போலீஸ் ஜீப்பின் பேனட் மீது பீர்பாட்டிலுடன் விஷால் அமர்ந்திருப்பது போன்ற "அயோக்யா' பட போஸ்டருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vijay

சினிமாவில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு கடிதம் எழுதியும் வருகிறார் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

இதன் எதிரொலியாக விதவிதமான ஸ்டைலில் சிகரெட் பிடித்து நடித்து வந்த ரஜினி "இனி புகைப்பது போல் நடிப்பதில்லை' என முடிவெடுத்து... அதன்படியே நடித்து வருகிறார்.

Advertisment

பா.ம.க.வுக்கும், விஜயகாந்த் திற்கும் பிரச்சினை வந்தபோது... அதுவரை பெரும்பாலும் சிகரெட் பிடிப்பது போல் நடித்திராத விஜயகாந்த், "கஜேந்திரா' படத்தில் "தம்' பற்ற வைத்தார். ஆனால் அப்படி நடித்தது அபத்தமானது என்பதை உணர்ந்து, அதன்பிறகு அப்படி நடிப்பதில்லை விஜயகாந்த்.

"புகை பிடிக்கும் காட்சியை திரைப் படங்களில் தவிர்க்க வேண்டும்' என தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில்...

விஜய்யின் "சர்கார்' பட போஸ்டரில் விஜய் புகைத்தார். ராமதாஸின் எதிர்ப்பால்... அந்த போஸ்டர் நீக்கப்பட்டாலும் "சர்கார்' படத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட காட்சிகளில் விஜய் புகைத்தபடி வந்தார்.

Advertisment

""எம்.ஜி.ஆர். தன் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்காமல்... நல்ல கருத்துகளைச் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்து, தமிழக முதல்வராகவும் ஆனார். அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் இப்படி சமூகத்திற்கு விரோதமான காட்சிகளில் நடிக்கலாமா?'' என கேள்வி யெழுப்பியதுடன்... ""விஜய்யும், டைரக்டர் முருகதாஸும் சிகரெட் கம்பெனியிடம் பணம் வாங்கிக் கொண்டு இப்படி நடிக்கிறார்கள்'' என அதிரடி குற்றச்சாட்டைச் சொன்னார் ராமதாஸ்.

ராமதாஸின் தொடர் எதிர்ப்பு உண்டாக்கிய பர பரப்பால்... தமிழக அரசின் சுகாதாரத்துறை "சர்கார்' குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இப்போது கேரளாவிலும் அம்மாநில அரசு சுகாதாரத் துறை... விஜய்யின் சிகரெட் பேனருக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஜய் மற்றும் "சர்கார்' படக்குழு மீதும் கேரள விநியோகஸ்தர் மீதும் விளக்க நோட்டீஸ் அனுப்பி வழக்கு பதிந்துள்ளது.

"சிகரெட் பிடிப்பது தனிப்பட்ட விருப்பம்... என்றாலும் சிகரெட்டின் தீமை தெரிந்தும் பயன்படுத்துவது... விஜய் போன்ற "நாளைய முதல்வர் கனவு' நடிகர் களுக்கு இருக்கும் பொறுப்பின்மையையே காட்டுகிறது' என்கிற பொது அபிப்பிராயமும் ஏற்பட்டுள்ளது.

ந்நிலையில்தான்... விஷால், பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது இருக்கும் "அயோக்யா' போஸ்டர் வெளியானது.

vishal

"" "அயோக்யா' திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடைசெய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர்பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு'' என ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்தக் காட்சி போஸ்டருக்கு படக்குழுவினர் தரப்பில் நாம் விசாரித்தபோது... வேறு மாதிரியான விளக்கம் தருகிறார்கள்.

""கதாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரி. லஞ்சம் வாங்குவதுதான் அவனின் லட்சியமே. பணம் வாங்கிக் கொண்டு போதைப் பொருள் விற் பனையை ஊக்குவிக் கிறான். அப்படிப் பட்ட உச்சகட்ட அயோக்யத்தனம் நிறைந்த ஹீரோ... ஒரு கட்டத்தில் காக்கிச்சட்டையின் மகிமையையும், பெருமையையும் உணர்ந்து நேர்மையான அதிகாரியாக மாறுகிறான். கடைந்தெடுத்த அயோக்யன் கடமை வீரனாக மாறுவதைக் காட்டவே இப்படியான கான் செப்ட்டில் போஸ்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது'' என்கிறார்கள்.

போதை வஸ்துகளை படங்களில் திணிப்பதில் பெரிய வஸ்தாதுகளாகத் தான் இருக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்