"நேர் கொண்ட பார்வை' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்றிருக்கிறார் "பாலிவுட் நடிகை' வித்யா பாலன்.
கேரள மாநிலம் பாலக் காட்டைச் சேர்ந்த தமிழ்த் தம்பதியின் மகளான வித்யாபாலன் முதலில் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்குத்தான் முயற்சி மேற்கொண்டார்.
மூன்று மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பு தொடங்குகிற நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில் சென்னையில் தங்கியிருந்து வாய்ப்புத் தேடினார். இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்து, கடைசி நேரத்தில் கை நழுவியது இரு வாய்ப்புகளும். மூன்றாவதாக ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி... சில காட்சிகளில் நடித்த பிறகு... நீக்கப்பட்டார்.
இதனால் தென்னிந்திய திரைத்துறை மீது வெறுப்படைந்து... பாலிவுட் வாய்ப்புகளைத் தேடினார். 2005ஆம் ஆண்டிலிருந்து கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கும் "விஷன் மங்கள்' படம் வரை வித்யாவின் நடிப்புத் திறமை பாராட்டப்படுகிறது. சிலுக்கு ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட "தி டர்ட்டி பிக்ஸர்' படத்தில் நடித்ததற்காக 2011-ஆம் ஆண்டிற்கான "சிறந்த நடிகை -தேசிய விருது' பெற்றார் வித்யா.
"நேர் கொண்ட பார்வை' பட புரமோஷனின் போது... ""தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடிய காலத்தில் என் குண்டான உடலை கேலி செய்தனர்'' என தெரிவித்த வித்யா லேட்டஸ்ட்டாக... கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
""நான் சென்னையில் தங்கி தமிழ் சினிமாவில் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு டைரக்டர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னிடம் பேச விரும்பினார். "ஹோட்டலின் காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம்' என நான் வலியுறுத்திய போதும்... "ரூம்ல போய் பேசலாம்... நிறைய பேசணும்' என அறைக்குச் செல்வதிலேயே குறியாக இருந்தார். அவரின் வற்புறுத்தலால் அறைக்குச் சென்றோம். ஆனால் நான் அறைக் கதவைத் திறந்தே வைத்தேன். இதனால் அறைக்கு வந்த ஐந்தாவது நிமிடமே... கிளம்பிப் போய்விட்டார்'' என குற்றம் சாட்டி யுள்ளார் வித்யா. தன்னைச் சந்தித்த டைரக்டர் யார் என்பதை வித்யாவால் குறிப்பிட முடியவில்லை. ஒருவேளை அவரை அடையாளம் காண முடியவில்லையோ என்னவோ அவரால்.
வித்யாவின் அடுத்த குற்றச்சாட்டு...
""நான் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகும்கூட... அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்ததன் பேரில் எனது பெற்றோருடன் சென்றேன்.
"கதாநாயகிக்கான முகவெட்டு உன்னிடம் இல்லை. அதனால் இந்தப் படத்திலிருந்து உன்னை நீக்குகிறோம்' எனச் சொன்னார். அது எனக்கு மனவேதனையைத் தந்தது. இதனால்... என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. கொஞ்ச நாட்களாக கண்ணாடியில் என் முகம் பார்ப் பதையே நான் தவிர்த்து விட்டேன். பிறகு தன்னம்பிக் கையோடு முயற்சித்து சினிமாவில் நடிகையானேன்'' எனச் சொல்லியிருக்கிறார் வித்யா.
இந்தக் குற்றச்சாட்டில் "நான் நடித்த பிறகும் நீக்கப்பட்டேன்' எனச் சொல்லியுள்ளார். அப்படி வித்யா குறிப்பிடுவது... "ரோஜாக்கூட்டம்' ஸ்ரீகாந்த் நடித்து, புதுமுக இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில், "ஆஸ்கர் ஃபிலிம்ஸ்' ரவிச்சந்திரன் தயாரித்து 2003ஆம் ஆண்டில் வெளியான "மனசெல்லாம்' திரைப்படத்தைத்தான்.
"மனசெல்லாம்' படத்தில் பணி யாற்றிய சிலரிடம் நாம் பேசினோம்.
""ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த "ரமணா' படத்தில் ஆஷிமா நடித்த கேரக்டரில் முதலில் வித்யாபாலன்தான் நடிப்பதாக இருந்தது. அந்த கேரக்டர் குழந்தைகளுடன் துறுதுறுவென லூட்டியடிக்கும் கேரக்டர். அதற்கு வித்யா பொருத்தமாக இருக்கமாட்டார் என்பதால் ஆஷிமா நடிக்க வைக்கப்பட்டார்.
வித்யாவை ஏமாற்றியதாக இருக்கக்கூடாது என்பதால் "மனசெல்லாம்' படத்தில் நடிக்க வைக்கச் சொன்னார் ரவிச்சந்திரன். வடபழனி விஜய சேஷ மஹாலில் ஏகப்பட்ட இணை-துணை நட்சத்திரங்களுடன் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியது.
"இந்தப் பொண்ணா ஹீரோயின்?' என்று வித்யாவின் குண்டான உடலமைப்பையும், முதிர்ச்சியான முக அமைப்பையும் கிண்டல் செய்தனர் படப்பிடிப்பில் இருந்தவர்கள். ஆனால் வித்யா காட்சிகளை பட்டென்று புரிந்து கொண்டு சிறப்பாக நடித்ததால் டைரக்டர் சந்தோஷ் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார். "குண்டு' என்கிற கேலி வித்யாவின் காதுகளிலும் விழுந்ததால்... உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதனால் அடுத்த சில நாட்களிலேயே வித்யாவின் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டு விட்டது.
இதற்கிடையே நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் பின்புறம் ஒரு ப்ரிவியூ தியேட்டரில் ஷூட் செய்த காட்சிகளின் ரஷ் பார்க்கப்பட்டது. வித்யாவும், அவரின் அம்மாவும் கூட ரஷ் பார்த்தார்கள். திறமை யாக நடித்திருந்தபோதும் வித்யாவின் முகவெட்டு ஈர்ப்பாக இல்லை.
இதையடுத்தே வித்யாவையும் அவரின் பெற்றோரையும் அழைத்து "முகவெட்டு' காரணத்தைச் சொல்லியனுப்பினார். வித்யா நீக்கப்பட்ட பிறகு... அப்போது நாயகியாக வளர்ந்து கொண் டிருந்த த்ரிஷாவை நடிக்க வைத்தனர்.
படப்பிடிப்பின் போது மற்றவர்கள் வித்யாவை கேலி செய்தது அவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம். டைரக்டரோ, தயாரிப்பாளரோ வித்யாவை கஷ்டப்படுத்தவில்லை. வாழ்க்கையில் பிரபலமானவர்கள் தாங்கள் முன்பு பட்ட கஷ்டங்களைச் சொல்லும்போது... மிகைப் படுத்திச் சொல்வது போன்றதுதான் வித்யாவின் குற்றச்சாட்டு'' என விளக்கமாகச் சொன்னார்கள் "மனசெல்லாம்' படத்தில் பணியாற்றிய சிலர்.
-இரா.த.சக்திவேல்