மாமன்னன்!
"பரியேறும் பெருமாள்' மற்றும் "கர்ணன்' படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில், உதயநிதி ஸ்டாலின், பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு "மாமன்னன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மிரட்டல் ஃபகத் ஃபாசில்!
நடிப்புக்கும், வித்தியாசமான கதைக்களங் களுக்கும் பெயர்போன மலையாள சினிமா உலகையே தனது மிரட்டல் நடிப்பாலும், சிறந்த கதை தேர்வாலும் அதிர வைத்தவர் ஃபகத் ஃபாசில். இவரது நடிப்புக்குக் கிடைத்த நல்ல பெயரால் தற்போது மலையாள சினிமாவைக் கடந்து பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் "வேலைக்காரன்', "சூப்பர் டீலக்ஸ்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஃபகத் ஃபாசில், தற்போது அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க கமிட் ஆகிவருவது அவரது தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள் ளது. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துள்ள இவர், தற்போது உதயநிதியின் "மாமன்னன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'கொரோனா குமார்' படத்திலும் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கும் இப்படத்தில் ஃபகத் பாசில் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பில் அஜித் 61
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான "வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து "அஜித் 61' படத்தையும் போனிகபூர் தயாரிக்க எச். வினோத் தான் இயக்கவுள்ளார். அஜித் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரமாக இப்படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ வரை எடையைக் குறைக்கத் திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள இப்படத்திற்கு கிப்ரான் இசையமைக்க உள்ளாராம். அதேபோல, பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் அஜித்தின் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிய அனுவர்தன்தான் இப்படத்திலும் காஸ்டியூம் டிசைன் செய்ய உள்ளாராம். மெல்லிய உடலமைப்பு, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், அஜித்தின் எதிர்மறை கதாபாத்திரம் என 'மங்காத்தா' பாணியில் உருவாகும் இப்படம், இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது. அண்மையில், இப்படத்துக்கான கெட்டப்பில் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரஜினி -வடிவேல் கூட்டணி!
"பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்காலிகமாக 'தலைவர் 168' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக நெல்சன் படங்கள் என்றாலே காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், இப்படத்திலும் வலுவான காமெடி நடிகர்கள் டீமை கொண்டுவரத் திட்டமிடப்பட்டு வருகிறதாம். எப்போதும்போல தனது ஆஸ்தான காமெடி நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் சேர்த்து இப்படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க நினைக்கிறாராம் நெல்சன். இது குறித்து படக்குழு வடிவேலுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், முத்து உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்துள்ளார். இப்படங்களில் ரஜினி வடிவேலுவின் காமெடி கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி திரையில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மணக்கும் ஜாஸ்மின்!
மீரா ஜாஸ்மினை நினை விருக்கிறதா? "ரன்' படத்தில் அறிமுகமாகி "சண்டைக்கோழி' படத்தில் ஹிட் அடித்தாரே அவர்தான். சினிமா வேண்டாம் என்று திருமணம் செய்து செட்டிலானார். பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக் காதுங்கிறது மாதிரி, மீண்டும் நடிக்க வந்துள்ளார். சத்தியன் அந்திக்காடு இயக்கியுள்ள "மகள்' படத்தில் ஜெயராமோடு ஜோடி போட்டுள்ளார். தமிழில் வாய்ப்பு வேண்டி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மணக்கிறதா ஜாஸ்மின்!
-எம்.கே.