"ஆடம்பர வாழ்க்கையில் நாட்டமில்லாமல் இருக்கிறார் அமலாபால்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சினிமாவில் கவர்ச்சிகரமாகவும், டிப்-டாப்பாகவும் வளைய வந்தாலும் நிஜத்தில் எளிமையான வாழ்க்கையையே விரும்புகிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்... ஆடம்பர கார் ஒன்றை வாங்கிய அமலா... புதுச்சேரியில் வசிப்பதாக முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்தார். தன் சொந்த மாநிலமான கேரளாவில் பதிவு செய்தால் இருபது லட்ச ரூபாய் வரை வரி செலுத்த வேண்டும் என்பதால்... இரண்டு லட்ச ரூபாய் வரி செலுத்தி பாண்டிச்சேரியில் பதிவு செய்ததாக கேரள போலீஸார் அமலா மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் மூலம் சமரசம் ஏற்பட்டபோதும்... உரிய விபரங்களுடன் புதுச்சேரி அரசுக்கு இப்போது கடிதம் எழுதியுள்ளது கேரள அரசு. அதனால் "அமலா வரி ஏய்ப்பு செய்தாரா?' என்கிற கோணத்தில் புதுச்சேரி அரசு விசாரணை செய்யவிருக்கிறது.

aa

Advertisment

திருமண முறிவுக்குப் பின் டெல்லியில் சிலகாலம் வசித்த அமலா... டெல்லியின் நவ நாகரிக மோகத்தால்தான்... உயர்ரக கார் வாங்க உந்தப்பட்டார். பாண்டிச்சேரியில் குடியேறியதும் அந்தக் காரை வாங்கினார்.

பிரெஞ்ச் யோகா டீச்சர் மூலம் யோகா கற்றது... காடுகளுக்குள் ஜிப்ஸி ஸ்டைலில் குழுவாக முகாமிடுவது... அங்கேயே சமைத்து உண்பது... என அந்த வாழ்க்கை அமலாவுக்கு பிடித்துப்போகவே... ஆடம்பர வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்தார். அந்த ஆடம்பர காரையும் விற்றுவிட்டார்.

ஒரு சின்ன பேக்கில் மாற்றுத்துணியை எடுத்துக்கொண்டு தேடல் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். அப்படித்தான் இமயமலையில் கீழ்கங்கா பகுதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரின் குழுவில் வந்தவர் களில் பாதிப்பேர்கள் "இதற்குமேல் மலையேற முடியாது' என தயங்கிவிட... சிலருடன் அமலா மலையேறி மகானுபவம் கண்டார்.

"மைனா' படத்திற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் குரங்கணி மலைப் பகுதியில் அந்த மலைவாழ் மக்களுடன் தங்கியிருந்த முன்அனுபவம் இந்த மைனா வுக்கு உண்டு. ஆனாலும் இமயமலைப் பயணம்தான் முழுவதுமாக ஜிப்ஸித்தன மான வாழ்க்கைக்கு அமலாவை திருப்பியிருக்கிறது.

"என் உயிரை அச்சுறுத்துகிற ரிஸ்க்தான் என்னை உயிர்ப்போடு வைத்திருப்பதாக'ச் சொல்லி... சமீபத்தில் செங்குத்தான மலைப்பரப்பில் ஏறி சாகசம் செய்திருக்கிறார்.

ஆன்மிகத் தேடல் என்ற பெயரில் சாமியார்களைச் சந்தித்துக்கொண்டிருக்காமல் இயற்கையின் ஊடே பயணித்து ஆன்ம பலத்திற்கான தேடல் செய்கிறார் அமலா.

முழுக்க ஆன்மிகவாதியாகி விடுவாரோ?

அதுதான் இல்லை. திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விருப்பத்தையும் அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார் அமலா.

-ஆர்.டி.எ(க்)ஸ்