ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா.... நடிகர்சங்க தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
போலீஸ் பாதுகாப்பு தர மறுத்தது... சங்கங்களின் பதிவாளர் மூலம் தேர்தலை ரத்துசெய்வதாக அறிவிக்கவைத்தது... இப்படி விஷால் மீதான தனிப்பட்ட கோபத்தில் அரசு தரப்பில் பல்வேறு இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டபோதும்... உயர்நீதிமன்றம் தலையிட்டதால்... தேர்தல் நடந்துமுடிந்து விட்டது.
நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மிக ஆக்ரோஷமாகவே மோதிக் கொண்டன தேர்தல் களத்தில். இருப்பினும் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளை விடாமல் செய்துவந்தது சங்கரதாஸ் அணி.
61 உறுப்பினர்களை நாசர் தலைமையிலான நிர்வாகம் நீக்கியதாக சங்கங்களின் பதிவாளரிடம் ஐசரி கணேஷின் ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தலை ரத்து செய்தார் பதிவாளர். ஆனால்... "தேர்தலை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரமில்லை' என உயர் நீதிமன்றத்தில் வாதாடியது பாண்டவர் அணி. இதையடுத்து... திட்டமிட்டபடி தேர்தலை நடத்தவும், மறு உத்தரவு வரும்வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கவும் உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இதையடுத்து சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் திட்டமிட்டபடி 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன்புவரை தேர்தல் நடத்தும் இடம் தெரியாமல் இருந்த தாலும்... நீதிமன்ற வழக்காலும்... தேர்தல் நடைபெறாது என்றே பலரும் நினைத்திருந்தார்கள். "பூத் எங்கே?' என்பதைத்தவிர மற்ற ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தயாராக ஏற்பாடு செய்திருந்ததால்... தேர்தல் விறுவிறுப்பாகவே நடந்தது.
மொத்தமுள்ள 3150 வாக்குகளில் 1604 வாக்குகள் நேரிடையாகவும், 900 வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவானது. கிட்டத்தட்ட இது 85 சதவிகித வாக்குப்பதிவு.
மும்பையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு தபால் வாக்கு தாமதமாக வந்ததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.. "வழக்கு நடப்பதால் தேர்தல் இந்த தேதியில் நடக்காது...' என உதவியாளருடன் மும்பைக்குச் செல்ல விமான டிக்கெட் போட்டிருந்த பார்த்திபன்... டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு... 25 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தோடு வாக்களித்தார். சிலர் பாண்டவர் அணிக்கு ஆதரவாக ஓட்டுச் சீட்டை மொத்தமாக கொண்டுவந்து போட முயன்றதாக ஸ்ரீகாந்த் தகராறு செய்தார். ‘
"மைக்'’மோகன் ஓட்டை போன தேர்தலின் போது யாரோ கள்ள ஓட்டாக போட்டது போலவே... இந்த முறையும் போட்டுவிட்டதால்... மோகன் சத்தம்போட்டுவிட்டுப் போனார். ‘"எந்த அணிக்கு ஓட்டுப்போட்டீங்க?' என மீடியா கேட்டதற்கு "அதுல ஒரு குத்து... இதுல ஒரு குத்து' என காமெடியாக சொன்னார் சிவகார்த்திகேயன். சிவகங்கையிலிருந்து கிளம்பி வந்த பாண்டவர் அணி ஆதரவாளர் கொல்லங்குடி கருப்பாயிக்கு "ஓட்டு இல்லை' எனச் சொன்னதால் அதிர்ச்சியானார். "நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம், அரசாங்கம்... இப்படி எல்லா தரப்புலயும் விஷால் மேல அதிருப்தி நிலவுது' என சங்கீதா சொன்னார். "பாண்டவர் அணியில் நாசருக்கு மரியாதை இல்லை' என சங்கரதாஸ் அணி துணைத் தலைவர் வேட்பாளர் குட்டி பத்மினி சொன்னார்.
வெயில் கொடுமை தாங்காமல் சில மூத்த நாடக நடிகர்கள் மயங்கினார்கள். "தேர்தல் வரைக்கும் சண்டை போடலாம்... தேர்தல் முடிஞ்சதும் ஒண்ணாகிரணும்' என அட்வைஸ் செய்தார் அம்பிகா. விஜய் ஓட்டளித்துவிட்டு வந்தபோது... அவரை பாதுகாக்கும் பொருட்டு போலீஸார்... நடிகர் சங்க உறுப்பினர்களை தள்ளியதால்... சலசலப்பு ஏற்பட்டது. பாண்டவர் அணி கும்பலாக பூத்திற்குள் போகும்போதெல்லாம் சங்கரதாஸ் அணி சவுண்ட் விடுவது, சங்கரதாஸ் அணி அப்படி போகும்போதெல்லாம் பாண்டவர் அணி சவுண்ட் விடுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
சிறுசிறு சலசலப்புகளோடு தேர்தல் முடிந்ததும்... வாக்குப்பெட்டிகள் சென்னை ஸ்டெர்லிங் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
கோர்ட் உத்தரவிற்குப்பின் ஓட்டுக்கள் எண்ணப்படவிருக்கிறது.
