எங்கிருந்து வந்தோமோ அந்த பெற்றோர்களையே எக்ஸ்டெண்டட் ஃபேமிலி (extended family) என்று குறிப்பிடும் அளவுக்கு மாறியிருக்கிறது வாழ்க்கை. எவ்வளவு வேகமாக ஓடி எத்தனை தங்கம் வென்றாலும் திரும்பி வந்து இளைப்பாற ஒரு நிழல் கண்டிப்பாக வேண்டும். அப்படித்தான் மனித மனம் அன்பைத் தேடும். பெற்றவர்களின் அன்பு என்பது அப்படிப்பட்ட தேவையான நிழல்தான் நமக்கு என்பதை ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடம் நினைவுபடுத்த வந்திருக்கிறது ஒரு திரைப்படம். வாழ்க்கையின் சோகங்களை மேக்-அப் போடாமல் முழு வீச்சுடன் காட்டுகின்ற படங்கள் ஒரு வகையில் சிறந்த படங்கள் என்றால், வாழ்க்கையின் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை, பாடங்களை மென்மையாகச் சொல்லும் படங்களும் சிறந்த படங்களே. அந்த வகை முயற்சியாக வெளிவந்திருக்கிறது இயக்குநர் ராதாமோகனின் "60 வயது மாநிறம்'.
"அல்ஸைமர்' (ஞாபக மறதி) நோயால் பாதிக்கப்பட்ட அறுபது வயது அப்பா பிரகாஷ்ராஜை ஒரு முதியோர் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு தன் வேலையில் முழு கவனத்துடன், அமெரிக்கா செல்லும் முயற்சியில் இருக்கிறார் விக்ரம் பிரபு. "என்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியவில்லை', "சரியாக செட்டில் பண்ணவில்லை' என அப்பாவின் மேல் பல புகார்கள் கொண்ட அவர் எப்போதாவது சென்று அவரை சந்திக்கிறார், தேவையானதை வாங்கித் தருகிறார். அவ்வளவுதான் அப்பா மகன் உறவு. ஒருமுறை இப்படி அப்பாவை சந்தித்து வெளியே அழைத்துச் சென்று வரும்போது விக்ரம் பிரபுவின் அலட்சியத்தால் பிரகாஷ்ராஜ் தொலைந்துவிடுகிறார். இன்னொருபுறம் சமுத்திரக்கனி டீம் ஒரு கொலையை செய்துவிட்டு அதை மறைக்கும் முயற்சியில் இருக்கிறது. இவர்களிடம் சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். என்ன நடந்தது என்பதே "60 வயது மாநிறம்'.
இயக்குநர் ராதாமோகன் "அழகிய தீயே', "மொழி', "அபியும் நானும்' என அழகாக ஈர்த்தவர். அவருக்கேற்ற கதையை கன்னடத்திலிருந்து பெற்றுத் தந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணுவும் பிரகாஷ்ராஜும். இந்தப் படத்தையும் பெரிய அதிர்வுகள் இல்லாமல் மென்மையாக நடத்திச் செல்கிறார். பிரகாஷ்ராஜுக்கு எந்த கதாபாத்திரமும் கடினமல்ல. அதைப்போலவே இந்தப் படத்திலும் மிகஎளிதாக, ஒரு முதியவராக நம் மனதில் பதிகிறார். ஒரு காட்சியில், அமர்ந்திருக்கும் புத்தர் சிலை முன்பு, அவரும் ஒரு புத்தர் போலவே அமர்ந்துகொண்டு தன் பழைய நினைவுகளைப் பகிரும் இடம் ஒரு சாம்பிள்.
விக்ரம் பிரபுவுக்கு ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல கதை அமைந்துள்ளது. தேவைக்கேற்ற நடிப்பு. அப்பா மீது அவர் காட்டும் வெறுப்பை நம்மிடம் அவர் சம்பாதிப்பதே அவரது நடிப்பிற்கான வெற்றி. சமுத்திரக்கனி, ஒரு ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிக்கு அடியாளாக நன்றாக நடித்தாலும், நமக்கு அவரை நல்லவராகவே பார்க்கத் தோன்றுகிறது. "மேயாத மானி'ல் தங்கையாகக் கவர்ந்த இந்துஜா, இந்தப் படத்தில் நாயகியாக ஈர்க்கிறார். அளவான, அழகான நடிப்பு. இவர்களைத் தாண்டி படத்தில் நம்மைக் கவர்வது இளங்கோ குமரவேல். அவர் பேசும் ஒவ்வொரு வரியும் சிரிக்க, ரசிக்க வைக்கின்றது. தமிழ் சினிமாவில் இவர் அதிகம் பயன்படுத்தப்படாதது வருத்தமே.
