ல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய காலத்தால் அழியாத வரலாற்று, உருவக கற்பனைப் புதினமான "பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாகவே நடந்துவருகிறது.

"நாடோடி மன்னன்' படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆர். அதன்பிறகு இயக்கித் தயாரிக்க திட்டமிட்ட படம் "பொன்னியின் செல்வன்'.

கல்கியின் குடும்பத்தினரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு கதை உரிமையை வாங்கிய எம்.ஜி.ஆர்., 1959-ல் "பொன்னியின் செல்வன்' திரைப்படம் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் செய்தார். (இப்போது "பொன்னியின் செல்வன்' உட்பட கல்கியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுவிட்டன)

வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆர்., மாமன்னன் ராஜராஜசோழனாக ஜெமினி கணேசன், சின்னப் பழுவேட்டரையராக எம்.என்.நம்பியார் நடிப்பதாகவும் தகவல்கள் வந்தது அப்போது.

Advertisment

touringtalkies

பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தை கதாநாயகி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தவும் விரும்பிய எம்.ஜி.ஆர்., இதுபற்றி பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் பேசினார். "எனக்கு ஆட்சேபணை இல்லை' என சுப்பிரமணியம் சொன்னபோதும்... "சினிமாவில் நடிப்பதாக இல்லை' என உறுதியாக மறுத்துவிட்டார் பத்மா.

சரோஜாதேவி முதன்முதலாக தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரின் "திருடாதே' படம் மூலம் அறிமுகமாகக் காரணமானவர் பத்மா. ("திருடாதே'வுக்கு முன்பாக "நாடோடி மன்னன்' வெளியானது) ஆனாலும் பரதநாட்டியத்துக்காகவே வாழ்வது என்கிற கொள்கை முடிவால்... சினிமாவில் நடிப்பதை அவர் விரும்பவில்லை.

Advertisment

வைஜெயந்திமாலாவை நடிக்கவைக்கும் யோசனை எம்.ஜி.ஆரிடம் இருந்த நிலையில்... சீர்காழியில் "இன்பக்கனவு' நாடகத்தில் நடிகர் குண்டு கருப்பையாவை தலைக்கு மேல் தூக்கி நடிக்கும் காட்சியில் கருப்பையாவின் எண்ணெய் பூசிய உடம்பு நழுவியதால்... அவரை கீழே விட்டுவிடாமல் தன் காலில் தாங்கியதில் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இப்படியான பல காரணங்களால் "பொன்னியின் செல்வன்' படத்தை எம்.ஜி.ஆர். தொடங்கவில்லை.

1960-களின் மத்தியில் தமிழ், ஆங்கிலம் இருமொழியில் படத்தை எடுக்க மீண்டும் முயற்சித்த எம்.ஜி.ஆர்., ஆங்கிலப்பதிப்புக்கு அறிஞர் அண்ணாவை வசனம் எழுத வைக்கவும் முடிவுசெய்திருந்தார்.

அடுத்தடுத்து அரசியல், சினிமா என பிஸியானதால்... எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறாமலேயே போனது.

சிவாஜிக்கும் "பொன்னியின் செல்வன்' நாவல் படமானால் அதில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்ததாக அந்தச் சமயத்தில் சொல்லப்பட்டது.

அடுத்ததாக கமல் அந்த முயற்சியில் இறங்கினார். ‘பெரும் நட்சத்திர பட்டாளம்... பெரும் செலவு உள்ளிட்ட காரணங்களால்’ கமலும் அந்த விருப்பத்தைக் கைவிட்டார்.

ழெட்டு ஆண்டுகளுக்கு முன்...

விஜய்யையும், தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவையும் வைத்து "பொன்னியின் செல்வன்' புதினத்தை படமாக்க விரும்பினார் மணிரத்னம்.

இதற்காக இருவரிடமும் பேசினார். அவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். விஜய் "பொன்னியின் செல்வன்' நாவலை வாங்கிப் படித்தார்.

மணிரத்னம் கேட்டுக்கொண்டதன் பேரில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையையும் எழுதி முடித்தார்.

ஆனால்... கல்கியின் வர்ணனைகளை காட்சிப்படுத்த ஒவ்வொரு ஃபிரேமுக்கும் பெரும் செலவு பிடிக்கும் என்பதால் ஒட்டுமொத்த பட்ஜெட் பெரிய லெவலில் இருந்தது. ஒரு ட்ரையல் பார்க்கும் விதமாக தஞ்சை பெரியகோவில் உட்பட சில புராதன கோவில்களில் டெமோ ஷூட் நடத்த அனுமதிகேட்டார் மணிரத்னம். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் வந்தது.

இதனால் அந்த "பொன்னியின் செல்வன்' படத்திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு... வேறு படங்களில் பிஸியானார்.

(இந்த நேரத்தில் "எனக்கு ஒரு வரலாற்றுப் படத்தை... குறிப்பாக "பொன்னியின் செல்வன்' புதினத்தை படமாக எடுக்கும் ஆசை இருக்கிறது' என டைரக்டர் அட்லி அறிவித்தார்.)

சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய்... என சில ஹீரோக்களை ஒன்றிணைத்து "செக்கச்சிவந்த வானம்' படத்தை சமீபத்தில் எடுத்து வெளியிட்டார் மணிரத்னம். இதில் வெற்றியும் கண்டார்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் செய்தது.

இதுவரை இல்லாத பெரும் பட்ஜெட்டில் "2.ஓ' படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் நிலையில்... மெகா பட்ஜெட்டில் "பொன்னியின் செல்வன்' படத்தில் லைகாவுடன் இணைந்து எடுக்க மணிரத்னம் பேசியுள்ளார்.

விஜய், விக்ரம், சிம்பு... ஆகிய மூன்று முக்கிய ஹீரோக்களை இந்தப் படத்தில் இணைக்கும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே மூன்று மணி நேர படமாக்குவதற்கு ஏற்ப திரைக்கதையாக "பொன்னியின் செல்வன்' புதினம் தயாராக இருக்கிறது.

1959-லிருந்து முயற்சிக்கப்படும் இந்த முயற்சி 60-ஆண்டுகளுக்குப் பிறகாவது கைகூடட்டும்.

-ஆர்.டி.எ(க்)ஸ்