"மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கியதும் "சினிமாவுக்கு முழுக்குப் போடுவதாக' அறிவித்தார் கமல். பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்ட கமல்... செலக்டிவ்வாக நடிக்கப்போவதாகவும் "இந்தியன் -2' படத்தில் நடிக்கப்போவதாகவும் அறிவித்தார். தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது "தேவர் மகன் -2' படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கப்போவதாகவும் சொன்னார்.
கமலை ஆரம்ப காலங்களில் அரவணைத்து வளர்த்தது மலையாள சினிமாதான். அங்கே நேரடி மலையாள நடிகர்களுக்கு இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றமும், மக்கள் செல்வாக்கும் கமலுக்கு உண்டு. இப்போதும் "சேட்டன்' என்று நினைக்கிற அளவிற்கு "திங்கள்' என்பதை "திங்ஙள் குளிக்க வந்தாள்' என பாடுகிற அளவிற்கு கமலின் உச்சரிப்புகூட முன்பு இருந்தது.
கேரள அரசியல் அரங்கிலும் மதிப்புக்குரியவராக இருக்கிறார் கமல். இந்தநிலையில்தான்... தன் கலையுலக வாழ்வின் முக்கிய அறிவிப்பை கேரள மண்ணில் அறிவித்திருக்கிறார் கமல்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிழக்கம்பாலம் கிராமத்தில் ஏழைகளுக்கு "டுவொண்ட்டி 20 கிழக்கம் பாலம்' எனும் சேவை அமைப்பு கட்டித் தந்த முந்நூறு வீடுகளை மக்க ளுக்கு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கமல்...
""மக்கள் நீதி மய்யம் கட்சிப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறேன். "இந்தி யன்-2' படம்தான் என் திரையுலக பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும். அதே சமயம் கட்சி நடத்தும் நிதிக்காக தொடர்ந்து படங்களைத் தயாரிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இது கமலின் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமானதாக இருந்தாலும், கமலின் நடிப்பை நேசிக்கிறவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தித்தான் இருக்கிறது.
மென்மையான கதாபாத்திரங்களில் நடித்த எம்.கே.டி.தியாகராஜ பாகவதருக்கு ஒரு பிரிவினரும், ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்துவந்த பி.யூ.சின்னப்பாவிற்கு ஒரு பிரிவினரும் என சினிமாவின் தொடக்க காலங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் இரண்டுபட்டு நின்றனர்.
ஆக்ஷன் ஹீரோ எம்.ஜி.ஆர்., குணச்சித்திர கதாநாயகன் சிவாஜி... என இரண்டுபட்டனர் ரசிகர்கள்.
ஆக்ஷன் ஹீரோ ரஜினி, குணச்சித்திர கதாநாயகன் கமல்... என இரண்டுபட்டனர்.
ஆக்ஷன் ஹீரோவான எம்.ஜி.ஆர். "என் தங்கை', "பெற்றால்தான் பிள்ளையா'’போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கேரக்டர் ஹீரோவான சிவாஜி, "தங்கச் சுரங்கம்',‘"ராஜா' போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆயினும் எம்.ஜி.ஆருக்கு ஆக்ஷன் இமேஜும், சிவாஜிக்கு குணச்சித்திர இமேஜும்தான் நிரந்தரம்.
ஆக்ஷன் ஹீரோவான ரஜினி "ஆறிலிருந்து அறுபதுவரை', "எங்கேயோ கேட்டகுரல்' போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி னார். கேரக்டர் ஹீரோவான கமல் "விக்ரம்', "சத்யா', "குரு', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோ நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஆயினும் ரஜினிக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜும், கமலுக்கு குணச்சித்திர இமேஜும் நிரந்தரம்.
கமல் சினிமாவை மிகவும் நேசிக்கிறவர். எந்தப் பாத்திரத்தில் ஊற்றப்படுகிறதோ... அந்த வடிவத்திற்கு அடங்கும் நீரைப்போல... தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை தன் திறமையும், புதுமையுமான நடிப்பால் மிளிரச் செய்பவர்.
""ரசிகர்கள் இதைத்தான் விரும்புறாங்க'' எனச் சொல்லி அவர்களின் லெவலுக்கு இறங்கிய (ந)டிப்பது சில ஹீரோக்களின் பாணி. ஆனால்... "ரசனையை மேம்படுத்து' எனச் சொல்லி ஏறிய (ந)டிப்பது கமலின் பாணி.
கதாபாத்திரத்திற்காக... "இந்திய'னுக்காக துரும்பாக இளைப்பார், "ஆளவந்தா'னுக்காக தூணாக பெருப்பார். "நாயகன்' படத்தில் வயதான வேலு நாயக்கர் கெட்-அப்பிற்கு தலையில் முன் வழுக்கை ஏற்படுத்த ஷேவ் செய்திருந்தாலே போதுமானது. ஆனால்... ஷேவ் செய்தாலும் சில மணி நேரங்களில் முடி இருந்த தடம் தெரியும் என்பதால்... ஜைன அம்ச துறவிகளைப் போல... மயிர்க்கால்களோடு முடியை பறித்து, தன் முன் தலையில் வழுக்கை ஏற்படுத்தினார் கமல்.
பாத்திரத்திற்காக இப்படி வருத்திக்கொள் வதை வருத்தப்படாமல் செய்வார் கமல்.
