தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புள்ளி விபரத்தின்படி 2016-ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிராக 840 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதையும், 2009-ஆம் ஆண்டு முதல் 2018-வரை நடைபெற்ற மத சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளையும், "பசு பாதுகாப்பு', "ஜெய் ராம் கோஷம்' ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகளையும், வன்முறைகளையும் பட்டியலிட்டு... இவற்றையெல்லாம் தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை... எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 23-09-2019 அன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 49 பிரமுகர்கள் இந்த கடிதத்தை அனுப்பியிருந்தனர்.
கேரள சினிமா பிரபலம் அடூர் கோபாலகிருஷ்ணன், பாலிவுட் சினிமா பிரபலம் அனுராக் கஷ்யப், மேற்கு வங்க சினிமா பிரபலம் அபர்னா சென், ஷியாம் பெனஹல், கோலிவுட் பிரபலங்கள் மணிரத்னம், ரேவதி உள்ளிட்டோரும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த 49 பிரபலங்களில் சுமார் 30 பேர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த கடி தத்திற்கு எதிராக மோடியின் நிர் வாகச் செயல் களை ஆதரித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் உள்ளிட்டோர் கடிதம் எழுதி மோடிக்கு அனுப்பி, மணிரத்னம் தரப்பினரின் கடிதத்திற்கு பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் பீகார் முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர்குமார் ஓஜா, முசாபர்பூர் நடுவர் நீதிமன்றத்தில்... "49 பிரபலங்கள் சேர்ந்து பிரதமருக்கு எழுதிய கடிதம் நமது நாட்டின் தோற்றத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது' என குற்றம் சுமத்தி "அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்' என வழக்குத் தொடர்ந்தார்.
மாஜிஸ்திரேட் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவையடுத்து 49 பிரபலங்கள் மீதும் "தேசத்துரோகம், பொது அமைதிக்கு குந்தகம், பொதுமக்களுக்கு தொல்லை தருதல், மத உணர்வுகளை புண்படுத்துதல்' ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
""நமது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றுதான் எங்களின் கடிதம் வலியுறுத்துகிறது. கடிதத்திற்காக தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியவில்லை'' என கடிதம் எழுதியவர்களில் ஒருவரான டைரக்டர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆதங்கப்பட்டுள்ளார்.
தனுஷுக்கு புதிய பட்டம்!
தனுஷ்-டைரக்டர் வெற்றிமாறன் கூட் டணியில் "கலைப்புலி' தாணு தயாரித்திருக்கும் "அசுரன்' படம் சமீபத்தில் வெளியானது. தனுஷின் மிரட்டலான நடிப்பு சிலாகிக்கப்பட்டு வருகிறது.
ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான "பைரவி'யின் விநியோகஸ்தராக இருந்த தாணு "சூப்பர் ஸ்டார் ரஜினி' என பட்டம் கொடுத்து விளம்பரம் செய்தார்.
"அசுரன்' படத்தில் தனுஷுக்கு "இளைய சூப்பர் ஸ்டார்' என பட்டம் தர விரும்பியதுடன், படத்தின் டைட்டில் கார்டிலும் அப்படியே போட முடிவெடுத்தார். ஆனால் தனுஷ் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
"அசுரன்' படம் வெளியான நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் "இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்' என திரையில் காண்பிக்கப்பட்டதை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் இணையத்தில் விட்டனர். இது பரபரப்பை உண்டாக்கவே... "அசுரன் பட டைட்டில் இல்லை அது. ரசிகர்கள் சிலர் தயாரித்த வீடியோவை படம் தொடங்கு வதற்கு முன்பாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினோம்' என தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தபிறகே பரபரப்பு ஓய்ந்தது.
இந்நிலையில் தனுஷ் தலைமை ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா, "தனுஷ் சார் அந்தப் பட்டத்தை விரும்பவில்லை, அதனால் அப்படி குறிப்பிட வேண்டாம்' என ரசிகர்களிடம் தெரிவித்துள்ளபோதும்... "எங்க மகிழ்ச்சிக்காக போட்டுக்கிறோம்... கண்டுக்காதீங்க' எனச் சொல்கிறார்களாம் ரசிகர்கள்.
மோதும் ஹீரோக்கள்!
விஜய்யின் "பிகில்', விஜய் சேதுபதியின் "சங்கத் தமிழன்', கார்த்தியின் "கைதி' ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் எனச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் 64-வது படத்தில் விஜய்யுடன் வில்லனாக மோதுகிறார் விஜய் சேதுபதி. அதற்கு முன் இருவரின் படங்களும் தீபாவளிக்கு மோதுகின்றன.
விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படி கூட்டணி அமைந்தாலும் அதற்குமுன் தீபாவளிக்கு விஜய் படத்துடன் மோதுகிறது லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் "கைதி' படம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்