"பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸாகும்...' என்கிற தடாலடியால்... சிறுபடத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல்... தேவையான திரையரங்குகள் கிடைக்காமல் பல வருடங்களாகவே தவிப்புக்கு ஆளாகிவந்தனர்.
சிறுபட தயாரிப்பாளர்களின் பாதிப்பை சரிசெய்யும் விதமாக... விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆக்கப்பூர்வமான ஒரு நடவடிக்கையை எடுத்தது. "ஒவ்வொரு படத்தின் தயாரிப்பாளரும் தங்கள் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டால்... அதை உரிய ஆவணங்களோடு, தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவிக்கவேண்டும். இதை தயாரிப்பாளர் சங்கம் ஆராய்ந்து... இரண்டுவிதமான ரிலீஸ் தேதிகளைச் சொல்லும். அதில் தங்களுக்கு தோதான தேதியை தேர்வுசெய்து ரிலீஸ் செய்யலாம். ஒருவேளை முடிவான தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனால்... மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி... வேறு தேதி பெற்றுக்கொள்ள வேண்டும்' இப்படி படவெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ஒன்றை உருவாக்கினார் விஷால். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த நடைமுறை இருப்பதால்... சின்ன பட்ஜெட் படங்களுக்கும் தேவையான திரையரங்குகள் கிடைத்து வந்தன.
இந்த நடைமுறையில் சிக்கலை உண்டாக்கும் செயலில் இறங்கியிருக்கிறார்கள் சில பிரபலங்கள்.
ஹீரோவும், இசையமைப்பாளருமான விஜய்ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படங்களை அவரின் மனைவி பாத்திமா தயாரித்து வருகிறார். அப்படி தயாராகி வெளியான படம் ‘"திமிரு பிடிச்சவன்'.
இந்தப் படத்தை நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி நாளில் வெளியிட ஒப்புக்கொண்டதால் ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ அந்தத் தேதியை ஒதுக்கிக் கொடுத்தது. "தீபாவளி முதல் ‘"திமிரு புடிச்சவன்'’ வெளியாகும்' என பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து விளம்பரமும் செய்யப்பட்டது. இதனால் தீபாவளிக்கு பிந்தைய வாரமான நவம்பர் 16-ஆம் தேதியில் ஜோதிகா நடித்த "காற்றின் மொழி', அஜ்மல் நடித்த "சித்திரம் பேசுதடி-2', உதயா தயாரித்து நடித்த ’"உத்தரவு மகாராஜா', நகுல் நடித்த ’"செய்'’ஆகிய நான்கு படங்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் தீபாவளிக்கு திரைக்கு வர அனுமதி பெற்று, விளம்பரமும் கொடுக்கப்பட்ட விஜய் ஆண்டனியின் "திமிரு புடிச்சவன்'’படம் கடைசி நேரத்தில் தீபாவளி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. விஜய்யின் ‘"சர்கார்'’படம் அதிக தியேட்டர்களில் வெளியானதாலும், தங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததாலும் ஜகா வாங்கியது. மீண்டும் அவர்கள் சங்கத்தில் தேதி கேட்டபோது டிசம்பர் 27-ஆம் தேதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால் விஜய்ஆண்டனியும், பாத்திமாவும் இந்த தேதியை ஏற்கவில்லை. "முடிந்தால் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ரிலீஸ் செய்துகொள்ளலாம்'’என்றுகூட ஆலோசனை செய்யப்பட்டபோதும், விஜய்ஆண்டனியின் மனைவி பாத்திமா பிடிவாதமாக சண்டை போட்டு ’"நவம்பர் 16-ம் தேதி ரிலீஸ் செய்தே தீருவோம்'’என்று சொல்லிவிட்டார். நவம்பர் 16-ல் ரிலீஸ் செய்துகொள்ள ஏற்கனவே அனுமதி பெற்று இருந்த மற்ற சிறு பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தங்கள் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தனர். சங்க நிர்வாகிகளும் விஜய்ஆண்டனியிடம் பேசிப் பார்த்தனர். ஆனால் விஜய்ஆண்டனி தரப்பு அதைப் பொருட்படுத்தவில்லை. திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிட்டனர்.
