமீர் மற்றும் ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துவிட்டார் சங்க தேர்தல் பொறுப்பாளர்.
இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செல்வமணியின் கை ஓங்கியுள்ளது. மேலும் தனது அணியைப் பலப்படுத்த விரும்பிய செல்வமணி, தனது அணி சார்பில் இரண்டு துணைத்தலைவர்களாக போட்டியிட பி.வாசுவையும், கே.எஸ்.ரவிக்குமாரையும் கொண்டுவர திட்டமிட்டார். இதில் பி.வாசு போட்டியிட விரும்பவில்லை. இதையடுத்து ரவிக்குமாரும், ரவிமரியாவும் செல்வமணி அணியில் போட்டியிடுகின்றனர். கூடவே தனது அணி செயற்குழு உறுப்பினர்களாக ஏ.ஆர்.முருகதாஸ், மனோஜ்குமார், சண்முகந்தரம், மனோபாலா ஆகியோரை களமிறக்கியுள்ளார் செல்வமணி.
சுயேட்சைகளாக தலைவர் பதவிக்கு வித்யாசாகரும், துணைத்தலைவர் பதவிக்கு வேல்முருகனும் போட்டியிடுகிறார்கள்.
ஆர்.வி.உதயகுமார் செயலாளர் பதவிக்கும், பேரரசு பொருளாளர் பதவிக்கும் அணி அமைக்காமல் வேட்புமனு தாக்கல் செய்தனர். இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாததால்... இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
எதிர்த்து போட்டியிடுபவர்களில் வேல்முருகன் உள்ளிட்ட சிலர் டஃப் ஃபைட் கொடுக்கும் போட்டியாளர்களாக இருந்தபோதிலும்... இப்போதைய நிலவரப்படி செல்வமணி டீமுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகச் சொல்கிறது சங்க சர்க்கிள்.
புகை... பகைதான். அந்த நல்ல நோக்கத்தில்தான் ஹீரோக்கள் சிகரெட் பிடிக்கும் காட்சி போஸ்டர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் விஜய்யின் "சர்கார்' படத்திற்குக்கூட இப்படி எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பின் நோக்கம் சிதைக்கப்பட்டு... அதை தங்களின் படத்திற்கான பரபரப்பு விளம்பரமாக (மீடியா துணையோடு) பயன்படுத்திக்கொள்கிறார்கள் ஹீரோக்கள்.
ரஜினி, அஜித் உட்பட சில ஹீரோக்கள் புகை பிடிப்பது போல நடிப்பதில்லை என்கிற முடிவை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்கள்.
ஹீரோக்கள் விட்டதை ஹீரோயின்கள் தொட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் "90 எம்.எல்.' படத்தில் ஓவியா புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றன. அதனால் இந்தப் படம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதேபோல், "மகா' படத்தில் ஹன்ஸிகா புகைக்கும் காட்சி கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது "ஆடை' படத்தில் அமலாபால் மிக கேஷுவலாக புகைக்கிற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
இதுபோல் ராகுல் பிரீத்சிங் "மன்மதடு-2' தெலுங்குப் படத்தில் புகைக்கும் காட்சியில் நடித்திருக்கிறார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்