நடிகர் திலகம் சிவாஜியின் செல்லப்பிள்ளை கமல். சிவாஜியின் மறைவுக்குப் பிறகும் சிவாஜியின் அன்னை இல்லம், கமலை தங்கள் மூத்தபிள்ளையாக கொண்டாடி வருகிறது.
கமலின் முதல்படம் "களத்தூர் கண்ணம்மா.' 1959-ஆம் ஆண்டில் வெளியானது.
2019-ஆம் ஆண்டில் "இந்தியன்-2'
படத்திற்காக முதியவர் சேனாபதியாக தன் கலைப்பயணத்தை 60-ஆம் ஆண்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் கமல்.
கமல்-60 கலைப் பயணத்தை கௌரவிக்கும் விதமாக சமீபத்தில் கமலுக்கு அன்னை இல்லம் சார்பில் ராம்குமார், பிரபு குடும்பத்தினர் விருந்தளித்தனர்.
இந்த விசேஷ விருந்தில் கமலுக்கு அன்னை இல்லம் சார்பில் வாழ்த்து மடலை வாசித்து அளித்தார் பிரபு.
"அரிதாரம் முதல் தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி; அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி; அவரின் தலைமகன் நீ கலைஞானி; நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலக நாயகனே; நீ நடிப்பை ஆண்டு ஆனது 60 ஆண்டு; நீ ஊரை ஆண்டு உலகை ஆண்டு வாழ்ந்திடுக நூறாண்டு' -இப்படி கமலின் கலைப்பயணத்தையும் அரசியல் பயணத்தையும் ஆசிர்வதித்துள்ளது அன்னை இல்லம்.
"மடலின் வாசகங்கள் என்னை கண்கலங்க வைத்தது; மனது புன்னகைத்தது' என இதுபற்றி சிலாகித்துள்ளார் கமல்.
இன்னொரு விருந்தோ கமலை டென்ஷனாக்கியுள்ளது.
"பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்... "பிக்பாஸ்-3' போட்டியாளர்கள் சிலருக்கு விருந்து அளித்ததுபோல் போலி புகைப்படங் களை வலைப்பக்கங்களில் பதிவிட்டனர். இதையடுத்து இந்த போலிப் பதிவின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் க்ரைம் போலீஸில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
""நைட் தூங்கும்போது நல்லாத்தான் இருக்குது என்னோட கால்கள். ஆனா காலைல எந்திரிச்சுப் பார்த்தா காயமா இருக்கு. எனக்குத் தூக்கத்துல நடக்கிற பழக் கம் இருக்கோ என்னவோ'' என சமீபத்தில் தெரிவித் தார் இலியானா.
செக்ஸ் விஷயங்களை வெளிப் படையாகப் பேசி நிர்வாணமாகவும் நடித்து பரபரப்பேற்படுத்துபவர் "கபாலி' ராதிகா ஆப்தே.
வழக்கமான நடிப்பு பாணி இல்லாமல் வித்தியாசமாக நடிக்கும் ராதிகா, படம் டைரக்ட் செய்தால் அதுவும் வித்தியாசமாகத்தானே இருக்கும்.
"ஸ்லீப் வாக்கர்ஸ்' என்ற பெயரில் அரைமணி நேர சினிமாவை இயக்கி வருகிறார்.
இது இலியானா சொன்ன தூக்கத்தில் நடக்கும் பழக்கம் பற்றியதல்ல. பெண்களின் பிரச்சினையை வைத்து சமூகத்தை கேள்வி கேட்கும் கதை.
குடும்பத்தலைவிகள் எந்த நேரமும் இயங்கிக்கொண்டே... இயக்கப் பட்டுக்கொண்டே... உறங்கினாலும் விழிப்புநிலையிலேயே இருக்க வேண்டிய நிலையை இந்தப் படம் மூலம் எடுத்துச் சொல்லவிருக்கிறார் டைரக்டர் ராதிகா.
-ஆர்.டி.எ(க்)ஸ்