"தர்பார்' நஷ்டப் போராட்டம் நடத்திய விநியோகஸ்தர்கள் சைலண்ட் ஆகிவிட்டார்கள். காரணம்... விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த வழக்குதான். காரணம்.... ஒட்டுமொத்த வசூல் விபரத்தை யும் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியிருக்குமே! அதனால் முருகதாஸுடன் சமாதானமாகிவிட விநியோகஸ்தர்களில் ஒரு குரூப் விரும்புதாம்.
மனைவியைப் பிரிந்த விஷ்ணு விஷாலும், கணவரைப் பிரிந்த விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவும் ஹைதராபாத்தில் காதலர் தினத்தைக் கொண்டாடி யிருக்கிறார்கள்... கிளுகிளுப்பாக. விஷ்ணுவின் சினிமா வளர்ச்சிக்காக ஜுவாலா பெரும்தொகை ஒன்றை ஃபைனான்ஸ் செய்திருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு.
அமலாபால்-டைரக்டர் விஜய் மண முறிவுக்கு "தனுஷ்தான் காரணம்' என அப்போதே பரபரக்கப்பட்டது. சமீபத்தில் இதை உறுதி செய்யும் விதமாக... ""இருவரின் பிரிவுக்கு காரணம் தனுஷ்தான். தனுஷ் தயாரித்த "அம்மா கணக்கு' படத்தில் மீண்டும் அமலா நடிக்கப் போனதுதான் பிரச்சினை'' என விஜய்யின் அப்பா ஏ.எல்.அழகப்பன் தெரிவித்தார்.
""இப்போது இந்தப் பிரச்சினையைப் பேசுவது எதற்கு? தனுஷ் எனது நலம் விரும்பி...'' என தெரிவித்துள்ளார் அமலாபால்.
மேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி ""தனுஷ் எங்களுடைய மகன்'' என தொடர்ந்து வழக்குப் போட்டுவருகிறார். இந்த வழக்கு குழப்படியில்... பொதுவாக குழம்புவதுபோல் பேசும் டைரக்டர் விசு... தெளிவாக ஒரு தகவலைச் சொன்னார்.
விசுவிடம்தான் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா டைரக்டராக பணியாற்றினார். தனுஷ் குழந்தையாக இருந்ததிலிருந்தே விசு பார்த்திருக்கிறார். புகைப்படத்துடன் கூடிய இந்த விசுத்தகவல்தான் பல குழப்பங்களுக்கு விடையளித்தது.
இது ஒருபுறமிருக்க... "தேவைப்பட்டால் தனுஷ் மீது வழக்குத் தொடுப்பேன்' என்கிறார் விசு.
கே.பாலசந்தரின் "கவிதாலயா' தயாரிப்பில் (அப்பா) ரஜினி-சரிதா, (மகன்) ரஜினி-மேனகா நடித்த ஹிட் படம் "நெற்றிக்கண்.'
ரஜினி மருமகனான தனுஷும், மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷும் இணைந்து நடிக்க... "நெற்றிக்கண்' படத்தை ரீ-மேக் செய்ய விரும்புகிறார் தனுஷ். இதற்காக பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் கதை ரீ-மேக் உரிமை கோரப்படுகிறதாம்.
""புஷ்பா கந்தசாமியிடம் அனுமதி பெற்றால் செல்லாது. அந்தப் படத்தின் கதாசிரியரான என்னிடம்தான் தனுஷ் அனுமதி பெறவேண்டும். எனது அனுமதி இல்லாமல் "நெற்றிக்கண்' படத்தை எடுத்தால் தனுஷ் மீது வழக்குப் போடுவேன்'' என்கிறார் விசு.
நடிகர் சங்க தேர்தலில் விஷால் டீமும், ஐசரி கணேஷ் டீமும் போட்டியிட்டது. தேர்தலை நிறுத்த ஐசரி டீம் முயற்சித்தது. ஆனால்... "தேர்தலை நடத்தலாம்... நாங்கள் சொல்லும்வரை ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கூடாது' என உயர்நீதிமன்றம் சொன்னது.
தேர்தல் முடிந்து ஏழெட்டு மாதங்கள் ஆன நிலையில்... ""நடத்திய தேர்தல் செல்லாது. புதுசா தேர்தல் நடத்தணும்'' என உயர்நீதிமன்றம் சொன்னது.
""உயர்நீதிமன்றம் சொல்லித்தானே தேர்தல் நடத்தினோம். இப்போ தேர்தல் செல்லாதுனு சொல்லீருப்பதை மறுபரிசீலனை செய்யணும்'' என விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம்... ""புதிதாக தேர்தல் நடத்துவதற்கான முன் னேற்பாடுகளைச் செய்யலாம். ஆனால் தேர்தல் குறித்து அறிவிப்பு எதுவும் செய்யக்கூடாது'' என உத்தரவிட்டுள்ளது.
-ஆர்.டி.எ(க்)ஸ்