தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத படைப்பாளி டைரக்டர் மகேந்திரன்.
கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், நடிகர், சினிமா விமர்சக பத்திரிகையாளர், நாடக கதாசிரியர்... இப்படி பன்முகத் தன்மை கொண்ட டைரக்டர் மகேந்திரன்... உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
எம்.ஜி.ஆரைக் கவர்ந்தவர்!
ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார் எம்.ஜி.ஆர். மாணவர்கள் சார்பில் பேசிய மாணவர் அலெக்ஸாண்டர்... தமிழ் சினிமா கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தை கடுமையாக விமர்சித்தார். "குதிரை ஓட்டிக்கொண்டு போகிறவனால் எப்படி பாட்டுப்பாட முடியும்?' எனவும் கேள்வியெழுப்பினார். அந்த மாணவரின் பேச்சு.. எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. "நீங்கள் விரும்பினால் உங்கள் படிப்பு முடிந்தபிறகு சென்னை வந்து என்னை சந்திக்கவும்' எனச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அதுபோலவே சென்னை வந்து சந்தித்தார். அலெக்ஸாண்டர் என்கிற அந்த மாணவர்தான்... மகேந்திரன். கல்கியின் வரலாற்று புனைவு புதினமான "பொன்னியின் செல்வன்' நாவலை சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதை அமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.
பல்வேறு காரணங்களால் "பொன்னியின் செல்வன்' எடுக்கப்படவில்லை என்றாலும்கூட மகேந்திரனின் திறமை எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது.
சிவாஜியைக் கவர்ந்தவர்!
"துக்ளக்' பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டே... நாடகங்களுக்கான கதைகளை எழுதினார் மகேந்திரன். அவரின் கதை ஒன்று "நாம் மூவர்' என்கிற திரைப்படமானது. "இரண்டில் ஒன்று' என்கிற கதை நடிகர் செந் தாமரை நடிக்க வெற்றிகரமான நாடகமாக தமிழகமெங்கும் நடத்தப் பட்டு வந்தது. இந்த நாடகத்திற்கு பாவலர் சகோதரர்கள் இசை யமைத்தார்கள். அப்படித்தான் இளையராஜா- மகேந்திரன் நட்பு ஏற்பட்டது. இந்த நாடகத்தைப் பார்த்த சிவாஜி, மகேந்திரனின் வசனம் மற்றும் கதை அமைப்பில் லயித்து... தனது சொந்த பேனரில் இந்தக் கதையை "தங்கப்பதக்கம்' படமாக எடுத்து நடித்தார். பி.மாதவன் இயக்கினார். "கதை-வசனம்- மகேந்திரன்' என்கிற பெயரை சினிமா உலகில் பரப்பியது "தங்கப்பதக்கம்'. மகேந்திரனின் திறமையில் லயித்த சிவாஜி... தனது சில படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றச் செய்தார்.
ரஜினியக் கவர்ந்தவர்!
தான் ஒரு கதாசிரிய ராக இருந்தபோதும்... உமா சந்திரன் எழுதிய "முள் ளும் மலரும்' தொடர் கதையை வாங்கி... திரைக்கதை அமைத்து "முள் ளும் மலரும்' படத்தை இயக்கினார் மகேந்திரன்.
ரஜினிக்குள் இருக்கும் ஆக்ஷன் ஹீரோவை... கதா சிரியர் கலைஞானம் கண்ட அதே (பைரவி) காலகட் டத்தில்.. ரஜினிக்குள் இருக்கும் குணச்சித் திர நடிகனை தனது படைப்புக் கண் களால் பார்த்தார் மகேந்திரன். எல்லோரும் விரும்பும் நடிகனாக அதில் ரஜினியை மறு அறிமுகம் செய்தார் மகேந்திரன்.
மகேந்திரனின் திறமையில் லயித்த ரஜினி... சினிமா குறித்து சில மணித்துளிகள் பேசுவதானாலும்... அதில் மகேந்திரனைப் பற்றி குறிப்பிடா மல் இருக்க மாட்டார். தன்னை அறிமுகம் செய்த குரு கே.பாலசந்தரிடமே... தனக்குப் பிடித்த இயக்குநராக மகேந்திரனை குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி.
கமலைக் கவர்ந்தவர்!
கற்றோரை கற்றோரே காமுறுவர் போல்... மகேந்திரனின் நுட்பமான சினிமா அறிவின்மீது மீது கமலும், கமலின் நுட்பமான சினிமா அறிவின் மீது மகேந்திரனும் மதிப்புக் கொண்டவர்கள். "முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியை நடிக்கவைத்ததிலும், பாலுமகேந்திராவை ஒளிப்பதிவு செய்ய வைத்ததிலும் கமலுக்கே பெரும்பங்கு. வித்தியாசமான பாணியில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தினை... தயாரிப்பாளர் வேணு செட்டியாருக்குப் பிடிக்கவில்லை. சில காட்சிகள் எடுக்கப்படவேண்டி இருந்தபோதே... "எடுத்தது போதும். படத்தை ரிலீஸ் பண்ணு' என தயாரிப்பாளர் சொல்லிவிட... மகேந்திரனின் மனக் கவலையைப் புரிந்து... தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கி... தன் செலவில் விடுபட்ட காட்சிகளை எடுக்க உதவினார் கமல்.
ரசிகர்களைக் கவர்ந்தவர்!
ஒரு துறையின் மீதும்... அதன் போக்கின் மீதும் வெறுப்பு வந்தால்... அதிலிருந்து ஒதுங்கிவிடுவது பெரும்பாலானவர்களின் குணம். ஆனால்... "சினிமாவை அதன் போக்கில் எடுக்காமல்... படைப்பாளியின் போக்கில் எடுப்பேன்...' என தீவிரமாக இறங்கியவர் மகேந்திரன். பேச்சின் மூலம் கதைச் சூழலை பார்வையாள னுக்கு விளக்கும் உத்திகளை ஒதுக்கிவைத்துவிட்டு... காட்சியின் மூலம் கதைச் சூழலை உணர்ந்து கொள்ள வைத்தார். இப்போது "தெறி' படத்தில் வழக்கமான வில்ல னாக நடித்துபோல.... அப்போது "தையல்காரன்' உட்பட பல படங்களுக்கு மசாலா கதைகளை எழுதியிருந்தாலும்... முழுமையான தனது படைப்புகளில் தனது முத்திரையை அவர் பதிக்கத்தவறவில்லை.
அவரின் படைப்புகள் ரசிகர்களுக்கு எதிர்பாராத கோணத்திலிருந்து குதூகலத்தைக் கொடுத்தது. அத னால் அவரை கொண்டாடினார் கள் ரசிகர்கள்... ’"உதிரிப்பூக்களை'யும், "முள்ளும் மலரும்', "நண்டு'வையும் பார்க்கும் போதெல்லாம் அவரை கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.
-இரா.த.சக்திவேல்