ரஜினியை தமிழக பி.ஜே.பி. தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும், ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை பி.ஜே.பி.யுடன் இணைக்கவும் முயற்சிகள் நடந்தன. ஆனால் ‘தனிக்கட்சி’ என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார்.
இதேபோல ஆந்திராவிலும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது பி.ஜே.பி.
சிரஞ்சீவி "பிரஜா ராஜ்ஜியம்' கட்சியைத் தொடங்கி... ஒருங்கிணைந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு... தோல்வியடைந்தார். பிறகு... தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். அதன்பின் அரசியலிலிருந்து ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் பிஸியாக இருக்கிறார்.
ஆந்திர சுதந்திர போராட்ட வீரரான அரசர் கதையை வைத்து "சை ரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் நடித்துவருகிறார் சிரஞ்சீவி. சுமார் இரண்டாண்டு காலமாக எடுக்கப்பட்டுவரும் இந்த மெகா பட்ஜெட் படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தயாரித்து வருகிறார்.
டோலிவுட் சிரஞ்சீவியுடன், பாலிவுட் அமிதாப்பச்சன், கோலிவுட் விஜய்சேதுபதி, ஸாண்டல்வுட் சுதீப் மற்றும் நயன்தாரா, தமன்னா என பலரும் நடித்துவருவதால் இந்தப் படம் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் தமிழ் பதிப்பில் நரசிம்மரெட்டி குறித்து படத்தின் தொடக்கத்தில் ரஜினி வாய்ஸ் கொடுக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தால் ஆந்திரா முழுக்க மீண்டும் சிரஞ்சீவி பரபரப்பாகப் பேசப்படுகிறார்.
சிரஞ்சீவிக்கும், அவரின் தம்பியும்- நடிகருமான பவன் கல்யாணுக்கும் நீண்ட நாட்களாக கருத்து மோதல் நிலவிவந்தது. "அண்ணன் அரசியலில் தோற்றார். நான் ஜெயித்துக்காட்டுறேன்' எனச் சொல்லி "ஜனசேனா' என்கிற கட்சியைத் தொடங்கி சமீபத்திய ஆந்திர சட்டமன்ற- நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதில் சிரஞ்சீவியைவிட மோசமான தோல்வியைச் சந்தித்தார் பவன். இப்போது சிரஞ்சீவிக்கும், பவனுக்கும் இடையே கசப்பு கரைந்துபோனது.
இந்நிலையில் பவனின் கட்சியை தங்களுடன் இணைப்பது, ஆந்திர பி.ஜே.பி. தலைவராக சிரஞ்சீவியை நியமிப்பது... என்கிற இலக்குடன் பி.ஜே.பி. முயற்சி மேற்கொண்டுள்ளது.
தனது கட்சியை இணைக்க சம்மதம் தெரிவித்தாலும், "அண்ணன் சிரஞ்சீவியை அடுத்த சட்டசபை தேர்தலின்போது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்கிற கண்டிஷனை போட்டுள்ளாராம் பவன்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை "குயின்' என்ற பெயரில் வெப்-சீரியலாக இயக்கிவருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். "ஜெ.'வாக ரம்யாகிருஷ்ணன் நடித்துவருகிறார். முழுக்க பயோ-பிக்காகத்தான் முதலில் திட்ட மிடப்பட்டது. இப்போது... "ஜெ.'வின் வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை மையமாக வைத்து கற்பனைக் கதை யாக ஸ்கிரிப்ட்டை மாற்றியுள்ளாராம் கௌதம்.
ஸ்கிரிப்ட்டில் திருத்தம் செய்யச் சொல்லி கண்டிஷன் அப்ளை பண்ணினது யாரோ?
நயன்தாரா, புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகும்போதே... "பட புரமோஷன் மற்றும் வெற்றி விழாக்களுக்கு வர மாட்டேன்' என்கிற கண்டிஷனை போட்டுவிடுவார். "சை ரா நரசிம்மரெட்டி' படத்திற்கு நயனை பெரிய சம்பளத்தில் ஒப்பந்தம் செய்தார் ராம்சரண். அப்போது... "இது மெகா பட்ஜெட்டில் உரு வாகும் படம். அதனால் பட புரமோஷன் விழாக்களுக்கு அவசியம் வரணும்' என கேட்டுக்கொண்டார்.
இதற்கு சம்மதித்த நயன், அடுத்த மாதம் படம் வெளியாகவிருக்கும் நிலையில்... புரமோஷன் சம்பந்தமாக நயனை தொடர்புகொண்டபோது ...""நோ ரெஸ்பான்ஸ். இதனால் ‘நயன்தாரா பட புரமோஷனுக்கு வரணும்... இல்லேன்னா அவரை புதிய தெலுங்குப் படங்கள்ல நடிக்கவைக்கக் கூடாது'' என கண்டிஷன் போட்டு தயாரிப்பு சங்கத்தில் கம்ப்ளைண்ட் குடுத்திருக்காங்களாம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்