ஆதியே துணை!

anaga

Advertisment

மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை அனகா. "ஹிப் ஹாப்' ஆதியின் "நட்பே துணை' படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர். பின்பு சந்தானத்துக்கு ஜோடியாக "டிக்கிலோனா' மற்றும் வைபவுக்கு ஜோடியாக "பபூன்' படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்பை பெற்றுத்தரவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த அனகாவுக்கு நம்பிக்கைதரும் விதமாக, "ஹிப் ஹாப்' ஆதி, தன் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். "வீரன்', "பி.டி.சார்' என ஹீரோவாக பிசியாக இருக்கும் "ஹிப்ஹாப்' ஆதி, அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து அதைத் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத் தில்தான் அனகாவை ஹீரோயினாக புக் செய்துள்ளார். படத்தின் முழு படப்பிடிப்பையும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடத்தி முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ஓ.கே!

rajini

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "ஜெயிலர்' படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ரஜினி, அடுத்ததாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜை டிக் செய்து வைத்துள்ளார் ரஜினி. இது தொடர்பாக அவரை அழைத்துக் கதை ரெடிபண்ணச் சொல்லியுள்ளார். இந்த சந்திப்பு "லியோ' படம் தொடங்குவதற்கு முன்பாக நடந்துள்ளதாம். அப்போது ரஜினிக்கு ஓ.கே. சொல்லிவிட்டுப் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற லோகேஷ்கனகராஜ் சென்னை திரும்பியவுடன் மீண்டும் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்த தகவல் "லியோ' படத் தயாரிப்பாளர் லலித் காதுக்குப் போக, இப்படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். மேலும் ரஜினியிடமும் ஓ.கே. வாங்கி அவரது கால்ஷீட்டிற்குக் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம், பல முன்னணி நிறுவனங்களும் இப்படத்தைத் தயாரிக்க போட்டி போடுகின்றன. முன்னதாக "விக்ரம்' படம் வெளியான சமயத்தில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகவும் அதை கமல் தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

தெலுங்கில் இசைப்புயல்!

Advertisment

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் இசை யமைத்துவரும் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மணிரத்னத்தின் "பொன்னி யின் செல்வன் 2' பட பணிகளில் பிசியாகவுள்ளார். மேலும் சிவகார்த்தி கேயனின் "அயலான்', உதயநிதியின் "மாமன்னன்', ரஜினியின் "லால் சலாம்', கமலின் 234வது படம் என ஏகப்பட்ட தமிழ் படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி தெலுங்கு படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அது என்ன படம் என்று விசாரிக்கையில் ராம்சரண் நடிக்கும் புதிய படம் என்கின்றனர் தெலுங்கு திரை வட்டாரங்கள். "ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த "உப்பெனா' படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ளார். இப்படம் கிராமத்துப் பின்னணியில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் மூலம் ராம்சரண் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், குறைவான படங்கள் மட்டுமே தெலுங்கில் பணியாற்றியுள்ளார். அதில் பெரும்பாலும் தமிழ்ப் படத்தின் ரீமேக் அல்லது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான படங்களாகவே இருக்கின்றன.

நம்பிக்கை புத்திரன்!

arr

"நேரம்', "பிரேமம்' என சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். கடைசியாக இவர் இயக்கிய "கோல்ட்' படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து "ரோமியோ பிக்சர்ஸ்' ராகுல் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இப்படம் அவரது முந்தைய படங்களைப் போலவே காதலை மையப்படுத்தி அமைந்துள்ளதாம். இந்த நிலையில் இப்படத்திற்கான ஹீரோ தேடுதல் வேட்டையில் அல்போன்ஸ் புத்திரன் இறங்கியுள்ளார். அந்தவகை யில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க அவரிடம் பேசி வருகிறார். விஜய்சேதுபதி தரப்பு இன்னும் முடிவாக ஏதும் சொல்லவில்லையாம். இருப்பினும் நல்ல பதில்தான் வரும் என நம்பிக்கையில் இருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.

-கவிதாசன் ஜெ.