அமெரிக்காவுக்குப் பறக்கும் அண்ணாத்தே!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்தே' படத்தில் தனது பங்கை முடித்துக் கொடுத்துவிட்டாராம். கொரோனா காரணமாக மற்ற பணிகள் மெதுவாக நடந்துவர... மருத்துவ பரிசோதனை களுக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டார் ரஜினிகாந்த். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியர்கள் வருவதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும், குறிப்பிட்ட சில தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கிறது. இந்த காரணங்களால் முதலில் ரஜினிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். தனக்கு இது முக்கியமான மருத்துவ சோதனை என்பதால் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, அவர்களின் உதவியுடன் தற்போது அனுமதி பெற்றுவிட்டார் ரஜினிகாந்த். குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் தயாராகிவரும் அவர், நீங்கள் இந்த செய்தியைப் படிக்கும்போது அமெரிக்காவில் இருக்கலாம். ஏற்கனவே படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருக்கிறார் ரஜினியின் மருமகன் தனுஷ். இவர்களும் சென்றுவிட்டால் அமெரிக்காவில் ஃபேமிலி டைம்தான்.
கோலிவுட் டெக்னிக்கை கற்கும் கேரள ஹீராயின்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஓ.டி.டியில் ரிலீசாகியிருக்கும் "ஜெகமே தந்திரம்' படத்திற்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் உள்ள நிலையில்... அதன் ஹீரோயின் மலையாளக் கரையிலிருந்து தமிழ்ப் பக்கம் ஒதுங்கியிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கோலிவுட் டெக்னிக்குகளை மெதுவாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளாராம்.
டி.வி.யில் இறங்கும் STR!
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி, அடுத்தடுத்து பல சினிமா நாயகர்களை தொலைக் காட்சி நோக்கி இழுத்திருக்கிறது. விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதற்கெல்லாம் முன்பே சரத்குமார் "கோடீஸ்வரன்' நிகழ்ச்சியையும் சூர்யா, அரவிந்த்சாமி ஆகியோர் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினர். இப்படி சினிமாவிலிருந்து டி.வி.க்கு நாயகர்கள் வந்தது ஒருபுறமென்றால், டி.வி.யிலிருந்து சினிமாவுக்குக் கிடைத்த நாயகர்கள் வரிசை சிவகார்த்திகேயன், சந்தானம், கவின், ரியோ வரை நீள்கிறது. விஜய்சேதுபதி தற்போது "மாஸ்டர் செஃப்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதற்கான வேலைகள் நடந்து வர... லேட்டஸ்ட் அப்டேட்டாக, "சிம்பு ஒரு புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்' என்ற செய்தி வந்துள்ளது. ஆனால், முன்பு பேசப்பட்டதுபோல அது "பிக்பாஸ்' நிகழ்ச்சி அல்ல... "சர்வைவர்' என்ற அமெரிக்க ஹிட் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனாக இது இருக்குமாம். OTT-ன் டி.வி. என்ட்ரி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்னும் சில இழப்புகள்!
கொரோனோவின் கொடூரக் கரங்கள் பல கலைஞர்களின் உயிரை பறித்து வருகின்றன. தமிழ் சினிமா மற்றும் படைப்புலகத்துக்கும், இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு பெரியது. இந்தத் துயர பட்டியலில் சமீபத்தில் இரண்டு இளம் திறமைசாலிகள் இணைந்துள்ளனர். இளைய ராஜா, தமிழ்ச் சூழலின் மிகுந்த புகழ்பெற்ற பல ஓவியங்களை வரைந்த கலைஞன். தமிழ்ப் பெண்களின் ஓவியங்கள் என்று கூகுளில் தேடினால் பெரும்பாலும் இவரது அழகிய ஓவியங்கள்தான் அதிகம் காட்டப்படும். புகைப்படங்களா, ஓவியங்களா என்று குழப்பும் வகையில் மிகஇயல்பான அழகான ஓவியங்களாக அவை அமைந்திருக்கும். தனது நாற்பதுகளில் இருந்த இளையராஜா, கொரோனா வால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த இளம்வயது மரணம்... தமிழ் படைப்புலகத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பென்று பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். "தொரட்டி' படத்தில் நாயகனான நடித்து கவனம்பெற்றவர் ஷமன் மித்ரு. அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர். "எதிரி எண் 3' உள்ளிட்ட சில படங் களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர், நடிப்பிலும் ஆர்வம்கொண்டு தானே தயாரித்த படம்தான் "தொரட்டி'. அந்தப் படம் விமர்சகர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. சினிமாமீது காதல்கொண்ட இளம் படைப்பாளரான ஷமன் நடிப்பு, ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல பரிமாணங் களில் இயங்கிவந்தார். நாற்பத்திமூன்று வயதே ஆன இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை தோற்க... மரணமடைந்தார். இவர் சமீபத் தில் மரணமடைந்த கே.வி.ஆனந்தின் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-வீபீகே