பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிப்பு, அதனால் தகுதியுடைய மாணவர்களும் கூட மருத்துவக்கல்வி பயில முடியாத அவலம் -ஏற்பட்ட உயிரிழப்புகள், பள்ளிக் கல்வியில் இந்தித் திணிப்பு முயற்சி, பொருந்தாத தேவையில்லாத அம்சங்களுடன் வந்துள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக கல்விச்சூழல் குழப்பங்களோடும் பதற்றங்களோடும்தான் இருக்கிறது. புதுப் புது நடைமுறைகளின் மூலமும் நெறிமுறைகளின் மூலமும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அமைதியாக, மகிழ்ச்சியாக கற்கவேண்டிய கல்வியை மன அழுத்தத்தோடு கற்கவேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த சூழலில் மாணவர்களுக்குக் கூடுதல் கவலையை கொடுத்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர்கள் வேலை நிறுத்தம். அவர்களது கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் கல்வித்துறையும் அரசும் செய்த பிழைக்கு பாதிக்கப்பட்டதென்னவோ மாணவர்கள்தான். இப்படி 360 டிகிரியிலும் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சோதனைகளை ஒரு அரசுப் பள்ளியை களமாகக் கொண்டு அலசியிருக்கிறது ஜோதிகாவின் 'ராட்சசி' திரைப்படம்.
தமிழ் சினிமாவில் அதிகம் தாக்கப்படாத கேட்டகிரியான ஆசிரியர்களை விமர்சித்து, ஒரு பகுதி ஆசிரியர்களின் தவறுகளை யும் நியாயமாக எடுத்துச் சொல்லும் திரைப்படம் இது. புதூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்ற வருகிறார் ஜோதிகா. ஒரு பள்ளி எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் உள்ளது அந்தப் பள்ளி. இதை கவனித்த ஜோதிகா அப்பள்ளியை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். நேர்மையற்ற ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்து கிறார். அடுத்ததாக ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறார். ஜோதிகாவின் இந்த அதிரடியான மாற்றங்களால் தன் பள்ளியில் அட்மிஷன் குறைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாத தனியார் பள்ளி முதல்வர் ஹரிஷ் பெரடி, ஜோதிகாவை பழிவாங்க அவர் மேல் வழக்கு தொடர்கிறார். போலீசார் ஜோதிகாவை கைது செய்கின்றனர். இதன் பிறகு ஜோதிகாவிற்கும், மாணவர்களுக் கும் ஏற்பட்ட நிலைமை என்ன என்பதே "ராட்சசி' படத்தின் கதை.
அரசியல் படங்கள் அதிகம் வெளிவரும் காலகட்டமாக இருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு இடைவெளிக்குப் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர்களை மையப்படுத்தி வெளிவந்துள்ள படம். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிர தையால் பாதிக்கப்படும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் நிலையை சில கமர்ஷியல் அம்சங் களோடு காட்சிப்படுத்தியுள்ளது ராட்சசி. மருந்தில் கலக்கும் தேன் போல மக்களுக்கு அவசியமான ஒரு கதையில் சில கமர்சியல் அம்சங்களை சேர்த்து, கூடவே நம் பள்ளிக் காலத்தை ரிலேட் செய்துகொள்ளும்படி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் கௌதம்ராஜ். சில இடங்களில் சற்று மிகையாகத் தெரிந்தாலும் அவசியமான விஷயம்தான். பாரதி தம்பியின் ஷார்ப் பான வசனங்கள் படத்தின் ஆணி வேராக இருக்கின்றன. மக்களுக்கு சொல்ல வேண்டிய எல்லா நல்ல விஷயங்களையும் ஒரே படத்தில் சொல்ல எடுத் திருக்கும் முயற்சி பெருமளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
படம் முழுவதும் ஜோதிகாவே நிறைந்து காணப்படுகிறார். தன் நடை, உடை, பாவனை என பாத்திர மாகவே மாறி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பானதாகவும், அதே சமயம் தனக்கு பொருத்தமான கதை களையும் தேர்வு செய்து ரசிக்கவைக்கும் அவர் "ராட்சசி'யில் கூடுதல் சமூக அக்கறையுடன் செயல்பட்டிருப்பது தெரிகிறது. வில்லனாக வரும் ஹரிஷ் பெரடி கொலைக்கும், பழி வாங்குதலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வில்லத்தனம் செய்துள்ளார். உதவி தலைமையாசிரியராக வரும் கவிதா பாரதி ஆரம்பத்தில் மிரட்டி பின்னர் பணிந்துள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், அரசியல்வாதி அருள்தாஸ், பி.டி.மாஸ்டர் சத்யன், அகல்யா வெங்கடேசன், முத்துராமன் ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். குறிப்பாக குட்டிப்பையன் கதிர் கதாபாத்திரம் மனதை கவர்ந்துள்ளது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைத்துள்ளது. கோகுல் பினோய் ஒளிப்பதிவு அரசுப் பள்ளியை அழகாகவும் மாணவர்கள் சூழலை பசுமை யாகவும் காட்டியுள்ளது.
ஆங்காங்கே "சாட்டை', "அப்பா' படங்களை நினைவுபடுத்தும் இப்படம் முழுக்க முழுக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறை களை சில இடங்களில் மிகையாகவும், பல இடங்களில் சரியாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் இல்லாத அடிப்படை வசதிகள், சத்துணவு தரம் மற்றும் கழிவறை பிரச்சனைகள், படிப்பை தவிர்த்து மாணவர்களின் பிற இன்னல்கள் என இன்னும் பேசப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் இந்தப் படம் பேசியிருக்கும் விஷயங்களால் இது ராட்சசி இல்லை... கல்வி தேவதை.
-சந்தோஷ்