"கர்ணன்' படம் வெளியாகியிருந்த சமயம்...
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் தேன்மொழியும், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரியும் (பின்னாளில் மத்திய அமைச்சராக இருந்தவர்) பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.
"கர்ணன்' பட க்ளைமாக்ஸில் கர்ணன் தன் தானத்தால் பெற்ற தர்மதேவதையின் ஆசியை... தானமாக பெற்றால்தான் கர்ணன் உயிரிழப்பான் என்பதையறிந்து மாறுவேஷத்தில் கிருஷ்ணர் யாசகம் கேட்க... கர்ணன் தன் ரத்தத்தை தானமாக கொடுப்பான்.
இதைப் பார்த்துவிட்டு... "புரந்தரேஸ்வரியோட அப்பாதான் தேன்மொழியோட அப்பாவைக் கொன்னது. அதனால் புரந்தரேஸ்வரிகிட்ட யாரும் பேசாதீங்க' என சக மாணவிகள் புரந்தரேஸ்வரியை தனிமைப்படுத்தினர். வகுப்பாசிரியையாலும் இவர்களின் கோபத்தைத் தணிக்க முடியவில்லை.
தன் அப்பாவிடம் புரந்

தன் அப்பாவிடம் புரந்தரேஸ்வரி விஷயத்தைச் சொல்லி அழ... என்.டி.ஆர். உட னடியாக பள்ளிக்கூடத்திற்கு வந்தார். கர்ணன் கேரக்டரில் சிவாஜி செய்த நடிப்பு, குழந்தை கள் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பதை அறிந்துகொண்டு... ""அப்படி செஞ்சதுக்காக வருத்தப்படுறேன்... இனிமே சிவாஜி சாருக்கு எதிராக இப்படி பண்ணமாட்டேன்'' எனச் சொல்லி சமாதானப்படுத்திய பிறகே தோழிகள் மீண்டும் ஒன்றானார்கள்.
கர்ணன், சிவன் என புராணமோ... இதிகாசமோ... ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை பரிபூரணமாக்கிவிடுவார் சிவாஜி என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் வடிவில் ரீ-ரிலீஸ் ஆன "கர்ணன்' இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்... தனுஷ் நடிக்கும் படத்திற்கு "கர்ணன்' என பெயர் வைக்கப் பட்டிருப்பது சிவாஜி ரசிகர்களிடையே அதிருப்தியையும் டென்ஷனையும் ஏற் படுத்தியுள்ளது.
"சிவன் இப்படித்தான் இருப்பாரோ?' என பக்தர்களை பரவசப்பட வைத்தது சிவாஜியின் "திருவிளையாடல்' நடிப்பு.
அதே தலைப்பில் தனுஷ் நடிக்க ஒரு படம் தயாரானது. சிவாஜி ரசிகர்களின் கடும் எதிர்ப்பையடுத்து "திருவிளையாடல் ஆரம்பம்' என தனுஷ் பட டைட்டில் மாறி யது. இதேபோல் "உத்தமபுத்திரன்' என்கிற சிவாஜி பட டைட்டிலும் தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டது. சிவாஜியின் சிறந்த புராணப் படமான "சரஸ்வதி சபதம்' என்கிற டைட்டிலில் ஜெய் ஒரு படம் நடித்தார். சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் "நவீன சரஸ்வதி சபதம்' என பெயர் வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தனுஷ் படத்திற்கு "கர்ணன்' டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து... சினிமா அமைப்புகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன்.
"பழைய திரைப்பட பெயர்களை பயன் படுத்தக்கூடாது' என்று சட்டம் இல்லாதபோது... ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு ஏன்?' என சந்திரசேகரனிடம் கேட்டோம்.
""ஒரு படம் வெளியாகி 25 வருடம் ஆன பிறகு அந்தப் பட டைட்டிலை புதுப்பிக்காமல் விட்டால் அந்த டைட்டிலை யார் வேணாலும் பயன்படுத்திக்கலாம். ஏற்கனவே "உத்தமபுத்தி ரன்', "ஆண்டவன் கட்டளை', "ராஜா', "பச்சை விளக்கு' என சிவாஜி பட டைட்டில்களை வச்சிருக்காங்க. இதை நாங்க எதிர்க்கல. "கர்ணன்' டைட்டில் மகாபாரத கேரக்டர் மட்டுமல்ல... நடிகர் திலகத்தின் தோற் றம், நடை, கம்பீரம் என "கர்ணன் இப்ப டித்தான் இருப்பானோ' என உணர வைத்தது.
ஏற்கனவே கூகுளில் "சிவாஜி' என டைப் செய்தால் ரஜினியின் "சிவாஜி' படம்தான் முதல்ல வருது.
"கர்ணன்', "கப்பலோட்டிய தமிழன்', "கட்டபொம்மன்' போன்ற பெருமைக்குரிய தலைப்புகளில் நடிகர் திலகம் நடித்துள்ள டைட்டில்களையாவது மீண்டும் பயன் படுத்தாமல் இருக்கணும். இதனால்தான் எதிர்க்கிறோம்'' என்றார் சந்திரசேகரன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைக் கலைக்கு ஆற்றியிருக்கிற சேவையை மதிக்கும் நோக்கில் இப்படிப்பட்ட டைட்டில்களை தவிர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.
"ஆடுகளம்', "அசுரன்' என நடிப்பில் மிளிர்ந்து வரும் தனுஷ், தன் துறையின் முன்னோடிக் கலைஞனுக்கு மரியாதை செய்யாவிட்டாலும்... "உத்தமபுத்திரன்', "திருவிளையாடல்', "கர்ணன்' என அவரின் படத் தலைப்புகளை தன் படங்களுக்கு சூட்டுவதை தவிர்க்கவேண்டும்.
-இரா.த.சக்திவேல்