இந்தியில் ஆர்வம்!
இந்தியில் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ரங்கி ரே' உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டிலும் ஒரு மார்க்கெட் வைத்துள்ளார் தனுஷ். அதனால் அவருக்கு நெருக்கமான இயக்குநர்கள் யாரேனும் அழைத்தால் தட்டாமல் தலையசைத்து விடுகிறார். அந்த வகையில் இந்தியில் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதல் படமாக வந்த ராஞ்சனா படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து வரும் படக்குழு ஹீரோயினாக கியாரா அத்வானியை கமிட் செய்துள்ளதாம். இதன்மூலம் முதல்முறையாக முன்னணி பிரபலங்களான தனுஷ் - கியாரா அத்வானி இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தனுஷ், ஏகப்பட்ட படங்கள் தமிழிலே கைவசம் வைத்துள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக திரை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜெயிலர்-2!
ரஜினியின் ஜெயிலர், எதிர்பார்த் ததை விட வசூலில் சாதனை படைத்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் செம ஹேப்பி மூடில் உள்ளது. அதனால் ரஜினி, நெல்சன், அனிருத் என படக்குழுவினருக்கு செக் மற்றும் கார் ஒன்றை பரிசாக வழங்கி நெகிழ வைத்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இதே குஷியில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வமாக இருக்கிறாராம் கலாநிதி மாறன். படம் வெளியீட்டிற்கு முன்பு இப்படம் ஹிட்டானால் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகவும், ஒரு வேளை தோல்வியடைந் தால் முதல் பாகத்தோடு நிறுத்திவிடலாம் என யோசித்து வைத்திருந் தாராம். ஆனால் படம் அதிரி புதிரி ஹிட்டடித்து லாபத்தை வாரி வழங்கியுள்ளதால் தற்போது "ஜெயிலர்லி2' உருவாக்கத் திட்டம் தீட்டி யுள்ளார். அதற்கான லீட் தான் ஜெயிலரின் க்ளைமேக்சில் விநாயகன் பேசும் வசனமாம். பார்ட் 2-வுக்காக ரஜினியிடமும் நெல்சனிடமும் தனது நிறுவனத்தில் மீண்டும் ஒரு படம் பண்ணவேண்டும் என அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இந்த அன்புக் கட்டளையால் ஜெயிலர் 2 உருவாக வாய்ப்பு அதிகமுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
நெகடிவ் நம்பிக்கை!
கதாநாயகி கேரக்டரைத் தாண்டி வில்லி கேரக்டரிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்தில் நெகடிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஏற்கெனவே எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து வரலட்சுமியும் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நெகட்டிவ் ஷேடில் அவர் நடித்த கதாபாத்திரங்களில் இப்படம் முக்கியமானதாக இருக்கும் என வரலட்சுமி நம்புகிறாராம். ஏனென்றால் படத்தில் அவரது கதாபாத்திரம் வலுவானதாக எழுதப்பட்டுள்ளதாம்.
கங்குலி பயோபிக்!
3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து 'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது "லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியில் கங்குலி யின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளாராம். கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் இருந்த நிலையில் தற்போது ஆயுஷ்மான் குரானா தேர்வாகியுள்ளாராம். வருகிற டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-கவிதாசன் ஜெ.