நானி ஜோடி!
நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸின் "சலார்' மற்றும் ஹாலிவுட்டில் உருவாகும் "தி ஐ' ஆகிய இரண்டு படங்களைக் கைவசம் வைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருந்தாலும் தொடர்ந்து தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். அங்கு முன்னணி நடிகர்களான பவன்கல்யாண், மகேஷ்பாபு, ராம்சரண், ரவிதேஜா உள்ளிட்ட பலருடன் நடித்த அவர், தற்போது மற்றொரு முன்னணி நடிகரான நானியுடன் முதல்முறையாக இணைந்துள்ளார். ஷூர்யுவ் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில், நானி தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள்தாகூர் நடிக்க முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இந்த ஷெட்யூல் நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன்.
வீரப்பன் மகள்!
வீரப்பன் மறைவிற்கு பிறகு அவரைப் பற்றிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ஆவணப் படங்கள் பல வெளிவந்தபோதும், அவரது குடும்பத்தினர் எந்த படத்திலும் நேரிடையாக நடிக்கவில்லை. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் மூத்த மகள் வித்யா ஆகிய இருவரும் அரசியல் கட்சிகளில் இணைந்து இயங்கிவரும் சமயத்தில் இளைய மகள் விஜயலட்சுமி, சமீபத்தில் திரைத் துறையில் களம் இறங்கியிருக்கிறார். கே.என்.ஆர்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் "மாவீரன் பிள்ளை'. இந்த திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித் துள்ளார். மது ஒழிப்பு மற்றும் விவசாய பிரச்சினை களைக் குறித்து அதிகம் பேசிய இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பாராட்டைப் பெற்றது.
இன்று நேற்று... ஆதி!
இசையமைப் பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, தற்போது ஹீரோவாக பல படங்களில் பிசியாக உள்ளார். ஏ.ஆர். கே.சரவண் இயக்கும் "வீரன்' மற்றும் கார்த்திக் வேணு கோபாலன் இயக்கும் "பி.டி சார்' உள்ளிட்ட படங்களில் நடிக் கிறார். மேலும் ஒரு பெயரிடாத படத்தை இயக்கி, தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி, ஒரு சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு பலரது பாராட்டைப் பெற்ற படம் "இன்று நேற்று நாளை'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உரு வாகிறது. தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலுக்குப் பதிலாக ஹிப்ஹாப் ஆதி நடிக்கிறார். முதல் பாகத்தை ரவிக்குமார் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை அவரது உதவியாளர் ஒருவர் இயக்குகிறார். கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
கவின் ஓ.கே!
"டாடா' பட வெற்றியைத் தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் கவின். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைப்பதாக இருந்தது. மேலும் கதாநாயகியாகப் பிரியங்காமோகன் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து அனிருத் விலகிவிட்டார். மேலும் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போகிறது. இந்த இடைவெளியில் ஒரு புதிய படத்தில் நடிக்க கவின் முடிவெடுத்துள்ளார். அதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார். அப்படி கதை கேட்டதில் "பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டது. இதனால் இளன் கதைக்கு ஓ.கே. சொல்லியுள்ள கவின், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பிக்கச் சொல்லியுள்ளார். அதனால் இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் இளன்.
ரீமேக் ராஜா!
இயக்குநர் மோகன்ராஜாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ரீமேக் படங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். "கண்டேன் காதலை', "சேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன் கடைசியாக மலையாள படமான "தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து அதே தலைப்பில் தமிழில் ரீமேக் செய்தார். இப்போது 1972ஆம் ஆண்டு வெளியான "காசேதான் கடவுளடா' படத்தை மிர்ச்சி சிவா, ப்ரியாஆனந்த்தை வைத்து அதே தலைப்பில் ரீமேக் செய்துவருகிறார்.
-கவிதாசன் ஜெ.