ஜெய் பீம்!
"சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் "ஜெய் பீம்'. தனது "2டி என்டர் டெய்ன்மெண்ட்ஸ்' நிறுவனம் மூலம் வேறுபட்ட கதைக் களங்களைக் கொண்ட படங்களைத் தயாரித்துவரும் சூர்யா, இப்படத்தையும் தயாரித்துள்ளதோடு, இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், பழங்குடியின மக்களின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளாராம்.
நவம்பர் 2-ஆம் தேதி "அமேசான் ப்ரைம் ஓ.டி.டி.' தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு "ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. 164 நிமிடங்கள் ஓடக்கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் எந்த ஒரு திருத்தமும் செய்யப்படாமல் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம். 2010-ஆம் ஆண்டு வெளியான "ரத்த சரித்திரம்' படத்திற்குப் பிறகு சூர்யாவின் படம் ஒன்றுக்கு "ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை ஆகும்.
விண்வெளி ஷூட்டிங்!
ஹாலிவுட்டில் வெளியான "கிராவிட்டி' முதல் தமிழில் வெளியான "டிக் டிக் டிக்' வரை விண்வெளியை மையமாக வைத்து உலகம் முழுவதும் பல படங்கள் வெளியாகியுள்ளன. பல கோடி ரூபாய் செலவழித்து கிராஃபிக்ஸ் மூலம் விண்வெளியின் பிரம்மாண்டத்தைத் திரையில் காட்டிவந்த திரைத் துறையினர், "நேரடியாக விண் வெளிக்கே சென்று ஷூட்டிங் எடுத்தால் என்ன..?' என யோசிக்க ஆரம்பித்து, அதற்கான முயற்சிகளி லும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஹாலிவுட் ஆக்ஷன் ஸ்டாரான டாம் க்ரூஸ், தனது அடுத்த படத்தின் ஷூட்டிங், நாசா உதவியுடன் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தார். "என்னது... விண்வெளியில் ஷூட்டிங்கா..?' என சினிமா ரசிகர்களை வாய் பிளக்க வைத்த படக்குழு, விண்வெளியில் ஷூட்டிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்துவந்தது. ஆனால், இதற்கிடையே சத்தமே இல்லாமல் திடீரென விண்வெளிக்கு ஷூட்டிங் எடுக்கச் சென்றுவிட்டது ரஷ்யப் படக்குழு ஒன்று.
ரஷ்ய இயக்குநரான கிலிம் ஷிபென்கோ, தனது இயக்கத்தில் உருவாகும் "சேலஞ்ச்' என்ற படத்தின் படப்பிடிப்பிற்காகத் தனது குழுவினருடன் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தைச் சென்றடைந்துள்ளார். ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டுவிட, அவரை காப்பாற்ற பூமியிலிருந்து செல்லும் ஒரு மருத்துவர் எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் கதையாம். இதற்காக மூன்று மாதங்கள் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்த, தற்போது விண்வெளி மையத்தை அடைந்துள்ளது படக்குழு. விண்வெளியில் இதற்கு முன்னர் இரு டாக்குமெண்ட்ரி குறும்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், விண்வெளியில் படம்பிடிக்கப்படும் முதல் முழுநீளப் படம் இதுவே ஆகும். எது எப்படியோ, விண்வெளி போட்டியில் மீண்டும் ஒருமுறை அமெரிக்காவை வென்றுள்ளது ரஷ்யா.
புதிய கூட்டணி!
தெலுங்கு ஸ்டாராக இருந்த பிரபாஸ், "பாகுபலி'’படங்களின் வெற்றி மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிக பொருட்செலவிலான படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள "ராதே ஷ்யாம்', "ஆதி புருஷ்', "சலார்'’என அனைத்துப் படங்களுமே ஹை-பட்ஜெட் படங்கள்தான். "பாகுபலி'க்கு அடுத்து வந்த "சாஹோ' படம் பிரபாஸுக்கு சறுக்கலாக அமைந்த நிலையில்... தனது அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதில் சற்று கூடுதல் கவனம் காட்டி வருகிறார் அவர். அந்த வகையில் நீண்ட பரிசீலனைகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை "அர்ஜுன் ரெட்டி'’ படத்தை இயக்கிய சந்தீப்ரெட்டி வங்காவுக்கு கொடுத்துள்ளார் பிரபாஸ். இது பிரபாஸின் 25-ஆவது படம் என்பதால், இதனை யார் இயக்குவார்கள் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், இப்படத்திற்காக சந்தீப்ரெட்டி வங்காவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபாஸ்.
இந்த புதிய கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் அண்மையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதோடு, அப்படத்தின் டைட்டில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. "ஸ்பிரிட்'’என பெயரிடப் பட்டுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளைக் கடந்து ஜாப்பனீஸ், சைனீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா ஸ்டாரிலிருந்து சர்வதேச ஸ்டாராக மாறலாம் என்ற பிரபாஸின் கனவை இப்படம் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-எம்.கே.