சில பல தமிழ் சினிமாக்களைப் பார்த்தால் நமக்கு பைத்தியம் பிடிக்கும். ஆனால் ராதா கிருஷ்ணன் பார்த்திபனுக்கோ சினிமா பைத்தியம் நன்றாகப் பிடித்து, அது "ஒத்த செருப்பு'’ படமாக வெளிவந்து, நல்ல சினிமா ரசிகர்களுக்கு ராஜ ரசனை வைத்தியம் பார்த்திருக்கிறது.
ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் பார்த்திபன். விசா ரணையின்போது போலீசே எதிர்பாராத நேரத்தில் "அந்தக் கொலையை நான்தான் செய்தேன்' என ஒத்துக்கொள்ளும் பார்த்திபன், அடுத்தடுத்து ஐந்து கொலைகளையும், தான் செய்ததாகச் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.
"அந்த ஐந்து கொலைகளையும் ஏன் செய்தேன், எதற்காக செய்தேன்' என இரண்டு மணி நேரம் பார்த்திபன் மட்டுமே ஒத்தஆளாக திரையில் சாகசம் புரிந்திருக்கிறார். ""டேய் மாசிலாமணி, டேய் மாசிலாமணி''…என்ற போலீஸ் அதிகாரியின் மிரட் டல் குரலுடன் படம் ஆரம்பிக்கிறது. "நடந்தது என்னன்னு எதையும் மறைக்காம ஒழுங்கு மரியாதையா இந்தப் பேப்பர்ல எழுதிக் கொடு' என போலீஸ் அதிகாரியின் கட்டளைக்குப் பணிந்து வெள்ளைப் பேப்பரில் மளமளவென வாக்கு மூலம் எழுதி போலீஸ் அதி காரியின் டேபிளில் வைக் கிறார் மாசிலாமணி (நம்ம பார்த்தி பன்).
பார்த்திபன் எழுதி வைத்த அந்த வாக்குமூலத்தில் டீ கொட்டிவிட, ""அட என்னடா இது'' என போலீஸ் அதிகாரி சலித்துக் கொள்ளும்போது, "பரவாயில்ல விடுங்க சார், நான் கார்பன் காப்பி எடுத்து வச்சி ருக்கேன்' என தனக்கேயுரிய டிரேட்மார்க் சிரிப்புடன் பார்த்திபன் சொன்னதும் அதிர்ச்சி யாகிறார் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி.
எமகாதகன் இன்னும் எத்தனை கொலைகள் செய்திருப்பானோ என போலீஸ் அதிகாரியே அதிர்ச்சியில் உறைந்து போக, தான் செய்த ஐந்து கொலைகளை வரிசையாகச் சொல்ல ஆரம்பிக் கிறார் பார்த்திபன். விசாரணை அறையின் உள்ளே மாசிலாமணி, வெளியே உடலுறுப்புகள் ஒவ்வொன் றாக செயலிழக்கும் வினோத நோயால் பாதிக்கப் பட்ட மகன் மகேஷ் தந்தையின் வருகைக்காக காத்திருக்கிறான்.
மகனுக்கு வந்திருக்கும் நோயின் பெயரை கடகடவென ஆங்கிலத்தில் பார்த்திபன் சொல் வதைப் பார்த்து, ஸாரி கேட்டுக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரியிடம், ""ஆமா சார், அந்த வியாதி பேரைச் சொல்லிச்... சொல்லி, இப்ப அதுவே தமிழ்ப்பேர் மாதிரி ஆகிப்போச்சு. சார், மகேஷ் கேட்டான்னா அப்பா போலீஸ் இண்டர்வியூல இருக்காருன்னு சொல்லுங்க''’ -இப்படி பல சீன் களில் பார்த்திபன் பிராண்ட் நக்கல், நையாண்டிகள் பளிச்சிடுகின்றன. ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ஒத்த செருப்புக்கு பக்கபலமாகவும் பக்கா பலமாக வும் இருப்பவர்கள் கேமராமேன் ராம்ஜியும் ஒலிப் பதிவு இயக்குனர் ரசூல் பூக்குட்டியும்தான். விசா ரணையின் இடையே பார்த்திபன் பாத்ரூமிற்குச் சென்று திரும்பும்போது வாஷ்பேசின் குழாயில் வரும் தண்ணீர் சத்தம், கிரீச்... கிரீச் என அந்தக் காலத்து ஃபேன் சத்தம், ஜன்னலுக்கு வெளியே கேட்கும் பறவைச் சத்தம் என அத்தனையையும் போலீஸ் விசாரணையின் போக்குக்கு ஏற்ப ஒலிக்கலவை செய்திருக்கிறார் ரசூல் பூக்குட்டி.
ஒரே அறையில்தான் ஒட்டுமொத்த படமும் நடக்கிறதென்றாலும் ராம்ஜியின் ஒளிப்பதிவு, கதையில் சொல்லப்படும் பல்வேறு லொகேஷன் களுக்கு ரசிகனை கற்பனையில் அழைத்துச் செல்வதுதான் ஒத்த செருப்பின் மொத்த சிறப்பும். ஒரே அறைக்குள் பல்வேறு உணர்வுகளைச் சொல்லும் லைட்டிங் வித்தைகளை தனது கேமராவால் செய்திருக்கும் ராம்ஜி, ராவணஜியாக உயர்ந்து நிற்கிறார். பார்த் திபனை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி, அவ்வப்போது பார்த்திபனை கடுப்பேத்தும் போலீஸ், படத்தின் பின்பகுதியில் வரும் உளவியல் பெண் மருத்துவர், பார்த்திபனின் மனைவி உஷா என எல்லோருமே பின்னணிக் குரல்கள் மூலம் ரசிகர்களின் மனதிற்குள் இறங்கி, கண்களில் காட்சி யாக விரிகிறார்கள். இந்தக் காட்சிப்படுத்தலுக்கு இசை மூலம் பெரிதும் உதவியிருக்கிறார்கள் சந்தோஷ் நாராயணனும் சி.எஸ்.சத்யாவும்.
பார்த்திபன், தான் செய்ததாகச் சொல்லும் ஐந்தாவது கொலை பல ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த ராமஜெயம் கொலையை அப்படி யே கண்முன் நிறுத்துகிறது. பல ஆண்டுகளாக அந்தக் கொலைக்கு காரணம் தெரியாமல், கொலை காரன் யாரென்றும் தெரியாமல் இருக்கும் போது "நச்'சென அடித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தான் செய்த ஐந்து கொலை களைச் சொன்னதன் மூலம் தன்னுடைய வாழ்வியல் சூழலையும் மனைவியின் துரோகத் தையும் சொல்லும் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் "ஒத்த செருப்பு', தமிழ் சினிமாவின் தனிச் சிறப்பு.
கடவுளின் சக்தி என்ற நிலை மாறி, சக்தி அல்லது அதிகாரம் படைத்தவன்தான் கடவுள், அது இடத்தைப் பொறுத்து மாறுகிறது. நிரபராதியை குற்றவாளியாகவும் குற்றவாளியை நிரபராதியாகவும் அவனே ஆக்குகிறான். அதை பெருமூச்சு மூலம் இறுதிக் காட்சியில் உணர்த்தும் அந்த விசாரணை அதிகாரியும் குரலும் கதையின் நாயகனாக தெரிகிறது. அசத்தியிருக்கிறார் அசாத்தியக்காரரான பார்த்திபன்.
இந்த "ஒத்த செருப்பு'க்கு மெச்சத் தகுந்த விருது கிடைக்கவில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் அவமானம்.
-ஈ.பா.பரமேஷ்வரன்