அஜித்தின் "விவேகம்' 2017-ல் வெளியானது. அப்போது அந்தப் படத்தின் மலேசியா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் ரிலீஸ் பண்ணும் உரிமைக்காக மலேசிய நிறுவனம் ஒன்று 4 கோடியே 25 லட்ச ரூபாயை "விவேகம்' தயாரிப்பாளர் "சத்யஜோதி' தியாகராஜனிடம் கொடுத்ததாம். இருப்பினும் பட உரிமையை வேறொரு கம்பெனிக்கு கொடுத்தாராம் தியாகராஜன். பணம் கொடுத்த நிறுவனம், அப்போதே சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தது. "நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என எழும்பூர் நீதிமன்றத்தில் மலேசிய நிறுவனம் இப்போது வழக்குத் தொடர்ந் துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தியாகராஜனிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜெயம் ரவிக்கு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் இரண்டு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்காக செக்யூரிட்டி நிறுவனத்திற்கு மாதம் 70 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து வந்தது ஜெயம் ரவி தரப்பு.
கடந்த ஏப்ரல் முதல் செக்யூரிட்டிகளில் ஒருவரை ஜெயம் ரவி தரப்பே நேரடியாக நியமித்துக் கொண்ட துடன்... செக்யூரிட்டி நிறுவனத்துடன் தொடர்பையும் துண்டித்தது.
இதையடுத்து... ஜெயம் ரவியின் மேனேஜர் மீது, பணப்பாக்கி புகார் உள்ளிட்ட சில புகார்களைச் சுமத்தி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளது செக்யூரிட்டி நிறுவனம்.
"உத்தம வில்லன்' பட வெளியீட்டுச் சமயம் தன்னிடம் பத்து கோடி ரூபாய் பெற்ற கமல் அதை திருப்பித் தரவில்லை...' என தயாரிப்பாளர் சங்கத்தில் "ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல்ராஜா புகார் செய்திருந்தார்.
"இந்தப் படம் சம்பந்தமாக கொடுக்கல்-வாங்கல் என்பது "திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்துடன்தான்' எனச் சொன்ன கமல்... இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் இருப்பதாக... பூடக மாகவும் சொன்னார்.
"புகாரை வாபஸ் பெறவேண்டும்... அல்லது புகாருக்கான ஆதாரங்களைத் தரவேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம்' என ஞானவேல்ராஜாவுக்கு கமலின் ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐங்கரன் நிறுவனம் மூலம் நடிகர் அருண் பாண்டியனுடன் இணைந்து படங்களைத் தயாரித்து வந்த லண்டன் கருணாமூர்த்தி, பிறகு அந்நிறுவனத்திலிருந்து விலகி "லைகா' நிறுவனத்தின் தயாரிப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் லைகாவுக்கு 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லண்டன் கருணா மீது லைகா அதிபர் சுபாஷ்கரன், சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் செய்துள்ளார்.
"டிராஃபிக் ராமசாமி' படத்தை நடித்து, தயாரித்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தின் தமிழக விநியோக உரிமைக்காக கனடா தமிழர் பிரம்மானந்தம் சுப்பிரமணியன், 21 லட்ச ரூபாயை எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்தாராம். ஆனால் படத்தை, தானே வெளியிட்ட எஸ்.ஏ.சி., வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லையென தனது பிரதிநிதியான தயாரிப்பாளர் மணிமாறன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் எஸ்.ஏ.சி. மீது புகார் அளித்துள்ளார்.
இப்போதெல்லாம் சினிமா கதைத் திருட்டு சர்ச்சைகள் அடிக்கடி ஏற்படுவதால்... தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக பதிவுசெய்து... ஆறு மாதங்களுக்குப் பின் தங்கள் படக்கதையையும் பதிவு செய்கிறார்கள் புதிய இயக்குநர்கள்.
இசையமைப்பாளராக இருந்து, இயக்குநராகி யிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் எழுதிய "அனிதா பத்மா பிருந்தா' நாவலை படமாக இயக்கி, நடித்து, தயாரிக்கவிருக்கிறார். ஒரே மாதத்தில் தயாரிப்பாளர் சங்க கில்டு அமைப்பு ஏ.எல்.சூர்யாவை உறுப்பினராக்கிவிட்டது. ஆனால் தெ.தி.எ.சங்கம் கேட்ட தொகையை கட்டியும், ஆறு மாதங்களாக உறுப்பினர் கார்டு தராமல் இழுத்தடிப்பதாக சங்கத்தின் மீது புகார் தெரிவிக்கிறார் ஏ.எல்.சூர்யா.
நடிகர் சங்க தேர்தல் ரிசல்ட் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட அப்செட்டில் இருக்கிறார் தெ.தி.எ.சங்கத் தலைவர் கே.பாக்யராஜ். இந்த குழப்பத்தால் எழுத்தாளர் சங்கம் மந்த கதியில் செயல்படுவதாகச் சொல்கிறார்கள்.
"பிக்பாஸ்' மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், ரசிகர்கள் மீது புகார் சொல்லிவருகிறார்.
""சினிமாவில் செக்ஸியா நடிச்சா... நிஜத்திலும் அப்படித் தான்னு நினைச்சு கமெண்ட் பண்றாங்க. "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் சில காட்சிகளில் ஒரு மாதிரி நடிக்க வேண்டியதாப் போச்சு. அதனாலதான் இப்படி ஒரு இமேஜ் எனக்கு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக வருத்தப்படுறேன்'' எனச் சொல்லி வருகிறார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்