குசலாம்பாள் என்பதுதான் அவரின் பெயர். குலதெய்வத்தின் பெயர் மற்றும் பாட்டியின் பெய்ர் என்பதால் அவருக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
1944-ல் பி.யூ.சின்னப்பா-கண்ணாம்பா மகளாக குழந்தை நட்சத்திரமாக "மகா மாயா'’படத்தில் அறிமுகமானார்.
பிறகு நடனத்திலும், படிப்பிலும் கவனம் செலுத்திவந்த குசலாம்பாள்... ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவந்த ‘"சந்திரலேகா'’படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றார்.
சந்திரலேகா’ நாயகியான தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் உறவினர்தான் குசலாம்பாள்.
வாசனின் கண்களில் பட்டு அவர் தயாரித்த "அவ்வையார்'’படத்தில் இளம் வயது அவ்வையாக நடித்தார் குசலாம்பாள். அவருடைய பெயரும் டி.டி.குசலகுமாரி (தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி) என மாற்றப்பட்டது.
எம்.ஜி.ஆரின் "மதுரைவீரன்', சிவாஜியின் "பராசக்தி', ஜெமினியின் "கொஞ்சும் சலங்கை'’ உட்பட பல படங்களில் குசலகுமாரியின் நடனம் இடம்பெற்றது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யில் சிவாஜியை விரட்டி விரட்டி வம்புபண்ணி காதலிக்கும் ‘சொக்கி’ கேரக்டரில் அசத்தியிருந்தார் குசலகுமாரி.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டி.ஆர், மலையாள சூப்பர்ஸ்டார் பிரேம்நசீர், கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் ஆகியோரின் படங்களில் நடித்த பெருமையும் குசலகுமாரிக்கு உண்டு..
குசலகுமாரி மிகவும் அழகான தோற்றத்துடன் இருந்ததால் லக்ஸ் சோப் நிறுவன விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடிவந்தது.
குழந்தை நட்சத்திரமாக, நாட்டிய நடிகையாக, கதாநாயகியாக, கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக... 35 ஆண்டுகள் கலைப்பயணம் நடத்தியவர் குசலகுமாரி.
குசலகுமாரியின் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக பதிவு செய்யும் விருப்பத்தோடு கடந்த டிசம்பரில் அவரை நாம் சந்தித்தபோது... 85 வயது ஆனபோதிலும் மிக உற்சாகமாக தன் வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து நமக்கு பேட்டியளித்தார்.
குசலகுமாரியின் கடைசி பேட்டியாக நமக்கு அவர் அளித்த பேட்டி அமைந்துவிட்டது.
""இசைக் கலையையும், நாட்டியக் கலையையும் வளர்த்த வம்சம் எங்க வம்சம். கோவில்களில் சம்பிரதாயங்களில் எங்களுக்கு முதல் மரியாதை தரப்படும். ராஜ மானியம் எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. எனக்கு மூணு வயசு இருக்கும்போதே சென்னைல குடியேறிட்டோம். என் தாயார் தஞ்சாவூர் தமயந்தி, கே.சுப்பிரமணியம் டைரக்ஷன் பண்ணிய ‘"விகடயோகி'’ படம் உட்பட சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. டி.ஆர்.ராஜகுமாரி ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுல வந்துதான் மேக்-அப்பை கலைப்பாங்க. அப்ப நான் அவங்களையே பார்த்திட்டிருப்பேன். அதுதான் எனக்கும் சினிமா மேல ஆர்வத்தை தூண்டிச்சு.
"வைஜெயந்திமாலா போல நாட்டியத் திறமையும், நடிப்புத் திறமையும் கொண்ட உன்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த விரும்புறோம்'னு அன்றைய பாலிவுட் ஜாம்பவான்களான கிஷோர்குமாரும், ராஜேந்திரகுமாரும் என் வீட்டிற்கே வந்து பேசினாங்க. இதையடுத்து உருது மொழியையும் கத்துக்கிட்டேன்.
ஆனால்... நாட்டிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவேண்டி வந்ததால் பாலிவுட்டில் அறிமுகமாகவில்லை. இதே காரணத்திற்காகத்தான் "மலைக்கள்ளன்'’படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவந்த வாய்ப்பையும் கைவிடவேண்டி வந்தது. நான் மலையாளத்துல பிரேம்நசீர் கூட நடிச்ச "சீத்தா'’படம் 200 நாட்கள் ஓடிச்சு. ‘"மரியக்குட்டி'’ படம் ஜனாதிபதி விருது வாங்குச்சு. இதனால் கேரளாவுலயும் நான் புகழ்பெற்றவளா இருந்தேன். என்.டி.ஆர்.கூட நடிச்சதால... ஆந்திர மக்கள் என்னை "குசலகுமாரிகாரு'னு கொண்டாடினாங்க.
1977-ல் ‘"நந்தா என் நிலா'’ படம்தான் நான் கடைசியா நடிச்சது. ஆனா தொடர்ந்து நாட்டியப் பணிகளைச் செய்திட்டிருந்தேன். கலைப்பணிக்கு இடையூறு வரக்கூடாதுனுதான் நான் திருமணமே செஞ்சுக்கல. குழந்தை நட்சத்திரமா இருந்து நடிகையா நடிச்ச முதல் படம் ‘"அவ்வையார்'ல ஆன்மிக நாட்டம்கொண்டு திருமணமே வேண்டாம்னு கடவுள்கிட்ட வேண்டுவேன். கடவுள் என்னை வயதானவளா மாற்றிவிடுவார். அந்தப் படத்துல நான் பேசின டயலாக் மாதிரியே... என் வாழ்க்கைல கல்யாணமே இல்லாமப் போச்சு.
புகழும், பொருளும் சேர்ந்தாலும்... பொருள் கையைவிட்டுப் போனதால் வாழ்க்கை நடத்த கஷ்டம்.
என் தம்பி கமலசேகர் குடும்பம்தான் என்னை கவனிச்சுக்கிறாங்க. கலைஞர் எனக்கு நந்தனம் ஹவுஸிங் போர்டுல குறைஞ்ச வாடகைக்கு வீடு ஒதுக்கிக் கொடுத்தார். இப்ப நாம பேசிக்கிட்டிருக்கமே... இந்த வீடுதான் அது. ஜெயலலிதாம்மா என் பேர்ல ஐந்துலட்சரூபாய் டெபாஸிட் பண்ணியிருக்காங்க. அதுல மாதாமாதம் கிடைக்கிற வட்டிப்பணம் கொஞ்சம் வருது''’என்றார் குசலகுமாரி.
தன் கஷ்டத்தைச் சொன்னபோதும் அதை கழிவிரக்கமாக சொல்லாமல்... வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்துகிற பாணியில் ஈஸியாகத்தான் சொன்னார்.
பத்து நாட்களுக்கு முன்... குடல் பிறழ்வு ஏற்பட்டதால்... உணவு உண்ண முடியாமல் பலவீனமடைந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி இயற்கை எய்தினார் குசலகுமாரி.
-இரா.த.சக்திவேல்
படம்: எஸ்.பி.சுந்தர்