மியூசிக் டைரக்டர் மாறியாச்சு!

"சீயான்' விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் அறிமுக முயற்சியான "ஆதித்ய வர்மா', பாலா இயக்கத்தில் உருவாகி, பின்னர் அது சரியில்லை என்று தெலுங்கு "அர்ஜுன் ரெட்டி'யில் வேலை செய்த கிரிசாயா இயக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது. அதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. பின்னர் ஞபப-யில் வெளியான பாலாவின் "வர்மா' இன்னும் மோசமென்ற விமர்சனங்களை பெற்றது. அதனால் துருவ்வின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான படங்களாக இருக்கவேண்டுமென்று கவனமாக இருக்கிறார் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் உறுதியாகியிருக்கிறது.

tt

கார்த்திக் சுப்புராஜின் படத்தில் விக்ரமும் நடிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்தின் இசையமைக்கவிருந்த அனிருத் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ள இப்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். துருவ்வுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துவோம்.

Advertisment

டைரக்டர் மாறியாச்சு!

"டாப் ஸ்டாராக' ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர் பிரஷாந்த். விஜய், அஜித்துக்கு முன்பே பெரிய இயக்குனர்களின் வெற்றிப் படங்களில் நடித்தவர். மலேசியாவில் 90-களின் டாப் ஹீரோயின்களோடு சென்று இவர் நடத்திய "ஸ்டார் நைட்' மிகப் பிரபலம். இப்படி லைம் லைட்டிலேயே இருந்த பிரஷாந்தின் திரை வாழ்க்கையில் திடீரென கரண்ட் கட் ஆனது. தொடர் தோல்விகள், சொந்த வாழ்க்கையில் பிரச்சினை என்று சில வருடங்கள் செல்ல, மீண்டும் "கம்-பேக்' கொடுக்க அவ்வப்போது முயன்றுவருகிறார். இடையில் சிரஞ்சீவி மகனின் தெலுங்குப் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் பிரஷாந்த் வந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

prasanth

Advertisment

இப்போது, ஹிந்தியில் பெரிய வெற்றிபெற்ற "அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்கப்போகிறவர் என்று கௌதம்மேனன், ராதாமோகன் ஆகிய பெயர்கள் சொல்லப்பட்டு பின்னர் "பொன்மகள் வந்தாள்' ஃப்ரெட்ரிக் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அவரது பெயரும் மாறி, பிரஷாந்தின் தந்தை தியாகராஜனே படத்தை இயக்குகிறார். ஏற்கனவே "ஷாக்', "பொன்னர் சங்கர்', "மம்பட்டியான்' படங்களை பிரஷாந்தின் கம்-பேக் முயற்சிகளாக இயக்கியவர் தியாகராஜன். இந்தமுறை கம்-பேக் நிகழ வாழ்த்துவோம்.

பதில் மாறியாச்சு!

இயக்குனர் செல்வராகவனின் லேட்டஸ்ட் ரிலீசான "நெஞ்சம் மறப்பதில்லை' கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பொதுவான சினிமா பார்வையாளர்கள் "ரொம்ப வழக்கமான பேய்க் கதைதான், ஒண்ணும் ஸ்பெஷலாக இல்லை' என்று சொல்ல... செல்வராகவன் ரசிகர்களோ, "செல்வா சார் படம், உங்களுக்கெல்லாம் புரிய இன்னும் பத்து வருஷம் ஆகும்' என்றனர். அந்த செல்வா சாரே "கேள்வியே எனக்கு புரியல, பதில் சொல்லிட்டேன்... கவனமா இருந்திருக்கணும் மன்னிச்சிருங்க' என்று சொல்லும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார்.

dd

சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் பேட்டியெடுத்தவர் ""நீங்க "ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஈழத்தை மறைமுகமா குறிப்பிட்டதா சொன்னீங்க. இந்தப் படத்தில் வில்லன் பெயர் ராமசாமி. அப்போ நீங்க ராமசாமி என்ற பெயருடைய ஒருவருக்கு எதிரா கடவுளை வைக்கிறீங்களா?'' என்று பூடகமாக கேட்க... "ஆமாம்' என்று தலையாட்டினார் செல்வராகவன். இந்தப் பதிலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப... இப்போது விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவரது படம் ரசிகர்களுக்கும் கேள்விகள் அவருக்கும் புரிய வாழ்த்துவோம்.

ரிலீஸ் டேட் மாறியாச்சு!

tt

சிவகார்த்திகேயன் நடிப்பில் "கோலமாவு கோகிலா' இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள "டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. "மிஸ்டர் லோக்கல்', "ஹீரோ' படங்கள் ரொம்ப சுமாராகப் போனதால் டாக்டரை காண ஆவலுடன் இருக்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். மார்ச்சில் ரிலீசாக வேண்டிய படம், இப்போது ரம்ஜான் வெளியீடாக வரும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. "எலக்ஷன் காலத்தில் கலெக்ஷன் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவு' என்கிறார்கள். மே மாதம்வரை காத்திருக்க வேண்டும் ரசிகர்கள். அவர்களுக்கு சிறப்பான விருந்து கிடைக்க வாழ்த்துவோம்.

-வீபீகே