பாலா கூட்டணியில் "சூர்யா 41'
"எதற்கும் துணிந்த வன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணி யில் வெளியான "பிதாமகன்', "நந்தா' ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றிபெற்ற நிலையில்... 18 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது, இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித் துள்ளது. தற்காலிகமாக "சூர்யா 41' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க வுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி "சூர்யா 41' திரைப்படத்தை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக பிரபல ஓ.டி.டி. நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படு கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப் போற்று', "ஜெய் பீம்' ஆகிய படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யாவின் இந்த புதிய படமும் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ஆரம்பத்திலேயே ஓ.டி.டி. ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டுவிட்டதால், வழக்கமாகவே பாலாவின் படங்களில் இருக்கக்கூடிய வன்முறை, இப்படத்தில் சற்று கூடுதலாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சமந்தா!
மே மாதம் வரவுள்ள தனது "டான்' படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன், தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். அனுதீப் இயக்கும் 'SK 20' படத்தில் நடித்து வரும் அவர் அதற் கடுத்து "ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப் பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து "மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேய னுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான "சீமராஜா' படத்தில் இவ்விருவரின் ஜோடி ஹிட்டடித்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் இப்புதிய படத்திற்காக ஜோடி போடவுள்ளனர்.
தனுஷின் இயக்குநர் அவதாரம்!
தமிழ் சினிமா வின் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் "ப.பாண்டி' படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு "தேனாண்டாள் ஸ்டூடியோஸ்' தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தபோது, நடிப்பில் பிஸியாகிப்போனார் தனுஷ். எனவே, இதன் பணிகள் நிறுத்தப் பட்டிருந்தன.
இந்த சூழலில், விரைவில் மீண்டும் இப்படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அப்படத்தில் தனுஷுடன், நாகார்ஜூனா, அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படு கிறது. "நானே வருவேன்', "வாத்தி' படங்களில் நடித்து முடித்த பிறகு, இதன் பணிகளை தனுஷ் மேற்கொள்ளவுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானத்தில் இறங்கும் விக்ரம்!
கார்த்திக் சுப்ப ராஜ் இயக்கத்தில் வெளியான "மகான்' படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்துவின் "கோப்ரா' படத்திலும், மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இப்படங்கள் இவ்வாண்டிலேயே ரிலீஸாக உள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். அண்மையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி யிருந்தது.
"சார்பட்டா பரம்பரை' படத்தைப் போல இப்படத்தையும் விளையாட்டை மையப்படுத்தி பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை உறுதிசெய்யும் விதமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பாடி பில்டிங்கை மையமாக வைத்து இப்படம் உருவாகிறதாம். இதற்காக விக்ரம் தனது உடலை மெருகேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். மேலும், இந்த படத்திற்கு "மைதானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
மே மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
-எம்.கே.