ஜோதிகாவின் "உடன்பிறப்பே'
"கத்துக்குட்டி'’பட இயக்கு நரான இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் "உடன்பிறப்பே'’படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.
சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமாகும். இதுவரை இல்லாத வகையில் அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக ஜோதிகா நடித்துள்ள இப்படம், நேரடியாக அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14-ஆம் தேதி "உடன்பிறப்பே'’திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தல 61'
அஜீத் -போனி கபூர் -எச்.வினோத் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக நீண்ட நாட்களாகக் கூறப்பட்டுவந்த நிலையில்... தற்போது போனி கபூர் அதை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள் ளார். போனிகபூர், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், "வலிமை' படத்தின் அனுபவம் குறித்துப் பேசுகையில், எச்.வினோத்தை வெகுவாக பாராட்டியதோடு, "தல 61' படத்திற்காக மீண்டும் எச்.வினோத்துடன் பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே "வலிமை' படத்தின் கிலிம்ப்ஸ், அஜீத் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், போனிகபூர் கொடுத்த இந்த தகவல் அஜீத் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
குஷியில் விஜய் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "பீஸ்ட்'’படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 65-வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது டெல்லியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதன்படி, "பிருந்தாவனம்', "தோழா', "மஹரிஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வம்சி, விஜய்யின் 66-வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு படவுலகில் முன்னணி தயாரிப்பாளரான தில்ராஜு இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரி செல்வராஜ் -உதயநிதி கூட்டணி!
"பரியேறும் பெருமாள்' மற்றும் "கர்ணன்' படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்ததாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாகவும் அதற்கான பயிற்சியை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"கர்ணன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "ரெட் ஜெயன்ட்ஸ்' தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க மாரி செல்வராஜ் ஒப்பந்தமானார். துருவ் விக்ரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் மாரி செல்வராஜ் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை முடித்துவிட்டே துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளாராம்.
மாரி செல்வராஜ் -உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில்... இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. மலையாளப் படங்களில் ஹீரோ, நெகட்டிவ் ஷேட் உள்ள கதா பாத்திரங்கள் என அனைத்திலும் தனது அசுர நடிப்பால் அப்ளாஸ் வாங்கிய ஃபகத் பாசில், மாரி செல்வராஜ் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்திவரும் படக்குழு, இப்படம் தொடர்பான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடும் திட்டத்தில் உள்ளதாம்.
-இரா.சிவா