சென்னையில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தவரான பத்மாலட்சுமி, குழந்தைப் பருவத்திலேயே தாயாருடன் அமெரிக்காவில் குடியேறினார். மாடலிங் உலகில் நுழைந்து, சினிமா, சீரியல் என கலக்குவதோடு, பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார்.
"சாத்தானின் இரவுகள்' என்கிற நாவலை எழுதியதற்காக உலக முஸ்லிம் அரசுகளின் கண்டனத்திற்கும், மத தீவிரஆதரவாளர்களின் கொலை மிரட்டலுக்கும் ஆளாகி பிரபலமடைந்த சல்மான்ருஷ்டியை 2004-ல் திருமணம் செய்தார். தன்னைவிட பல வயது மூத்தவரான ருஷ்டியை பத்மா திருமணம் செய்துகொண்டபோது உலகம் வியந்தது!
ஆனால் மூன்று ஆண்டுகளிலேயே அவர்களின் வாழ்க்கை கசந்துபோனது. அதிலும் குறிப்பாக பத்மாவுக்குத்தான் கசப்பு அதிகம்.
"ருஷ்டி செக்ஸில் அதீத நாட்டம் கொண்டவராக இருந்தார். ஒருமுறை நான் உடல்நலமில்லாமல் அவதியுற்று, வீட்டில் படுத்திருந்தபோதும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்... என்னுடன் செக்ஸ் வைக்க என்னை வற்புறுத்தினார்'’என 2007-ல் பல பரபரப்பான குற்றச்சாட்டுகளை ருஷ்டி மீது சுமத்தினார் பத்மா.
ருஷ்டியைப் பிரிந்தபின், ஹாலிவுட் நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் பத்மா. அதன்பின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல்அதிகாரியான ஆடம் டெல்லை மணந்தார். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா தியாடெல் என்கிற டீன்ஏஜ் மகள் இருக்கிறாள். ஆயினும் டெல்லைப் பிரிந்து மகளுடன் நியூயார்க்கில் வசித்துவருகிறார் பத்மா.
இப்போது "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் பத்மா எழுதிய ஒரு கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபகாலமாக ஹாலி, பாலி, கோலி, மல்லு, சாண்டல்... என ஆல்வுட்டுகளிலும் பாலியல் தொல்லை எனும் அக்கப்போர் நடப்பதாக நடிகைகள் வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். இதேபோல மற்ற துறைகளின் பெண் பிரபலங்களும், "நானும்தான் பாதிக்கப்பட்டேன்' என்கிற அர்த்தத்தில் "மீ டூ' என்ற தலைப்பில் சமூக வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார்கள். பத்மாவும் இதில் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு ப்ரட் என்பவரை பரிந்துரைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
""அதிபர்... தொழிலதிபராக இருந்தபோது என்னை...'' என சில நடிகைகள் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லியிருந்தனர். இப்போது ட்ரம்ப் பரிந்துரைத்திருக்கும் ப்ரட்டையும் பாலியல் குற்றச்சாட்டு புரட்டி எடுக்கிறது. ப்ரட்டுடன் பள்ளியில் படித்தபோது... பாலியல் செய்ததாகவும், கல்லூரியில் படித்தபோது... பாலியல் செய்ததாகவும் இரண்டு பெண்கள் சொல்லியுள்ளனர்.
""அப்பவே போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணீருக்கலாமே... ஏன் பண்ணல. இது பொய் குற்றச்சாட்டு'' என ட்ரம்ப் நியாயம் பேசுகிறார்.
இதற்குத்தான் பத்மா பதில் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்போ உலக பரபரப்பு.
அமெரிக்காவிலிருந்து ஏழு வயதில் என் பாட்டியைப் பார்ப்பதற்காக நான் சென்னை வந்தேன். என் உறவுக்காரர் ஒருவர் என் இடுப்புக்குக் கீழே தொட்டார். என் கைகளை அவரின் அந்தரங்கத்தில் வைத்துக்கொண்டார். நான் நாடு திரும்பி, என் அம்மாவிடம் சொன்னபோது... "வாயை மூடு' எனச் சொல்லிவிட்டார்கள். பதினாறு வயதில் என்னிடம் நண்பனாகப் பழகியவன், என்னை பலவந்தமாக பாலியல் உறவுக்கு ஆட்படுத்தினான்.
இதையெல்லாம் அப்போது வெளியே சொல்ல பயம். போலீஸ், கேஸ் என வருமோ என அச்சம். அதனால் அப்போது சொல்லவில்லை. இப்போது சொல்லமுடிகிறது. அதுபோலத்தான் ப்ரட் மீது இப்போது பாலியல் குற்றம் சுமத்தும் அந்தப் பெண்கள்... அப்போது சொல்ல அச்சப்பட்டிருப்பார்கள்''’ எனச் சொல்லியிருப்பதுடன்... ""யாராவது உன் அந்தரங்க இடங்களை தொடவந்தால்... உன்னை தற்காத்துக்கொள்ள கத்து, கூச்சல்போட்டு அச்சுறுத்து... பயப்படாதே... என என் மகளுக்கு சொல்லி வளர்க்கிறேன்'' எனவும் சொல்லியுள்ளார் பத்மாலட்சுமி.
-ஆர்.டி.எ(க்)ஸ்