சிக்கல்-1
கடந்த 21.09.2018 அன்று... "ராஜா ரங்குஸ்கி' என்கிற திகில் படத்தை தயாரித்து ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் சக்திவாசன். படம் ரிலீஸான அன்று இரவு ஏழு மணிக்கெல்லாம் "தமிழ் ராக்கர்ஸ்' இணையதளத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியிடப்பட்டது. இதையறிந்த சக்திவாசன், படத்தை டவுன்லோடு செய்து ஆராய்ந்தார். தமிழகமெங்கும் ‘"க்யூப்'’ மூலம் இந்தப் படம் வெளியாகியிருந்தது. "ஒவ்வொரு தியேட்டர் பிரதிக்கும் ஒரு வாட்டர் மார்க்' -க்யூப் நிறுவனத்தால் போடப்படுவது வழக்கம். அதன்படி இணையத்தில் வெளியான பிரதியில்... "கரூர் "கவிதாலயா' திரையரங்கத்திலிருந்து திருட்டுத்தனமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்து தயாரிப்பாளர் சங்கத்திலும், "க்யூப்' நிறுவனத்திலும் புகார் அளித்தார் சக்திவாசன். "கரூர் தியேட்டரிலிருந்துதான் களவாடப்பட்டது' என "க்யூப்'’ நிறுவனம் சர்டிபிகேட் தர... அதை இணைத்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் செய்தார் சக்திவாசன்.
""நான் டி.ஜி.பி.யிடம் முறையிட்ட பிறகே புகாரை ஏற்றார்கள். வெறும் காப்பிரைட் சட்டப் பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவதாகச் சொன்னார்கள். ஆனால்... "திருட்டு, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றம், தகவல்-தொழிநுட்ப சட்டம் மற்றும் காப்பிரைட் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். போடவேண்டும்' என நான் உறுதியாக இருந்ததால்... இந்தப் பிரிவுகளில் எட்டு செக்ஷன்களில் அந்த திரையரங்க உரிமையாளர் சுப்பிரமணியம் மற்றும் தியேட்டர் நிர்வாகிகள் என ஐந்து பேர்கள் மீது நீண்ட போராட்டத்திற்குப் பின் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது சென்னை அயனாவரம் காவல்நிலையம். ஆனால்... கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் உட்பட ஐந்துபேர்களும் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தபோது... மாவட்ட அரசு வக்கீலும், காவல்துறை அதிகாரிகளும் எட்டு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பதை சரிவர தெரிவிக்காததால்... அவர்களுக்கு நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கிவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர்களுக்கு தரப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளேன்'' என்கிறார் சக்திவாசன்.
மேலும் அவர் நம்மிடம் தெரிவிக்கையில்...
""எனது "ராஜா ரங்குஸ்கி' படம் கரூர் கவிதாலயா தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்ததால்... ஏற்பட்ட இழப்பு போல... ‘"ஒரு குப்பைக் கதை'’ படத்தை தயாரித்த அஸ்லாம் உட்பட பல சிறுபட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படித் திருட்டுத்தனமாக படங்களை பதிவு செய்யும் தமிழகத்தின் பத்து திரையரங்குகளை ஆதாரத்துடன் கண்டுபிடித்துக் கொடுத்தார்கள் சிறு தயாரிப்பாளர்கள். இதனால்... தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தனது " "சண்டைக்கோழி-2' படத்தை அந்த பத்து திரையரங்குகளுக்கும் தரப்போவதில்லை' என அறிவித்தார். இந்த அறிவிப்பில் விஷால் ஸ்ட்ராங்கா இருந்திருந்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைத்திருக்கும். ஆனால்... திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்... ‘"இப்படி குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு படம் தராம விட்டா... நாங்க ஒட்டுமொத்தமா "சண்டக்கோழி-2' படத்தை தியேட்டர்களில் போடமாட்டோம்' என மிரட்டலாகச் சொன்னதால்... பத்து தியேட்டர்களை பிளாக் லிஸ்ட்டில் வைக்கும் ஐடியாவை கைவிட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். "எந்த தியேட்டரில் திருட்டுப் பதிவு நடந்தது என்கிற ஆதாரத்தைக் கொடுத்தும்கூட... தங்கள் உறுப்பினர் பாதிக்கப்படக்கூடாது'’என தியேட்டர் சங்கம் செயல்படுது. ஆனா தயாரிப்பாளர் சங்கமோ... "ஒரு தியேட்டர்ல படம் திருட்டுத்தனமா பதிவு செய்யப்பட்டா... அதுக்கு தியேட்டர்காரங்கள குத்தம் சொல்ல முடியாது' என தனது உறுப்பினர்களின் நலனுக்கு எதிரா செயல்படுது. அதனால்... நிரந்தரத் தீர்வு வேண்டி, தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் கூடி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவிருக்கோம்'' என்றார் சக்திவாசன்.
சிக்கல்-2
""சிம்பு நடித்த "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தால் நஷ்டம். ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை. டப்பிங் பேச வரவில்லை... சிம்புவால் 20 கோடி லாஸ். அதை மீட்டுத்தரணும். அதுவரை சிம்பு புதுப்படங்கள்ல நடிக்க தடை போடணும்'' என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இதுபற்றிய விசாரணைக்கு வரும்படி சிம்புவுக்கு, சங்கம் பலமுறை அழைப்புவிட்டும் சிம்பு வரவில்லை. இப்போது சுந்தர்.சி. இயக்கத்தில் "வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என்கிற படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இது பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ‘"பிரச்சினையைப் பேசி முடித்த பிறகே இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்...' என விவாதிக்கப்பட்டு வரும் நிலையில்... "சிம்புவுக்கு எதிராக விஷாலும், மைக்கேல் ராயப்பனும் திட்டமிடுவதாக' சிம்பு ரசிகர்கள் ஆவேசம் காட்டிவருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.
""தனி மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது. பொறுமையாக இருங்கள்'' என சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்