சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் முதலீடு செய்து... வசூலை பங்குபோட்டுக்கொள்ளும் பங்காளிகள்.
அதாவது.... ஒரு தயாரிப்பாளர் பணம் போட்டு படத்தை தயாரிப்பார். அந்தப் படத்தின் ஏரியா உரிமையை முன்பணம் கட்டி விநியோகஸ்தர் வாங்குவார். செல்வாக்கான ஹீரோ... படம் ஹிட்டாகும்... என நம்பிக்கை ஏற்பட்டால்... விநியோகஸ்தரிடம் முன்பணம் கொடுத்து தன்னுடைய தியேட்டரில் படத்தை வெளியிடுவார் தியேட்டர் உரிமையாளர்.
படம் எதிர்பார்த்த அளவு வசூலைத் தராவிட்டால்... தியேட்டர்காரர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையைக் கேட்டு விநியோகஸ்தரை நெருக்குவார். விநியோகஸ்தரோ தயாரிப்பாளரை நெருக்குவார். குறைந்தபட்சம் ஆறுமாதங்களில் ஏதோ ஒருவகையில் இந்த நஷ்டங்கள் சரிசெய்யப்படும். நஷ்டம் தயாரிப்பாளர் தலையில் விழும். சரியான படத்தை தயார் செய்யாதது அவர் பொறுப்புதானே.
படம் நன்றாக ஓடி வசூல் செய்தால்.. எப்படி பிரிக்கப்படும்?
ரசிகனிடமிருந்து பெறும் நூறு ரூபாயில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தியேட்டர்காரர் எடுத்துக்கொண்டு, மீதத்தை விநியோகஸ்தரிடம் தருவார். விநியோகஸ்தர் அதில் தனக்
சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் முதலீடு செய்து... வசூலை பங்குபோட்டுக்கொள்ளும் பங்காளிகள்.
அதாவது.... ஒரு தயாரிப்பாளர் பணம் போட்டு படத்தை தயாரிப்பார். அந்தப் படத்தின் ஏரியா உரிமையை முன்பணம் கட்டி விநியோகஸ்தர் வாங்குவார். செல்வாக்கான ஹீரோ... படம் ஹிட்டாகும்... என நம்பிக்கை ஏற்பட்டால்... விநியோகஸ்தரிடம் முன்பணம் கொடுத்து தன்னுடைய தியேட்டரில் படத்தை வெளியிடுவார் தியேட்டர் உரிமையாளர்.
படம் எதிர்பார்த்த அளவு வசூலைத் தராவிட்டால்... தியேட்டர்காரர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையைக் கேட்டு விநியோகஸ்தரை நெருக்குவார். விநியோகஸ்தரோ தயாரிப்பாளரை நெருக்குவார். குறைந்தபட்சம் ஆறுமாதங்களில் ஏதோ ஒருவகையில் இந்த நஷ்டங்கள் சரிசெய்யப்படும். நஷ்டம் தயாரிப்பாளர் தலையில் விழும். சரியான படத்தை தயார் செய்யாதது அவர் பொறுப்புதானே.
படம் நன்றாக ஓடி வசூல் செய்தால்.. எப்படி பிரிக்கப்படும்?
ரசிகனிடமிருந்து பெறும் நூறு ரூபாயில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தியேட்டர்காரர் எடுத்துக்கொண்டு, மீதத்தை விநியோகஸ்தரிடம் தருவார். விநியோகஸ்தர் அதில் தனக்கான சதவிகித பணத்தை எடுத்துக்கொண்டு... மீதத்தை தயாரிப்பாளரிடம் தருவார். தயாரிப்பாளர் தனக்கான லாபத்தை எடுத்துக்கொண்டு... மீதத்தை படத்திற்காக வாங்கிய கடனை அடைப்பார்.
இதுதான் சினிமா வர்த்தகத்தில் பொதுவான நடைமுறை.
இந்நிலையில் தியேட்டர்காரர்கள் புதிய பங்கு சதவிகிதத்தை அறிவித்ததால்... பங்காளிச் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சம்மேளனம், திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையிலான தமிழ்நாடு தியேட்டர் ஓனர்ஸ் அண்ட் மல்டிபிளக்ஸ் அஸோஸியேஷன்... என மூன்று அமைப்புகள் செயல்படுகின்றன.
திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையிலான அமைப்பு, ""இனியும் நாங்கள் தொடர் நஷ்டத்தை சமாளிக்க முடியாது'' என்று சொல்லி புதிய பங்கு சதவிகிதத்தை அறிவித்திருக்கிறது.
ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு முதல்வார வசூலில் "ஏ' சென்டர்களில் 60 சதவிகிதமும், மற்ற சென்டர்களில் 65 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்கு தரப்படும். இரண்டாவது வாரத்தில் "ஏ' சென்டரில் 55 சதவிகிதமும், மற்ற சென்டர்களில் 60 சதவிகிதமும் தரப்படும்.
சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களுக்கு முதல்வாரத்தில் "ஏ' சென்டரில் 55 சதவிகிதமும், மற்ற சென்டர்களில் 60 சதவிகிதமும், இரண்டாவது வாரத்தில் "ஏ' சென்டரில் 50 சதவிகிதமும், மற்ற சென்டர்களில் 55 சதவிகிதமும் வழங்கப்படும்.
மற்ற நடிகர்களின் பட வசூலில் முதல்வாரத்தில் எல்லா சென்டர்களிலும் 50 சதவிகிதமும், இரண்டாவது வாரத்தில் 45 சதவிகிதமும் வழங்கப்படும்.
-இதுதான் புதிய பங்கு சதவிகிதம். பழைய விகிதத்திலிருந்து சுமார் பத்து முதல் பதினைந்து சதவிகிதத்தை குறைத்திருக்கிறார்கள்.
""இந்த புதிய விகிதாச்சார முறை அமலுக்கு வந்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்துபோகும். இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு சரியான தலைமை இல்லாத நேரத்தில்... அரசு அமைத்த குழு தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் நேரத்தில் வந்திருக்கும் இந்த அறிவிப்பின்படி தியேட்டர்காரர்கள் செயல்பட்டால் அவர்களை எதிர்த்து தயாரிப்பாளர்கள் போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்'' என கண்டனம் தெரிவித்திருக்கிறார் டைரக்டரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா.
""திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையிலான தியேட்டர் சங்கத்தின் இந்த புதிய பங்கு விகிதத்தை மற்ற தியேட்டர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளுமா? எதனால்... திடீரென இந்த புதிய நடைமுறை?'' என த.தி.உ.சங்க இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் இதுபற்றி கேட்டோம்.
""தொடர் நஷ்டத்திலிருந்து தியேட்டர் உரிமையாளர்கள் தங்களை மீட்டெடுக்கவே இந்த புதிய நடைமுறை என்பதால்... எல்லா தியேட்டர் அமைப்புகளும் இதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்யும். இந்த ஆண்டில் வெளியான "பேட்ட', "விஸ்வாசம்', "நட்பேதுணை', "காஞ்சனா-3', "தடம்' மற்றும் ஹாலிவுட் படமான "அவெஞ்சர்ஸ்' உட்பட சில படங்கள்தான் தியேட்டரில் நல்ல வசூல் கண்டது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வசூலைத் தரவில்லை. "எண்ட் யூஸர்' எனப்படும் ரசிகர்களை நேரடியாக சந்திக்கிறவர்கள் தியேட்டர்காரர்கள் மட்டும்தான். ரசிகனிடமிருந்து நேரடியாக ரூபாயை வாங்குவது தியேட்டர்காரர்கள்தான். அவன் தருகிற 100 ரூபாயில் 20 ரூபாயை தியேட்டர்காரர் எடுத்துக்கொண்டு, 80 ரூபாயை விநியோகஸ்தருக்கு தருகிறார். அதில் 50 அல்லது 60 ரூபாயை தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர் தருகிறார்.
சமீபத்தில் வெளியான "அவெஞ்சர்ஸ்' படம் தமிழ்நாட்டில் 11 கோடி ரூபாயை வசூலித்தது. அதில் அமெரிக்க தயாரிப்பாளருக்கான ஷேர் ஏழு கோடி ரூபாய்... அமெரிக்காவுக்கு போயிருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளியான "மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு... மிகுந்த எதிர்பார்ப்பில் முன் பணம் அதிகமாக கொடுத்து படம் போட்ட தியேட்டர்காரர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. "வந்தா ராஜாவாத்தான் வருவேன்', "சூப்பர் டீலக்ஸ்' படங்களும் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை.
தியேட்டர்காரர்கள் கொடுத்த அந்த அட்வான்ஸ் தொகை ஆறேழு மாதங்களுக்குப் பிறகுதான் திரும்பவரும். அதுவரை அந்தப் பணத்திற்கு வட்டி போட்டுப் பார்த்தால் நஷ்டம்தான் வந்துசேரும். தயாரிப்பாளர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரிக்க வேண்டும். ரஜினியின் "காலா' நஷ்டம். ஆனால் கொஞ்சமாவது கதையம்சம் இருந்ததால் "பேட்ட' வெற்றி பெற்றது. அஜித்தின் "விவேகம்' ஓடவில்லை. ஆனா குடும்ப சென்ட்டிமெண்ட் கதை இருந்ததால் "விஸ்வாசம்' வெற்றிப்படமானது. கார்த்தியின் "கடைக்குட்டி சிங்கம்' வெற்றி பெற்றது.
ஆனால் நல்ல கதையில்லாததால் "தேவ்' படம் நஷ்டம் ஏற்படுத்தியது. அதனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிப்பதே எல்லாத் தரப்பையும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றும்'' என்றார் திருச்சி ஸ்ரீதர்.
-இரா.த.சக்திவேல்