மசாலா படங்களை ரீ-மேக் செய்யலாம். ஆனால் உணர்வுப் பூர்வமான கதையம்சம்கொண்ட படங்களை ரீ-மேக் செய்யாமல் அப்படியே வெளியிடுவதுதான் அந்த படைப்பிற்குச் செய்கிற நியாயமா இருக்கும்.
கன்னடப்படமான "மரே சரித்ரா', தெலுங்குப் படமான "சங்கராபரணம்',’ இந்திப் படமான "ஹம் ஆப்கே ஹைன் கௌன்'’போன்ற படங்கள் எடுக்கப்பட்ட மொழிகளிலேயே வெளியாகி பல மாநிலங்களில் சக்கைப்போடு போட்டது. இந்தப் படங்கள் தமிழகத்தின் பல நகரங்களில் மாதக் கணக்கில் ஓடியது.
சிலசமயம் உணர்வுப்பூர்வமான கதைப் படங்கள் உணர்வு குறையாமல் எடுக்கப்பட்டால் வெற்றியைப் பெறும். அதற்கு உதாரணமாக "மரே சரித்ரா'’படம், "ஏக்துஜே கேலியே'’என இந்தியில் எடுக்கப்பட்டதைச் சொல்லலாம்.
சமீபத்திய படங்களில் மலையாளப்படமான "பிரேமம்'’பல்வேறு மொழி ரசிகர்களால் ரசிக்கப் பட்டது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து... தெலுங்கில் ரீ-மேக் செய்தனர். ஆனால் தோல்வியடைந்தது. ‘"பிரேமம்'’சாய்பல்லவி ரசிகர்களைக் கவர்ந்ததுபோல... தெலுங்கில் அந்தக் கேரக்டரில் நடித்த ஸ்ருதிஹாசன் ரசிகர்களைக் கவரவில்லை.
சமீபத்திய தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப்படத்தை ரீ-மேக் செய்யும் பேச்சு வார்த்தைகள் நடந்தபோதே... "நேரடியாகவோ.. டப்பிங் செய்தோ இந்தப் படத்தை வெளியிடலாம். அதுதான் சரியாக இருக்கும்' என்கிற கருத்து நிலவியது.
ஆனால்... "வர்மா'’என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்ட இந்தப்படம்... முழுமையாக எடுக்கப்பட்டும் "திருப்தி இல்லை'’எனச்சொல்லி... கைவிடப்பட்டுள்ளது.
இந்த ரீ-மேக் சர்ச்சை ஓய்வதற்குள் இன்னொரு சர்ச்சை...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த "96'’படம் ரசிகர் களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் நாயகனும், நாயகியும் கட்டிப்பிடிப்பதை பொதுவாகவே விரும்பும் ரசிகர்கள்கூட... ‘விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் எமோஷனலாகி... கட்டிப்பிடித்துவிடக் கூடாதே’ என்கிற பதட்டத்தை ஏற்படுத்திய காதல் படம் இது.
(இந்தப் படத்தின் வெற்றிவிழா மேடையில் த்ரிஷாவை விஜய்சேதுபதி கட்டிப்பிடித்தார்)
"96'’படத்தைப் பார்த்த சமந்தா... "இந்தப் படத்தை ரீ-மேக் செய்யாமல் இருப்பதே நல்லது. ஜானுவாகவே வாழ்ந்திருக்கிறார் த்ரிஷா'’என பாராட்டியிருந்தார்.
ஆனால்.. அப்படிச் சொன்ன சமந்தாவே "96'’தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கவிருக்கிறார். ‘"எங்கேயும் எப்போதும்'’சர்வானந்த், விஜய்சேதுபதி வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழில் இயக்கிய பிரேம்குமாரையே தெலுங்கிலும் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில்...
கதையில் தெலுங்கிற்கேற்ப பல மாறுதல்களைச் செய்யவும், பிரபல தெலுங்கு இசையமைப்பாளரை இசையமைக்கச் செய்யவும் தில் ராஜு உறுதியாக இருக்கிறார். இதில் பிரேம்குமாருக்கு உடன்பாடில்லை. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
விமல் நடித்த "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'’படத்தில் ஆபாச வசனங்கள் அதிகமிருந்ததால்... மகளிர் அமைப்புகள் தியேட்டருக்குள் புகுந்து தகராறு செய்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. இப்போது ஓவியா நடித்திருக்கும் "90 எம்.எல்.'’ படத்தின் ட்ரெய்லரிலேயே மது, கஞ்சா, செக்ஸ், ஆபாச வசனம் ஓவராக இருக்க... இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இப்படி படத்தில் தலைதூக்கிய ஆபாசம் ஒருபுறமிருக்க... டைட்டிலிலேயே டபுள் மீனிங் காட்டுகிறார்கள்.
"கடலை போட ஒரு பொண்ணு வேணும்'‘என்கிற படத்தின் முதல் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிடுவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ‘கடலை’ என்பதை மறைத்திருந்தனர்.
இதனால் விஜய்சேதுபதிக்கு கண்டனம் எழ... அந்த போஸ்டரை வெளியிட மறுத்த விஜய்சேது, அந்தப் படக்குழுவையும் கூப்பிட்டு கடுமையாகத் திட்டியுள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்