ஐ.நா. சபையின் "யுனிசெஃப்' எனப்படும் சிறுவர் நலனுக்கான அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா.
பெண் குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் விழிப்புணர்ச்சி பிரச்சாரம் செய்வது பிரியங்காவுக்கு தரப்பட்டிருக்கும் பணி.
"தூதர் பதவியிலிருந்து பிரியங்காவை நீக்கவேண்டும்' என ஐ.நா. சபை தலைமையகத்திற்கு கோரிக்கை விட்டு கடிதம் எழுதியுள்ளது பாகிஸ்தான் அரசு.
"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய அரசின் செயலை பிரியங்கா பகிரங்கமாக ஆதரிப்பதால் அவரை நீக்கவேண்டும்' என பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சகம் காரணம் சொல்லியுள்ளது.
"தங்களின் குறைகனை வெளியே சொல்வது தங்களின் இமேஜை பாதிக்கும்...' என நட்சத்திரங்கள் நினைத்த காலம் மலையேறிவிட்டது.
இப்போதெல்லாம் தங்கள் மனக்குறை, உடல் குறைகள் பற்றி பொதுவெளியில் பேசுகிறார்கள். இதன்மூலம் இப்படியான குறைகளால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் குறைகளை எதிர்த்துப் போராடும் தன்னம்பிக்கை பெறுகிறார்கள் என்பது நிஜம்.
மனீஷா கொய்ராலா, கௌதமி உள்ளிட்ட சில நடிகைகள் புற்றுநோய் தாக்குதலிலிருந்து, தாங்கள் மீண்டதை மக்களிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
சமீபத்தில்கூட தீபிகா படுகோனே, ஆண்ட்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு... சிகிச்சை பெற்று... குணமானதைப் பற்றிப் பேசினார்கள்.
லேட்டஸ்ட்டாக அமிதாப்பச்சன் சில விஷயங்களை மனம்விட்டுச் சொல்லியிருக்கிறார்.
""நான் காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானேன். சிகிச்சை ஒன்றின்போது எனக்கு தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் எனது கல்லீரல் 75% பாதிக்கப்பட்டுள்ளது, 25% தான் இயங்குகிறது. நான் அடிக்கடி உடற்பரிசோதனை செய்துகொண்டதால்தான் கல்லீரல் செயல்பாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தது. முன்பு நான் உடற்பரிசோதனை செய்யாமல் இருந்ததால்தான் எட்டு வருஷமாக காசநோய் எனக்கு இருந்தது தெரியாமலே இருந்தது. அதனால் அவ்வப்போது உடற்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.
சில தினங்களுக்கு முன்... தனது திக்குவாய் பிரச்சினை பற்றி தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி.
""எனக்கு திக்குவாய் பிரச்சினை இருந்ததால் ஒதுங்கியே இருப்பேன். இதைக் கவனித்த ஹிருத்திக்ரோஷன் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். "எனக்கும் இதே பிரச்சினை இருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்து... பயிற்சி மேற்கொண்டதால் திக்குவாய் பிரச்சினை தீர்ந்தது' எனச் சொன்னார். அவர் சொன்னபடியே... நானும் பயிற்சி எடுத்து திக்குவாய் பிரச்சினையை சரி செய்தேன்'' என சமீரா தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்களைப் பாராட்டலாம்.
"மயிலு' ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை தென்னிந்திய சினிமாவுக்கு சீக்கிரமே கொண்டுவரவிருக்கிறார்கள்.
"நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த ஜான்வியின் டாடி போனிகபூர் மீண்டும் அஜித்தை வைத்து தயாரிக்கும் படத்திலும்... விஜய் தேவரகொண்டாவை வைத்து நடிகை சார்மி தெலுங்கில் தயாரிக்கும் படத்திலும் ஜான்வியை அறிமுகப்படுத்த பிளான் போட்டிருக்காங்க.
-ஆர்.டி.எ(க்)ஸ்