பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கைக் கதையை வைத்து பாலிவுட்டில் தயாராகியிருக்கும் படம் "பி.எம்.நரேந்திர மோடி' ஓமங்குமார் இயக்கத்தில் மோடியாக நடித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோவும், அஜீத்தின் ‘"விவேகம்'’பட வில்லனும், தாயார் வழியில் கோயம்புத்தூர்க்காரருமான விவேக் ஓபராய்.

touringtalkiesஇதில் டீ விற்கும் சிறுவனாக இருந்து, டீ மாஸ்டராகி... பிரதமர் ஆனதுவரையிலான மோடியின் வாழ்க்கைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பெரிய செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள் ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சிலநாட்கள் முன்பாக... ஏப்ரல் 5-ஆம் தேதி "பி.எம்.நரேந்திர மோடி' படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில்... இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதோடு... "தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது' எனவும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கிறது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.

மோடியின் வாழ்க்கைக் கதைப் படத்திற்கு காங்கிரஸ் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?

""மோடி நல்லவரு. வல்லவரு... ஆல் இன் ஆல் அழகுராஜா என காட்டுவதில் பிரச்சினை இல்லை. ஆனா... மோடியின் அரசியல் வாழ்க்கையோடு... அந்தக் காலகட்ட அரசியல் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. குறிப்பாக அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி கால அடக்குமுறை உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றிருப்பதால்... காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது'' என்கிறார்கள் படக்குழு வட்டாரங்களில்.

Advertisment

ந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி, அவர் மகன் பாலகிருஷ்ணா நடித்த "என்.டி.ஆர்.கதாநாயகுடு' (என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கை) படமும், "என்.டி.ஆர். மகாநாயகுடு' (என்.டி.ஆரின் அரசியல் வாழ்க்கை) படமும் சமீபத்தில் வெளியாகியது. இது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

இந்நிலையில்... சர்ச்சை இயக்குநர் என பெயரெடுத்த ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் "லட்சுமி என்.டி.ஆர்.' இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக வந்த கல்லூரி ஆசிரியை சிவபார்வதி என்கிற லட்சுமி பார்வதிக்கும், என்.டி.ஆருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. என்.டி.ஆருக்குப் பிறகு அவரின் அரசியல் வாரிசாக லட்சுமி பார்வதி காய் நகர்த்திவந்த நிலையில்... என்.டி.ஆரிடமிருந்து லட்சுமி பார்வதியை பிரிக்க முயற்சிகள் மேற்கொண்டதோடு ஒரு கட்டத்தில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியையே கைப்பற்றி முதல்வரானார்... என்.டி.ஆரின் மருமகனான... இன்றைய தெலுங்குதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு... என அன்றைய தினம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Advertisment

இந்த சம்பவங்களின் பின்னணியில் கதை அமைத்து "லட்சுமி என்.டி.ஆர்.' படத்தை உருவாக்கியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

touingtalkies

சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை வைத்து போலீஸ் ஆபீஸர் விஜயகுமார் கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்த "கில்லிங் வீரப்பன்' படத்தை இயக்கியிருந்தார் ராம்கோபால் வர்மா. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்தவரும், தமிழில் "களத்தூர் கிராமம்' படத்தில் நாயகியாக நடித்தவருமான யாக்னா ஷெட்டி, லட்சுமி பார்வதியாகவும், பி.விஜயகுமார் என்.டி.ஆராகவும், ஸ்ரீதேஜ் சந்திரபாபு நாயுடுவாகவும் "லட்சுமி என்.டி.ஆர்.' படத்தில் நடித்திருக்கிறார்கள். வரும் 27-ஆம் தேதி இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதையமைப்பு சந்திரபாபு நாயுடுவை வில்லன் போல சித்தரிப்பதாக கோபமடைந்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சி... ""தேர்தல் நேரத்தில் "லட்சுமி என்.டி.ஆர்.' படம் வெளியானால் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது'' என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்ததுடன்... திரைப்படத் தணிக்கைக் குழுவிற்கும் கவன ஈர்ப்பு கடிதம் எழுதியுள்ளது தெலுங்கு தேசம் கட்சி.

இதுதவிர... நடிகர்- இயக்குநர்- தயாரிப்பாளரான போசானி கிருஷ்ண முரளி "முக்கிய மந்திரிகாரு மாட்ட தபப்ரு' என்கிற தெலுங்குப் படத்தை எடுத்துள்ளார். இந்த தலைப்பிற்கு... "முதலமைச்சர் அவர்களே... கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டீர்களே' என்பதாகும்.

இது ஆந்திர, தெலுங்கானா அரசியலை கேள்வி கேட்பதால்... தேர்தல் கமிஷனே தாமாக விளக்கம் கேட்டு போசானி கிருஷ்ண முரளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் ஆகியோருடன் மிக முக்கிய கதை நாயகி பாத்திரத்தில் மதுபாலா நடித்திருக்கும் படம் "அக்னி தேவ்'. இதன் ட்ரெய்லரில் சில நேரங்களில் ஜெயலலிதா போலவும், சில நேரங்களில் சசிகலா போலவும் ரசிகர்கள் நினைக்கத் தோன்றும் வகையில் மதுபாலாவின் கேரக்டர் இருப்பதை ட்ரெய்லர் வெளியான சமயத்திலேயே விரிவாகச் சொல்லியிருந்தோம். இந்தப் படத்தை தயாரித்தவரும், இயக்கியவர்களில் ஒருவருமான ஜான்பால் ராஜுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் இடையே ஏற்கனவே கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில்... இந்தப் படத்தை சமீபத்தில் "அக்னி தேவி' என பெயர் மாற்றி வெளியிட ஏற்பாடு செய்தார் ஜான்பால். ""சொன்னபடி கதையை எடுக்காததால் சில நாட்கள் நடித்ததுடன் இந்தப் படத்திலிருந்து நான் வெளியேறிவிட்டேன். ஆனால்... எனக்குப் பதிலாக டூப் போட்டும், என்னைப்போல யாரையோ வைத்து குரல் கொடுக்கவைத்தும், படத்தை எடுத்துள்ளார்கள்'' என காவல் துறையில் பாபி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில்... ‘படத்தின் உண்மைத் தன்மையை அறிய வக்கீல் ஒருவரை நியமித்த கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம்... அதுவரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

படம் வெளிவருவதற்கு முன்பே தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கும் இந்த திரைப்படங்கள் தேர்தல் நேரத்தில் வந்தால்... பரபரப்பாகத்தானிருக்கும்.

-இரா.த.சக்திவேல்