"திமிரு பிடிச்சவன்'’படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால்... ’"செய்'’படத்திற்கும், ’"சித்திரம் பேசுதடி-2'’படத்திற்கும், சொற்ப அளவிலேயே தியேட்டர்கள் கிடைக்கும் நிலை இருந்ததால் அந்த இரண்டு படங்களின் ரிலீஸும் ரத்து செய்யப்பட்டது. குறைந்த தியேட்டர்களே ‘"உத்தரவு மகாராஜா'’ படத்திற்கும் கிடைத்தது. இதனால் அதிருப்தியான நடிகரும், தயாரிப்பாளருமான உதயா, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது எரிச்சலடைந்து, தான் வகித்து வந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதேபோல தீபாவளிக்கு வெளியான தனது "பில்லா பாண்டி'’படத்திற்கு ஒதுக்கியிருந்த தியேட்டர்களை "சர்கார்' படத்திற்கு கொடுத்துவிட்டதால்... தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு, தனக்கு நியாயம் கிடைக்கச் செய்யவில்லை’ என்கிற கோபத்தில் தனது தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
"ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டியை சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்ட விஜய் ஆண்டனியின் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்கிற கோரிக்கை தயாரிப்பாளர் சங்கத்தில் பலமாக ஒலித்தது.
இதையடுத்து... கடந்த 23-ஆம் தேதி... பிற்பகல் 3 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் விஷால் உட்பட முக்கியமான செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மூன்றுமணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 12:45 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "நடிகர் விஜய்ஆண்டனிக்கு ’ரெட் கார்டு’ போடுவது' என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவுகளை மீறிச் செயல்பட்டதால் "விஜய்ஆண்டனிக்கு இனிமேல் எந்த வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை' என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக முடிவெடுத்ததோடு... ‘"தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் விஜய் ஆண்டனியின் நிறுவனப்படங்களில் பணியாற்றக்கூடாது'’என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
விஜய்ஆண்டனி படத்தால் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில்... விஜய்சேதுபதியின் படத்தாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி நடித்திருக்கும் ‘"சீதக்காதி'’ படத்தை ரிலீஸ் செய்ய டிசம்பர் 14-ஆம் தேதியை ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி ஒதுக்கியது. ஆனால்... நவம்பர் 29-ஆம் தேதி ரஜினியின் "2.0'’ வெளியாவதால்... மூன்று வாரங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்பதால்... "டிசம்பர் 21-ஆம் தேதியில் "சீதக்காதி'’வெளியாகும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இதனால்... "கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 21 முதல் 24 வரை ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட சிறு படங்களுக்கு பாதிப்பு ஏற்படும்...' என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடப்பட்டுள்ளது. சங்கம் என்ன நடவடிக்கை எடுக்குமோ?
"" "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'’ படத்தை தயாரித்தபோது... படப்பிடிப்பிற்கும், டப்பிங் பேசுவதற்கும் சிம்பு சரியாக வராமல் சொதப்பியதால் தனக்கு இருபது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சிம்புவிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தரும்படியும், அதுவரை சிம்பு புதிய படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும்'' எனவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருப்பதையும், இதனால் சிம்புவுக்கு ‘ரெட் கார்டு’ போட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்திருப்பதையும், இந்தப் பிரச்சினையில் ‘சிம்புவுக்கு எதிராக விஷால் செயல்படுகிறார்’ என்கிற தனிநபர் மோதலாக சித்தரிக்கப்படுவதையும் ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஒருவேளை ரெட் கார்டு போடப்பட்டால் சிம்பு இப்போது நடித்துவரும் ‘"வந்தா ராஜாவாத்தான் வருவேன்'’ படத்திற்கு சிக்கல் ஏற்படலாம்.
இந்நிலையில் விஷாலுக்கும், தனக்குமான தனிப்பட்ட மோதலாகவே முன்னெடுத்துச் செல்கிறார் சிம்பு.
யார் மீதாவது தனக்கு கோபம் இருந்தால்... தனது திரைப்படங்களில் அதை வெளிப்படுத்துவார் சிம்பு. இதற்கு ‘"மன்மதன்'’ உட்பட சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
"வந்தா ராஜாவாத்தான் வருவேன்'’படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் வரிகளை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
"எனக்கா ரெட் கார்டு?
எடுத்துப்பாரு என் ரெக்கார்டு'’
-என வம்பு வளக்குது அந்தப் பாட்டு வரிகள்.
-ஆர்.டி.எ(க்)ஸ்