ஓட்டளித்துவிட்டு வந்த விஜயகுமார்... பழைய கோரிக்கை ஒன்றை... மீண்டும் கிளப்பினார்.
அதாவது... தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழி நட்சத்திரங்களும் உறுப்பினராகக் கொண்டு தென்னிந்திய திரைப்பட நடிகர்சங்கம் தொடங்கப்பட்டது. இதுபோலத்தான் மற்ற திரைத்துறை சங்கங்களும் தென்னிந்திய அளவிலான சங்கமாக தொடங்கப்பட்டது. காலப்போக்கில் ஒவ்வொரு மொழி சினிமாக்காரர்களும் தனித்தனிச் சங்கம் வைத்துக்கொண்டார்கள். மூவி ஆர்டிஸ்ட் அஸோஸியேஷன் என தெலுங்கு நடிகர்சங்கமும், அஸோஸியேஷன் ஆப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் மலையாள நடிகர்சங்கமும், ஃபிலிம் ஆர்டிஸ் அஸோஸி யேஷன் என்ற பெயரில் கன்னட நடிகர் சங்கமும் இருக்கிறது.
நெய்வேலியில் கலையுலக காவிரி போராட்டம் நடந்த சமயத்தில்... நடிகர்சங்கம் சரியான ஒத்துழைப்பு தராததாக குற்றம் சுமத்திய பாரதிராஜா "தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம்' என்று பெயர் மாற்றக் கோரினார். அப் போதிலிருந்து இந்த பெயர் மாற்ற பிரச்சினை அவ்வப்போது பேசப்பட்டு வந்தது. பாரதிராஜா உள்ளிட்ட டைரக்டர்களின் முயற்சியால் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்பது, "தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்' என பெயர் மாற்றப்பட்டது. அதுபோல பெயர் மாற்ற கோரிக்கையை இப்போதும் எழுப்பினார் விஜயகுமார். "தமிழ்த்தாய் நடிகர்சங்கம்' என பெயர் வைக்க கோரிக்கை வைத்தார். தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்கிற பெயர் கோரிக்கை வரும்போதெல்லாம் பிரபல நடிகர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள். கமல்கூட இதை ஆதரித்தது இல்லை. ஆனால் இப்போது... பெயர் மாற்ற கோரிக்கைக்கு ஆதரவளித் துள்ளார். நாசரும்... "சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இதை பரிசீலிப்போம்' எனச் சொல்லியுள்ளார்.
தேர்தல் முடிந்துவிட்டாலும்... ஒருவிஷயம் மிக பரபரப்பாக எதிர்நோக்கப்படுகிறது.
தேர்தலை பதிவாளர் ரத்து செய்ததை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது தேர்தலை எப்படியாவது தள்ளிவைக்க ஐசரி கணேஷ் முயன்றதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளிப்படையாக தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.
""நடிகர் சங்க தேர்தலை இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஐசரி கணேஷ் சார்பில் அனந்தராமன் என்பவர் என்னை அணுகினார். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அனந்தராமன் எனக்குத் தெரிந்தவராக இருந்தாலும், நீதிபரிபாலனத்தில் யாரும் தலையிடக் கூடாது. அவர்கள் இருவரும் செய்தது கடும் குற்றம். நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்'' எனத் தெரிவித்ததுடன்... ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகிய இருவருக்கும் எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவு செய்துள்ளார். நான்கு வாரத்திற்குள் இருவரும் விளக்கம் அளிக்கவும் உத்தர விட்டுள்ளார்.
""நடிகர்சங்க பை-லா விதி எண் 14-ன்படி... நடிகர் சங்க தேர்தலை முடக்க நினைக்கும் சங்க உறுப் பினர்களின் சதி நிரூபிக்கப்பட்டால்... சங்க உறுப்பினர் தகுதியை இழந்துவிடுவார்கள். நீதிபதியே ஐசரிகணேஷ் மீது தேர்தலை நிறுத்த முயற்சித்த அவமதிப்பு வழக்கு பதிவு செய் திருப்பதால்... இந்த வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறோம். நீதிமன்றத்தில் ஐசரி கணேஷின் குற்றம் நிரூபணமானால்... நடிகர் சங்க உறுப்பினராக அவர் நீடிக்க முடியாது'' என நம்மிடம் தெரிவித்தார் சீனியர் நிர்வாகி ஒருவர்.
பதவியை சேவைக்கான வாய்ப்பாக கருதினால் இத்தனை பரபரப்புகள் ஏற் பட்டிருக்காது. பதவியை கௌரவமாக... அந்தஸ்தாக... தனிப்பட்ட ஈகோ இஷ்யூவாக கருதுவதால்... இத்தனை பரபரப்புகள் ஏற் பட்டிருக்கிறது.
-ஆர்.டி.எ(க்)ஸ்