வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பேசிய வீடியோ ஒன்று பரபரப்பாகப் பகிரப்பட்டது.
நடிகர்சங்க பொருளாளர் என்கிற முறையில்... நலிந்த கலைஞர்களுக்கு உதவி கேட்டும், நடிகர் சங்க கட்டிடம் சம்பந்தமாக ஆலோசனை கேட்டும் கார்த்தி வைத்த வேண்டுகோளை... கேட்டதற்கு அதிகமாகவே செய்திருக்கிறார் ஏ.சி.சண்முகம். அதனால் அவரின் உதவிகளைப் பாராட்டிப் பேசியிருந்தார் கார்த்தி.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது பரப்ப...
இது சம்பந்தமாக கார்த்தி யிடம் பலரும் "அவருக்காக பிரச்சாரம் செய்றீங்களா?'’என விசாரிக்கவே... அதை மறுத்ததோடு... "அரசியலில் எனது ஈடுபாடு என்பது ஒரு வாக்காளன் என்கிற அளவில் மட்டுமே'’என விளக்கமளித்திருக்கிறார் கார்த்தி.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் 80-களில் கதாநாயகியாக பிரபலமானவர் சுமலதா. கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகினார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த அம்பரீஷ் சில மாதங்களுக்கு முன் மறைந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுமலதா சீட் கேட்டும் மறுக்கப்பட்ட நிலையில்... தன் கணவரின் தனிப்பட்ட மற்றும் சாதி செல்வாக்கை நம்பி சுயேட்சையாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் இந்தத் தொகுதியை தனது கூட்டணி கட்சியான ஜனதாதளத்திற்கு ஒதுக்கியது. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார்.
"கே.ஜி.எஃப்'’திரைப்படம் மூலம் கன்னட -தெலுங்கு -தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்ட கன்னட ஹீரோ யஷ் மற்றும் இன்னொரு நடிகரான தர்ஷன் ஆகிய இருவரும் சுமலதாவுக்காக பிரச்சாரம் செய்துவருகிறார் கள்.
"சுமலதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கும் எருதுகள்'’என இந்த நடிகர் கள் சொல்லி வருகிறார்கள். இவர்களால் தனது மகனின் வெற்றி பாதிக்குமோ... என கோபமான குமாரசாமி... “"அந்த இரண்டு எருதுகளும் நிலத்தை உழுவதற்கு பயன்படாது. பயிர்களைத்தான் அழிக்கும். அந்த இரண்டு நடிகர்களும் திருடர்கள்'’என விமர்சித்துள்ளார்.
"முரட்டுக்காளை'’படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சுமலதா. அதோடு... அம்பரிஷுக்கு நெருங்கிய நண்பரான ரஜினி... சுமலதாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக ஒரு தகவல் பரபரக்க... "ரஜினி பிரச்சாரம் செய்ய வரமாட்டார். நாங்களும் அவரை அழைக்கவில்லை'’என சுமலதா தெரிவித்துள்ளார்.
ஓவியாவின் "பிக்பாஸ்'’பாப்புலாரிட்டியை ஓட்டாக்க பிக் பார்ட்டிகள்’ முயற்சி மேற்கொள்கிறதாம்.
"கட்சியில் சேரச் சொல்லியும் அழைப்பு வருது. கட்சியில சேர விருப்பமில்லேன்னா... பிரச்சாரத்துக்கு மட்டுமாவது வாங்கனு சொல்றாங்க. ஆனா.. ’எனக்கு இதுல விருப்பம் இல்லைனு சொல்லீட்டேன்'’என்கிறார் ஓவி.
தமிழில் விஜயகாந்த், அரவிந்த்சாமி உள்ளிட்டோருடன் நடித்து பிரபலமான இஷா கோபிகர், இந்தியில் நடித்த ஒரு கிளாமர் படத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவரின் பெயர்கள் வில்லங்கமான கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருந்தது.
அப்போது... அந்த படத்திற்கு எதிராக காங்கிரஸார் போராட்டம் நடத்தினார்கள். அந்த இஷா கோபிகர், பி.ஜே.பியில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.
காங்கிரஸிலும் லேட்டஸ்ட்டாக ஒரு நடிகை சங்கமமாகியிருக்கிறார்.
கமலுடன் "இந்தியன்'’ படத்தில் நடித்தவரும்... ராம்கோபால் வர்மாவின் ‘"ரங்கீலா'’ படம் மூலம் மிகவும் பிரபல மானவருமான நடிகை ஊர்மிளா... ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார். "இது தேர்தலுக்கான அரசியல் அல்ல... தீவிர அரசியல் பண்ணப் போகிறேன்'’என ஊர்மிளா சொன்னாலும் மும்பை வடக்குத் தொகுதியை கை நீட்டுகிறாராம் ஊர்மிளா. இதே தொகுதியை நடிகை நக்மாவும் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
-ஆர்.டி.எ(க்)ஸ்