ஏமாற்றம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாத அவர், தொழில்துறையில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்திவந்தார். அந்தவகையில், 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 1.80 லட்சம் வருமானம் கிடைக்கும் எனக் கூறிய ஒரு நிறுவனத்தை நம்பி, அவர் ரூ. 25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்நிறுவனம் சொன்னபடி தொகையைத் தர மறுத்ததாகக் கூறும் சினேகாவின் தரப்பு, முதலீடு செய்த பணத்தையும் அவர்கள் திரும்பத் தரவில்லை என கூறுகிறது. இதனைத் தொடர்ந்து, "தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், "தனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்' எனவும் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சினேகா.
கண்ணீர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படம் நவம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரின் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இவ்விழாவில், படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய சிம்பு, "என் படத்திற்கும், எனக்கும் நிறைய பேர் பிரச்சனை கொடுக் கிறார்கள். எனது படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள். என் பிரச் சனையை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த் துக்கொள்ளுங்கள்''’என கண்கலங்கிப் பேசினார். சிம்புவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, இணையத்திலும் வைரலாகியது. அதேபோல, இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, "சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்த கதா பாத்திரங்கள்தான் நடிக்கக் கடினமானவை. இவர்கள் இருவருக்கும் இடையேயான 7 நிமிட காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சியை எப்போது பார்த்தாலும் எனக்கு கண்ணீர் வரும். சிம்பு பிறவியிலேயே நடிகர் என்பதை அந்தக் காட்சி நிரூபிக்கும்" எனக்கூறி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேடையிலேயே எகிற வைத்தார்.
இழப்பு!
தமிழ் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளுடன் இயங்கிவந்த ஆர்.என்.ஆர். மனோகரின் திடீர் மரணம், திரைத்துறை வட்டாரத்திலும், சினிமா ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 61 வயதான மனோகர் 17-11-2021 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். "என்னை அறிந்தால்', "வேதாளம்', "விஸ்வாசம்', "நானும் ரவுடிதான்', "மிருதன்'’உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள மனோகர், "மாசிலாமணி', "வேலூர் மாவட்டம்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்த இவரது மகன், கடந்த 2012-ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது, அப்போது மிகப்பெரிய சர்ச்சையானது. அந்த நேரத்தில் பூதாகரமாக வெடித்த இந்த சர்ச்சை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. மகனின் மறைவு தந்த துயரில் இருந்து மீண்டு, சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த மனோகரின் இந்த திடீர் மறைவு பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
எதிர்பார்ப்பு!
தன் மகன் பிரணவ் மோகன்லால் நடித்து வெளிவரவுள்ள "ஹிருதயம்' மலையாளப் படத்தின்’டீசரை நடிகர் மோகன்லால், தனது சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். அது, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிரணவ் மோகன்லால், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் திருமணமான ஜோடியாகவும், தர்ஷனா ராஜேந்திரன் கல்லூரியில் படிக்கும் அவரது காதலியாகவும் நடித்துள்ளனர். மூவருமே தங்கள் அபார நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளதால், படம் பெரிய அளவில் வெற்றிபெறும்... எனவே தியேட்டர்களில் படத்தை வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்புடன் கோரிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள்.
-எம்.கே.