ரஜினி பட ரகசியம்!
ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் "2.0' படத்தின் பட்ஜெட் ஐநூறு கோடியை நெருங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. 2015-ன் இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் வேலைகள் இப்போதுதான் முடிந்திருக்கின்றன. நீண்டகால தயாரிப்பில் இருந்ததால்... செய்யப்பட்ட முதலீட்டுக்கான வட்டி மட்டும் ரூபாய் 140 கோடி ஆகிவிட்டது. அதனால் பட்ஜெட் தொகை பெரிதாகிவிட்டதாம்.
அஜீத் பட நிலவரம்!
அஜீத், டைரக்டர் சிவா, சத்யஜோதி ஃபிலிம்ஸ் கூட்டணியில் வந்த "விவேகம்' படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதால்... அதைச் சரிக்கட்டும் விதமாக மீண்டும் அதே கூட்டணியில் "விஸ்வாசம்' படம் உருவாகிவருகிறது.
பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தினை "விவேகம்' வாங்கியவர்களுக்கு தராமல், புதிய விநியோகஸ்தர்களுக்கு தர ஏற்பாடு நடப்பதாக சலசலப்பு ஏற்பட்டது. அஜீத், தியேட்டர் அதிபர்கள் சங்க இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் உட்பட சிலரின் தலையீட்டால் சுமுகநிலைமை ஏற்பட்டு, சிக்கல் தீர்ந்திருக்கிறது.
உதாரணத்திற்கு... "விவேகம்' படத்தை வாங்கிய பிரபல விநியோகஸ்தர் கோவை முருகானந்தத்திற்கு நான்குகோடி ரூபாய் நஷ்டம். "விஸ்வாசம்' படத்தை இன்றைய மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப விலை நிர்ணயித்து, அதில் நஷ்டத்தொகையைக் கழித்துக்கொண்டு... முருகானந்தத்திற்கே படத்தை தருவது.
இப்படி ஒவ்வொரு ஏரியா விநியோகஸ்தருக்கும் நஷ்டம் சரிசெய்யப்படுகிறது.
நஷ்டத்தை பணமாகவே கேட்கும் விநியோகஸ்தர்களுக்கு வேறொரு திட்டமும் சொல்லியிருக்கிறது சத்யஜோதி நிறுவனம். அது...
"விஸ்வாசம்' படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து சத்யஜோதி படம் தயாரிக்கிறது. அந்தப் படத்தின் வியாபாரம் முடிந்தபின்... . செட்டில்மெண்ட் செய்யப்படும்... என்பதுதான்.
தாணுவின் தாராளம்!
சினிமா அமைப்புகளில் பாரம்பரியமான முக்கிய அமைப்பு "தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை' எனப்படும் ஃபிலிம் சேம்பர்.
சேம்பருக்கு புதிய அலுவலக கட்டடம் பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட நிதிக்காக 50 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறார் சேம்பரின் துணைத்தலைவரும், தயாரிப்பாளருமான "கலைப்புலி' எஸ்.தாணு.
சேம்பர் வளாக கட்டிடத்தில் நவீன வசதிகளைக் கொண்ட மீட்டிங் ஹால்’ கட்டுமானத்திற்கான முழு பட்ஜெட் 50 லட்சம். அதைத்தான், தன் சொந்தப் பணத்தில் கொடுத்திருக்கிறார் தாணு.
இதனால் மகிழ்ந்த சேம்பர் நிர்வாகம்... அமையவிருக்கும் மீட்டிங் ஹாலுக்கு மறைந்த திருமதி தாணுவின் நினைவாக "கலா தாணு மீட்டிங் ஹால்' என பெயர் சூட்டுகிறது.
விஜய்க்கு விருது!
ஏற்கனவே இங்கிலாந்து சர்வதேச திரைப்பட விருது போட்டியில் "சிறந்த வெளிநாட்டுப் படம்' பிரிவில் விஜய்யின் "மெர்சல்' விருது வென்றது. இதையடுத்து "இன்டர்நேஷனல் அச்சீவ்மெண்ட் ரெககனைஷன்' அவார்டின் "சர்வதேச சிறந்த நடிகர்' போட்டியில் விஜய் இடம் பிடித்தார். முதல் சுற்றில் பல நாடுகளைச் சேர்ந்த எட்டு நடிகர்களுடன் மோதிய விஜய், இரண்டாம் சுற்றில் ஆறு நடிகர்களுடனும், இறுதிச் சுற்றில் நான்கு நடிகர்களுடனும் மோதினார். உலகம் முழுக்க ரசிகர்கள் இணைய ஓட்டளித்து தேர்ந்தெடுத்ததன்படி... "சர்வதேச நடிகர் விருது'வை விஜய் வென்றதாக செப்டம்பர் 23-அன்று காலை 5:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.டி.எ(க்)ஸ்