சியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடம் (முதலிடம் ஜாக்கி சான்) யாருக்கு என்று உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை விழுந்த தலை, நடுத்தர வயது கொண்ட அவர், இந்தியாவின் -தமிழ்நாடு என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த ரஜினிகாந்த் வெறும் நடிகரில்லை. எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாத ஒரு இயற்கை சக்தி மாதிரி.’’

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்... "ஸ்லேட்'’எனும் அமெரிக்க இணையதளத்தில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் எனும் கட்டுரையாளர் அமெரிக்க சினிமா ரசிகர்களுக்கு, ரஜினியை அறிமுகப்படுத்தும் விதமாக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இன பேத, மொழி பேத, தேச பேத, நிற பேதங்களைக் கடந்து ரஜினி ரசிக்கத்தக்க நடிகராக இருப்பதற்கு காரணம்... மரபுகளைத் தாண்டிய அவரின் நடிப்பு ஸ்டைல்தான்.

படத்திற்குப் படம் தனது புதுப்புது மேனரிஸங்களாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஒரு கதையில் நடிக்க முடிவு செய்ததுமே... அதில் புது ஸ்டைல் காண்பிக்க... வளரும் நடிகர்களைப்போல ஹோம்வொர்க் செய்கிறார்.

Advertisment

rajini

"பேட்ட'’படத்தில் ரஜினி ஒப்பந்தமானதும், வில்லனாக விஜய்சேதுபதியும் ஒப்பந்தமானபோது... "விஜய்சேதுபதியின் சில அசால்ட்டான நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதை சௌந்தர்யா ரஜினி சொன்னதாகவும், அதை அப்ரிசியேட் பண்ணிக்கொண்டார் ரஜினி என்றும்' ஒரு நம்பத்தகுந்த தகவல் உண்டு. ஜூனியர் நடிகரையும் ஆரோக்கியமான போட்டியாளராக எடுத்துக்கொண்டிருக்கும் ரஜினி... ‘"பேட்ட'யில் புது ஸ்டைலை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆகச் சிறந்த குணச்சித்திர நடிப்புத் திறமையிருந்தும் மசாலா மன்னன்’பாணியை தேர்ந்தெடுத்து பயணிக்கிறார்.

இதற்கான திருப்பம் என்பது... 1980-களில் வந்த "நல்லவனுக்கு நல்லவன்'’படம் மூலம் ஏற்பட்டது.

அதில் ‘மாணிக்கம்’ என்கிற தாதாவாகவும், பிறகு தாதாத்தனத்தை குறைத்துக்கொண்ட பொறுப்பான தந்தையாகவும் அசரடித்தார். அந்தப் படம் பெற்ற பெரும் வெற்றிதான்... அந்த மாணிக்கம்தான் "பாட்ஷா'வின் "மாணிக் பாட்ஷா'வாக ரஜினியை உயர்த்திப் பிடித்தது.

"முத்து'’படம் பார்த்த ஜப்பான் ரசிகர்கள், அவரை "டான்ஸிங் மகாராஜா'வாக கொண்டாடிவருகிறார்கள். இப்போது... உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்’வசூலை ஏற்கனவே செய்திருக்கும் ராஜமௌலியின் "பாகுபலி', அமீர்கானின் "பி.கே.'’பட சாதனையை முறியடிக்க... பரந்துவிரிந்த சீன தேசத்தின் பல்லாயிரம் திரையரங்குகளில் ரஜினியின் "2.ஓ'’ திரைப்படத்தை வெளியிட சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியிலேயே ‘சிட்டியும், ‘வசீகரனும் வசீகரிக்கப்போகிறார்கள்.

பெங்களூரு தமிழர்கள் அங்கே வெளியாகும் எம்.ஜி.ஆர். படங்களை முதல்நாளே... முதல் காட்சி பார்ப்பதை பெருமையாகக் கருதி... தியேட்டர்களில் முண்டியடிப்பார்கள். ‘"என்ன இப்படி?'’என ரஜினி, தன் தமிழ் நண்பர்களை கேட்டபோது... ‘"நீ முதல் நாள் முதல் காட்சி எம்.ஜி.ஆர். படம் ஈஸியா பார்த்துவிடு பார்ப்போம்...'’ என சவால்விட... அந்தச் சமயம் ‘"நான் ஆணையிட்டால்'’ படம் வெளியாக... சவாலை நிறைவேற்றுவதற்காக முண்டியடித்து, சட்டை கசங்கி, வியர்க்க விறுவிறுக்க டிக்கெட் எடுத்து படம் பார்த்திருக்கிறார்.

அதிலிருந்து எம்.ஜி.ஆர். படங்கள்மீது ரஜினிக்கு ஈர்ப்பு.

ரஜினியின் "பாட்ஷா'’படம் சக்கைப்போடு போட்டது. அந்தப் படத்தை எத்தனை முறை டி.வி.யில் போட்டாலும் மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இதை மனதில் கொண்டு... இப்போதும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும்போது... ""எம்.ஜி.ஆர். அவங்களோட ‘"உலகம் சுற்றும் வாலிபன்'’படத்தோட வரவேற்புக்கு ஈடா "பாட்ஷா'’படம் பண்ணீட்டேன். ஆனா ‘"எங்க வீட்டுப் பிள்ளை'’படத்துக்கு ஈடா, நான் இன்னும் படம் பண்ணல''’எனச் சொல்வதுண்டு.

ஒருமுறை நாம், பாட்டுராஜா டி.எம்.சௌந்திரராஜனிடம் பேசிக்கொண்டிருந்தபோது... ரஜினி குறித்த ஒரு செய்தியை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ரஜினி முதல்ல ஹீரோவா நடிச்ச "பைரவி'’படத்துல "நண்டூறுது நரியூறுது'’பாடலை பாடிவிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலிருந்து வெளிய வந்தேன். ரஜினி என் முன்னாடி பணிவா வந்து... "சார் வணக்கம். எம்.ஜி.ஆர்.சாருக்கும், சிவாஜி சாருக்கும் பாடுற மாதிரி... எனக்கு பாடியிருக்கீங்க'னு சொன்னார். அவர கூர்ந்து பார்த்தேன். அந்த சின்னக் கண்ணுல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. "முருகன் அருளால நீ நல்லா வருவ'னு ஆசீர்வதிச்சேன். ரஜினிக்கு இன்னைக்கி பெரிய செல்வாக்கு இருக்கு. எம்.ஜி.ஆர். மாதிரி வரக்கூடியவர். ஆனா... படங்கள்ல எம்.ஜி.ஆர். சொன்ன நல்ல விஷயங்களைப்போல ரஜினி தன் படங்கள்ல நிறைய சொல்லணும்''’எனக் குறிப்பிட்டார்.

ஆயினும் "உழைத்து முன்னேறு', "உறவுகளுக்கு உதவு', "நல்லது வெல்லும்'’என்கிற பொதுப்பண்புகள் ரஜினி படங்களில் இடம்பெறத் தவறுவதில்லை.

இந்தத் தலைமுறை படைப்பாளிகளும், தொழிநுட்பக் கலைஞர்களும் தன்னை எளிதில் கையாளும்படி எளிமையாக இருக்கிறார் ரஜினி. அந்த எளிமைதான் அவரின் வலிமை.

-ஆர்.டி.எ(க்)ஸ்