ஹீரோ யாரு?
சிவகார்த்திகேயன் நடிக்க, "இரும்புத்திரை' டைரக்டர் மித்ரன் இயக்கும் படத்திற்கு "ஹீரோ' என்கிற டைட்டிலை தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்திருக்கிறது. ஆனால்... "அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிக்க, "காக்கா முட்டை' பட வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என மல்டி லாங்குவேஜில் தயாராகும் படத்திற்கு ஏற்கனவே ‘"ஹீரோ' என்கிற டைட்டிலை அனுமதித்திருந்தது தயாரிப்பாளர் சங்கம்.
அந்த டைட்டில் உரிமை காலாவதியாக இருந்த நேரத்தில்... மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர். இதன் உரிமை, வருகிற ஜூன் மாதம்வரை உள்ள நிலையில்... சிவகார்த்திகேயன் படத்திற்கு "ஹீரோ' டைட்டிலை சங்கம் தந்துவிட்டது. இதனால் "நாங்கதான் ஹீரோ' என இருதரப்பும் உரிமைப்போரில் இறங்கியுள்ளது.
(பொள்ளாச்சி சம்பவத்தில் அக்கிரமக்காரர்களை அடித்து, உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தவர்கள்தான் ரியல் ஹீரோ!)
ஹீரோயின் யாரு?
ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை இணையத்தில் திரைப்பட தொடராக வெளியிடுவதற்காக எடுத்து வருகிறார் டைரக் டர் கௌதம் வாசுதேவ் மேனன். ஜெ.வாக நடிப்பவர் ரம்யா கிருஷ்ணன். ஜெ.வின் அரசியல் அதிரடி... எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் கிளம்பிய போது... வாகனத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதிலிருந்து தொடங்கியது. கடந்தவாரம் சென்னை மெமோரியல் ஹாலில் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துகிற காட்சிகளும், அதன் தொடர்புக் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
(பொள்ளாச்சி சம்பவத்தில், தான் காரில் கடத்தப்பட்டதும்... விபரீதத்தை உணர்ந்து கூச்சலிட்டு தப்பியதுடன்... அதை தன் வீட்டில் சொல்லி, நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பல ஆண்டுகளாக நடந்த கொடுமை வெளியேவரக் காரணமாக இருந்த அந்த மாணவிதான் ரியல் ஹீரோயின்.)
வில்லன் யாரு?
கடந்த சில ஆண்டு களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம்... மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த "தனி ஒருவன்' திரைப்படம். இந்தப் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது... மென்மை யான கேரக்டர்களில் நடித்துவந்த அரவிந்த்சாமி வில்லனாக நடித்தது தான். இப்போது ஜெயம்ரவி நடிப்பில் "தனி ஒருவன்-2' எடுக்க... கதையை எழுதி முடித்திருக்கும் மோகன் ராஜா, இந்தப் படத்திலும் ஒரு பெரிய நடிகரை வில்லனாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதற்காக மம்முட்டியிடம் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
(பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகார் கொடுத்தும், அலட்சியமாக தாமதித்ததோடு, புகார் கொடுத்தவரையே புகாருக்கு ஆளானவர்களிடம் காட்டிக் கொடுத்த... அரசியல் செல்வாக்கு பெற்றவர்களை தப்பிக்க வைக்க முயற்சி எடுத்த... போலீஸ் அதிகாரிகள்தான்.)
காமெடியன் யாரு?
வடிவேலு காமெடி நாயக னாக நடித்த... டைரக்டர் ஷங்கர் தயாரித்த, சிம்புதேவன் இயக்கிய "இம்சை அரசன்' பெரும் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. ஆனால் ‘படப்பிடிப்பிற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறார் வடிவேலு. ""அவர் இந்தப் படத்தை முடித்துத் தரவேண்டும். அல்லது செட் போட்டு வீணான செலவு உட்பட 9 கோடி ரூபாயை அவரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும்'' என ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
நடித்துத் தருவதாக சம்மதித்த வடிவேலு, மீண்டும் கதையில் சில மாற்றங்களைச் சொல்லி... நடிக்க மறுத்ததால்... வடிவேலு புதிய படங்களில் நடிக்க, சங்கம் தடை போட்டது. ஆனால்.. சமீபத்தில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க "பேய் மாமா' என்கிற சிரிப்பு த்ரில்லர் படம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்... ஷக்தியைக் கூப்பிட்டு சங்கம் ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டதால்... "பேய் மாமா' பட வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்காம்.
இதற்கிடையே "இம்சை அரசனாக' காமெடியில் கலக்கும் யோகிபாபுவை நடிக்க வைக்கப் போவதாக ஒரு தகவல் கிளம்ப... "வடிவேலுவோட பாடி லாங்வேஜுக்குத்தான் கதை செட்டாகும்' என்கிறது படக்குழு.
(பொள்ளாச்சி சம்பவத்தில் லோக்கல் போலீஸ் விசாரணை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை, சி.பி.ஐ. விசாரணை என அடிக்கடி ஸ்டேண்ட்டை மாற்றி... பேஸ்மெண்ட் வீக்கு, பில்டிங் ஸ்ட்ராங்கு எனச் சொல்லி மறைக்கப் பார்க்கும் ஆட்சியாளர்கள்தான் நிஜ காமெடியன்கள்)
-ஆர்.டி.எ(க்)ஸ்