எமி பராக்... பராக்!

"மதராசபட்டினம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான எமிஜாக்சன், "தாண்டவம்', "ஐ', "தெறி' என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் கடைசியாக ரஜினியுடன் "2.0' படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல தமிழ் சினிமா வாய்ப்புகள் வந்தபோதும்கூட, தான் நடித்துவந்த "சூப்பர் கேர்ள்' என்ற ஹாலிவுட் தொடருக்காக அவை அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.

Advertisment

cc

இதனிடையே, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த எமிஜாக்சன், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்க, பிறகு திருமணம் செய்துகொள்ளாமலே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Advertisment

இந்நிலையில் எமி ஜாக் சன் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக எமிஜாக்சன் நடிக்கவுள்ளாராம். ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் லண்டனில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கெடுபிடி!

"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் "ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தமன்னா கேமியோ ரோலில் நடிக்கிறாராம். "பீஸ்ட்' படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் "ஜெயிலர்' படத்தில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் நெல்சன். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் "ஜெயிலர்' படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றியுள்ளாராம்.

Advertisment

இந்நிலையில் பனையூரில் உள்ள ஆதித்யா ராம் குரூப் ஸ்டுடியோவில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சமீபமாக விஜய் நடித்து வரும் "வாரிசு' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளது. இதனால் உஷாரான நெல்சன் "ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் அனைவரின் செல்போனில் இருக்கும் கேமராக்களை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்' என பல ஸ்ட்ரிக்ட்டான கண்டிசன்களை போட்டுள்ளார்.

பொங்கல் விருந்து!

"வலிமை' படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் "ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சென்னை ஹைதராபாத் என மாறி மாறி நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றிய அறிவிப்புகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், வாராவாரம் "ஏ.கே.61' படத்தின் தகவல்கள் செய்தித்தாள்களையும், இணையத்தையும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.

"ஏ.கே.61' படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு 20 நாட்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளைப் பிரம்மாண்டமாகப் படமாக்கவுள்ளதாம். இதனிடையே "ஏ.கே.61' படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் "ரெட் ஜெயண்ட்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

ஹாலிவுட்டில் அல்லு அர்ஜுன்!

vv

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் "புஷ்பா' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் அல்லு அர்ஜுனின் மேனரிசம் இந்திய பிரபலங்களைத் தாண்டி, வெளிநாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரையும் கவர்ந்தது.

இந்தநிலையில் அல்லு அர்ஜுன் தற்போது ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற அல்லு அர்ஜுன் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஒருவரை சந்தித்து அதற்கான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம். "புஷ்பா 2' படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

-அருண்பிரகாஷ்