டைரக்டர் சுசி கணேசனை பேட்டியெடுத்துவிட்டுத் திரும்பும்போது... தன்னை காரில் அடைத்து வைத்ததோடு, பாலியல்ரீதியாக தன்னை வற்புறுத்தியதாக கவிஞர்-இயக்குநர் லீனா மணிமேகலை "மீ டூ' புகார் தெரிவித்திருந்தார் சுசி கணேசன் மீது.

தன்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டார் லீனா மணிமேகலை. நான் தர இயலாததால் இப்படி ஒரு புகாரைச் சொல்வதாக சுசி கணேசன் சொன்னதோடு, லீனா மீது குற்ற வழக்கும், மானநஷ்டஈடு வழக்கும் தொடுத்துள்ளார்.

amalabal

Advertisment

இந்நிலையில் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

""தான் ஒரு bisexual என்று தைரியமாகவும், பெருமையாகவும் கூறும் லீனா மணிமேகலை எந்த கேள்விக்கும் தைரியமாக பதில் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவரின் மனைவியாக மீடியா கேட்ட அதே கேள்விகளை நானும் கேட்கிறேன். பேட்டி நடந்த தேதி, நேரம், எவ்வளவு நேரம் நடந்தது, சம்பவம் நடந்த தெருவின் பெயரையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவரின் பொய்களை ஆதரிப்போர் இந்த சாதாரண உண்மைகளைத் தெரிவிக்குமாறு தயவு செய்து அவரிடம் கேளுங்கள். புரட்சிகரமான கவிஞரான அவருக்கு இது அசௌகரியமான கேள்விகளாக இருக்க முடியாது. நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்களை மனிதர்கள் நன்றாக நினைவில் வைத்திருப்பார்கள். கற்பனை சம்பவத்தை அவரால் 13 ஆண்டுகளாக நினைவில் கொள்ளமுடிகிறது என்றால், அது தொடர்பான எளிய விஷயங்களும் நினைவிருக்க வேண்டாமா? அவர் "மீ டூ' இயக்கத்தை அவமதிக்கிறார். "மீ டூ' இயக்கத்தின் கறுப்பு ஆடு அவர்'' என காரசாரமாகச் சொல்லியுள்ளார் மஞ்சரி.

ஆனால்... லீலா மணிமேகலைக்கு ஆதரவாகவும், தனக்கும் சுசி கணேசன் தொல்லை தந்ததாகவும் அமலாபால் "மீ டூ' புகார் தெரிவித்திருப்பதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Advertisment

அமலாபால் கடந்த பிப்ரவரி மாதமே ஒரு "மீ டூ' புகாரைச் சொன்னார்.

வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்காக நடனப்பயிற்சி மேற்கொண்டிருந்த அமலாபாலிடம், வெளிநாட்டில் சிலருடன் விருந்தில் கலந்துகொள்ள வற்புறுத்தி பேரம் பேசினார் அழகேசன் என்பவர். அவர் மீது அமலாபால் நடிகர் சங்கத்தில் உடனடியாக புகார் தெரிவிக்கவே... நடிகர் சங்க புகாரின் பெயரில் அழகேசன் கைது செய்யப்பட்டார்.

metoo""என்னை மாமிச துண்டுகளைப்போல வியாபாரம் செய்ய முயன்றார் அந்த நபர்'' என காரணமும் சொல்லியிருந்தார் அமலாபால்.

அதனால் அமலாபால் இப்போது சுசி கணேசன் மீது சுமத்தியிருக்கும் "மீ டூ' புகாரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

""நான் இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத்தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்தப்பெண் என்ன பாடுபட்டிருப்பாள் என்பது எனக்குப் புரிகிறது. நான் அவர் இயக்கிய "திருட்டுப் பயலே-2' படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் இயக்குநர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடல் ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன். அந்தக் கொடுமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லியிருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கிவிடுகிறது. அங்கிங்கெனாதபடி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்துவருகிறது.

தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.

ஆன்மிகத் துறையிலும், கலைத்துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளது. இதேபோல மற்ற துறைகளிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் "ம்ங் ற்ர்ர்' குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும். அரசாங்கமும், நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்கவேண்டி பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்டரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்''’என்று தனது டுவிட்டர் "மீ டூ'’பதிவில் அமலாபால் சொல்லியுள்ளார்.

அமலாபால் இந்தப் பதிவை வெளியிட்ட ஓரிருமணி நேரத்தில் இன்னொரு பதிவையும் வெளியிட்டார்.

""டைரக்டர் சுசி கணேசனும், அவரின் மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். என் நிலையை விளக்கலாம் என்று நினைத்து போனை எடுத்தேன். அவரின் மனைவியை நான் சமாதானம் செய்ய முயன்றபோது, சுசி கணேசன் என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதைக் கேட்டுச் சிரித்தார்.. இருவரும் சேர்ந்து என்னைப் பற்றி கேவலமாக பேசினார்கள். இப்படிப் பேசி என்னை அச்சுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள்'' என அமலாபால் தெரிவிக்க...