புதுவகை நடிப்பையும், புதிய புதிய தொழில் நுட்பத்தையும் அது தோன்றுகிற காலங்களிலேயே, தன் படங்களில் புகுத்திவிடுவார் கமல். அதாவது... பத்தாண்டுகளுக்குப் பின் தவிர்க்கமுடியாத அம்சமாக இருக்கும் ஒன்றை பத்தாண்டுகளுக்கு முன்பே தந்துவிடுவார் கமல். அதனால்தான் உலக சினிமாவில் கமல் நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருக் கிறது. கமலுக்கு விருதுகளும், புகழும் கிடைத்தபடி இருக்கிறது. பின்னாளில் வந்த பார்வையற்ற கதாநாயகன் கதைப் படங்களுக்கு முன்னோடி கமலின் "ராஜபார்வை'.
கமலின் "குணா' படம் ஒரு படைப்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியபோதும் வர்த்தக ரீதியில் பெரிதாக அமையவில்லை. பின்னாளில் அதே சாராம்சம் கொண்ட தனுஷின் "காதல் கொண்டேன்' வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றது.
அன்று "அபூர்வ சகோதரர்கள்' படத்தில் "அப்பு' என்கிற குள்ள மனிதனாக அசத்தினார் கமல். இன்றுதான் "ஜீரோ' படம் மூலம் ஷாரூக் குள்ள மனிதராக நடித்திருக்கிறார்.
"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என ஒத்தையடி பாதை போடுபவர்களில் கமலும் ஒருவர். ஆனாலும் கமலின் கடின உழைப்பிற்கேற்ற வர்த்தக பலன்கள் அவருக்கு பெரிதாக கிடைப்பதில்லை.
இன்று பழைய திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களைத் தாண்டி பல வழிகள் இருக்கும் போதும்... எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்' ரீ-ரிலீஸ் ஆகி நூறுநாட்கள் ஓடுகிறது. உடனே சிவாஜியின் "கர்ணன்' ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நூறு நாட்கள் ஓடுகிறது. "எங்கவீட்டுப் பிள்ளை' ரீ-ரிலீஸாகி ஐம்பதுநாள் ஓடுகிறது. உடனே "வசந்த மாளிகை' வெளியாகி ஐம்பது நாள் ஓடுகிறது.
எம்.ஜி.ஆர்.-சிவாஜியின் ரசிகர்களின் மனோபாவம் சுருதி குறையாமலே இருக்கிறது.
ரஜினி-கமல் விஷயத்தில்?
மசாலா ஹீரோவான ரஜினியின் படங்கள் "சுமார்' என்கிற விமர்சனம் வந்தாலும், வசூலில் தாக்குப்பிடித்துவிடுகிறது.
இப்போதுகூட விஜய், அஜீத் படங்களை வசூலில் "2.ஓ' முந்தியிருக்கிறது. இரண்டாவது வாரத்தில் உலகம் முழுக்க 500 கோடியை வசூலித்திருப்பதாக அப்படத்தை தயாரித்த "லைகா' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் கமலின் படங்கள் ஒன்று... வசூலை வாரிக்குவிக்கும்... இல்லையென்றால் முதலுக்கே மோசம் செய்துவிடும்.
சமகால திரைப்பட வசூலில் கமலின் "விஸ்வ ரூபம்'’பெரிய சாதனை படைத்தது. ‘நளினமான நாட்டியக் கலைஞன்... அதிரடியாக ஆக்ஷன் ரூபம் எடுக்கும் அந்த ஒரு சண்டைக் காட்சிக்கே டிக்கெட் டுக்கு கொடுத்த காசு சரியாப் போச்சு. மற்றதெல் லாம் போனஸ் என்கிற அளவிற்கு கொண்டாடப் பட்டது அந்தப் படம். கமலின் மிகப்பெரும் வர்த்தகத் தோல்விக்கு உதாரணமாக அமைந்தது "விஸ்வரூபம்-2'. ஒருவருட காலமாக எதிர்ப்பார்க்கப் பட்ட அந்தப் படம் ஒருவாரம் கூட தியேட்டர் களில் தாக்குப் பிடிக்கவில்லை.
"உத்தம வில்லன்' உள்ளிட்ட சில படங்கள் வசூலிலும், வரவேற்பிலும் கமலுக்கு அதிர்ச்சி யையே ஏற்படுத்தியது.
கமல் பண்ணாத புதுமையும் இல்லை... நடிக்காத கேரக்டரும் இல்லை... பெறாத விருதுகளும் இல்லை... புகழுக்கும் பஞ்சமில்லை. அதனால் தன் எனர்ஜியை அரசியல் என்கிற ஒரே திசையில் முழுமை யாக செலுத்த முடிவு செய்திருக் கிறார்.
வரும் 14-ஆம் தேதி "இந்தியன்-2' படப்பிடிப்பு தொ டங்குகிறது. "இது கமலின் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்த உதவிகரமான படமாக இருக்கும்' என்கிறார்கள்.
கமலின் ராஜ் கமல் இண்டர் நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நிறையப் படங்களை தயாரித்திருந்தபோதும்... கமல்தான் அந்தப் படங்களில் ஹீரோ. ஒரே ஒரு படம் சத்ய ராஜை ஹீரோவாக வைத்து "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தை தயாரித்து பெரும் வெற்றி கண்டது. இப்போது விக்ரம் நடிக்கும் "கடாரங் கொண்டான்' படத்தை தயாரித்து வருகிறது.
இனி தொடர்ந்து தயாரிப்பாளராக மட்டும் கமல் இருக்கப்போகிறார் சினிமாவில்.
அரசியலில் இறங்குவதாகச் சொன்ன ரஜினி, கட்சியைத் தொடங்காமல் தொடர்ந்து நடிப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
‘அரசியலில் இறங்கிவிட்ட கமல், "சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை' என்று சொன்னதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆக்டர் கமல்... இனி லீடர் மட்டுமே.
-ஆர்.டி.எ(க்)ஸ்