அவசர வாழ்வில் பெற்றோரை கவனிக்க மறப்பதால், நாம் இழப்பது வெறும் உறவுகளை அல்ல; அவர்களிடம் இருக்கும் பெரும் அன்பையும் அனுபவங்களையும் வாழ்வியல் நெறிகளையும் என்பதை பல காட்சிகளில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். "உங்கள் திலகம்' என்ற ஒற்றை வார்த்தை கொடுக்கும் காதலும் வேகமும், அல்ஸைமர் பாதிப்பால் தனக்கு எல்லாமே மறக்கும் நிலை ஏற்பட்டால் தன்னைப்பற்றி, தானே தெரிந்துகொள்ள "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் பேசிப் பதியும் அந்த வீடியோ, கருப்பு நாய் வெள்ளை நாய் கதை, கணவனையே மறந்துவிட்ட பெண்ணுக்கு பெரும் துணையாக இருக்கும் கணவர் என அழகழகான குட்டிக் குட்டி எபிசோடுகள் ராதாமோகன் ஸ்பெஷல்.
படத்தை இன்னும் பெரிதாகத் தூக்கி நிறுத்துவது விஜியின் வசனங்கள். பிரகாஷ்ராஜ் பேசும் ஒவ்வொரு விஷயமும் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, குமரவேல் என ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைவதுடன் வரும் வசனங்கள் நமக்கும் பண்பை போதிக்கின்றன. ""பொதுவாவே ஹஸ்பெண்டோட நண்பர்கள் மேல வொய்ஃப்புகளுக்கு நல்ல அபிப்ராயம் இருக்குறதில்ல சார், ஆனா ஹஸ்பண்டுகள் அப்படியில்ல, "இனிமேல் 500, 1000 நோட்டுகளெல்லாம் செல்லாதுன்னு பிரதமர் 8 மணிக்கு அறிவிச்சப்போ நான் 8.30 மணி வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன், என்கிட்டே இருநூறு ரூபாதான் இருந்துச்சு' போன்ற காமெடி வசனங்கள் சிரிப்பில் கலங்கடிக்கின்றன. அமைதியாக செல்லும் படத்தில் அதிகமாக ரசிக்கவைக்கின்றன இந்த வசனங்கள்.
இளையராஜாவின் பின்னணி இசை சரியான இடங்களில் தரும் அழுத்தம் நம் மனதிலும் ஏற்படுகிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பல அழகான ஃப்ரேம்கள் இருக்கின்றன, படம் முழுவதுமே கண்களுக்கு இதமாக இருக்கிறது.
சரி அந்தக் கருப்பு நாய், வெள்ளை நாய் கதை என்ன? நம் எல்லோருக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் இருக்கும். கருப்பு நாய் கெட்ட குணங்களையும் வெள்ளை நாய் நல்ல குணங்களையும் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கும். எந்த நாய் ஜெயிக்கும் தெரியுமா? அதை படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லுவார். "அதென்ன, கருப்புதான் கெட்டதா இருக்கணுமா?' என்று கேட்டால் அதையும் சமன்படுத்த படத்தில் ஒரு வசனம் உண்டு. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு தகப்பன் தன் பிள்ளையை வளர்ப்பது கடமை, ஒரு பிள்ளை தன் இஷ்டம்போல் இருப்பது உரிமை என்பதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு தந்தைக்குள்ளும் இருக்கும் அன்பு, அவருக்கு வயதானாலும், நினைவு தவறினாலும் நமக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக நினைவுபடுத்தியிருக்கிறது இந்தப் படம். தந்தையென்றால் தந்தை மட்டுமல்ல, தாயும்தான். அறுபது வயது மாநிறம்... அனுபவத்தின் வயது; அன்பின் நிறம்.
-வசந்த்