அமலாபாலை சுசி கணேசன் மிரட்டிய விஷயம் நடிகர் சங்கத்தின் கவனத்திற்கும் போயுள்ளது.

ar-trishaஏற்கனவே... சுசி கணேசன் மீது புகார் சொன்ன லீனாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தன் வயதான அப்பாவுக்கு போன் செய்து சுசி கணேசன் மிரட்டியதாக நடிகர் சித்தார்த் சொல்லியிருந்த நிலையில்... கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் ஒரு நடிகை, "மீ டூ' புகார் செய்ததும், அதற்காக மிரட்டப்பட்டதும் இண்டஸ்ட்ரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

"மீ டூ'வில் வைரமுத்து மீது குற்றம்சாட்டிய இரண்டு பெண்கள் "ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வைப்பதாகச் சொன்னார்... அறிமுகப்படுத்தி வைத்தார்' என்று குறிப்பிட்டுள்ள நிலையில்...

"மீ டூ' இயக்கம் குறித்து தனது டுவிட்டரில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.

""புகார் சொல்பவர்கள் மற்றும் புகாருக்கு ஆளானவர்களில் சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நமது துறை பெண்களுக்கு மரியாதை தரும் துறையாக மாறுவதை நான் பார்க்க விரும்புகிறேன். நானும், எனது குழுவும் அனைவருக்கும் மரியாதை கிடைக்கும் சூழலை உருவாக்க முயல்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் சுதந்திரம் கொடுத்துள்ளது. அதே சமயம் இது தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்'' என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து சார்பில் சில விளக்கங்களை ரஹ்மானுக்கு தரவும் முயற்சிகள் நடக்கிறது என்று சொல்லப்படுகிறது.

"மீ டூ' புகாரில் சிக்கிய பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் ஏழு பேர்களை "மியூஸிக் அகாடமி'‘மார்கழி விழாவில் பங்கேற்று நிகழ்ச்சி செய்ய தடை போட்டிருக்கிறது அகாடமி நிர்வாகம்.

"மீ டூ' புயல் அடித்துக்கொண்டிருக்கும் வேளையில் பிரபல நடிகைகள் பிரபலங்களைப் பற்றி "மீ டூ' புகார் சொல்வதுபோல் பரபரப்பு ஏற்படுத்த... பிரபலங்களின் வலைப்பக்கங்களை "ஹேக்' செய்ய ஒரு கும்பல் தீவிர முயற்சிகளில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. உஷாரான த்ரிஷா இதை உடனடியாக வெளியுலகிற்கு தெரியப்படுத்திவிட்டார்.

இப்போது ராகுல் பிரீத்சிங்கின் இன்ஸ்ட்டாகிராம் வலைப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவரும் தன் ரசிகர்களுக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.

""மீ டூ' அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும்... ‘பிடிக்காதவர்களை "மீ டூ'வில் மாட்டு'' என்கிற செயல் நடந்துவிடக்கூடாது.

உதாரணத்திற்கு...

"நடு ராத்திரியில் என் கதவைத் தட்டினாங்க' என தியாகராஜன் மீது "மீ டூ' புகார் சொல்லியிருந்தார் போட்டோகிராபர் பிரித்திகா மேனன்.

பிரித்திகா மீது வழக்குத் தொடுப்பதாக அறிவித்தார் தியாகராஜன். இந்நிலையில் பிரித்திகா தான் போட்ட பதிவை நீக்கியதுடன், தனது வலைத்தள கணக்கையும் மூடியிருக்கிறார்.

பரபரப்பு "மீ டூ' புகார்களை லாரன்ஸ் ராகவேந்திரா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மீது சுமத்தினார் ஸ்ரீரெட்டி. மீடியாக்களிலும் இந்தச் செய்திகள் முன்னுரிமை பெற்றன. ஆனால் இப்போது லாரன்ஸை தனியே சந்தித்து சமரசமாகிவிட்டார் ஸ்ரீரெட்டி.

ஆக... பிரபலங்களை மிரட்ட மீடியாவை மிஸ்யூஸ் பண்ணிக்கொண்டாரா ஸ்ரீரெட்டி என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆக... எல்லா "மீ டு' பதிவுகளுமே சரியானதுதானா? என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

-ஆர்.டி.எ(க்)ஸ்

______________

அதுபோல!

2004-ல் நடந்ததாக வைரமுத்து மீது "மீ டூ' புகார் சொன்ன சின்மயி 2014-ல் தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்து ஆசி பெற்றார்.

அதுபோல... சுசி கணேசன் மீது "மீ டூ' புகார் சொல்லியிருக்கும் லீனா மணிமேகலை, சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின் சுசி கணேசனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அதுபோல... "திருட்டுப் பயலே-2' படப்பிடிப்பின்போது நிகழ்ந்ததாக சுசி கணேசன் மீது "மீ டூ' புகார் சொல்லியிருக்கும் அமலாபால்... ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகி, படத்தின் "சக்ஸஸ் மீட்' விழாவில் சுசி கணேசனுக்கு கேக் ஊட்டிவிட்டார். இதோ அந்தப் புகைப்படம்...