மயிலுக்கு மரியாதை!
2017-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி 14 வயதில் கதாநாயகியான ‘"மயிலு'’ஸ்ரீதேவி... இந்திய திரையுலகை தன் அழகாலும், நடிப்பாலும் ஆட்சி செய்தார் என்றால் மிகையில்லை. பல மொழிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஸ்ரீதேவி... மாநில அரசின் விருதுகளை, தனியார் விருதுகளை தனது நடிப்புத் திறமைக்காக பெற்றிருந்தபோதும், தேசிய விருது அவருக்கு கிடைக்கவில்லை. ‘"மூன்றாம் பிறை'’ படத்திற்காக ஸ்ரீதேவிக்கு விருது கிடைக்கக்கூடும் என்கிற கணிப்புகளும் அப்போது பொய்யானது.
50 வருட சினிமா வாழ்க்கையில்... கடந்த ஆண்டு ஸ்ரீதேவி நடித்த "மாம்'’இந்திப் படத்திற்காக ‘"சிறந்த நடிகைக்கான விருது'... மயிலுவின் மரணத்திற்குப் பின் கிடைத்திருக்கிறது.
விருது தேர்வுக்குழுவின் தலைவரான இயக்குநர் சேகர்கபூர்... ஸ்ரீதேவிக்கும், ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய அன்பராக இருந்தபோதும்... "ஸ்ரீதேவி மறைந்துவிட்டார், அதனால் அவர் பெயரை விருதுக்கு தேர்ந்தெடுக்காதீர்கள்'’எனக் கேட்டுக்கொண்டபோதும்... பெருவாரியான வாக்குகள் ஸ்ரீதேவிக்கே கிடைத்தன.
"ஸ்ரீதேவி இறந்துவிட்ட அனுதாபத்தில் இந்த விருது தரப்பட்டதா?' என்றால் இல்லை.
"மாம்'’படத்தில் மிகச்சிறந்த நடிப்பை உளவியல் அணுகுமுறையோடு உணர்வுடன் வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.
மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படும் ஸ்ரீதேவி... தன் கணவரின் மூத்த தாரத்து டீன்ஏஜ் மகளின் அன்பைப்பெற பெரும் போராட்டமே நடத்துவார். ஒரு கொண்டாட்டத்தின்போது... அந்த டீன்ஏஜ் பெண்... சீரழிக்கப்பட்டு... உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அனுபவிக்கிற வலியைக்கண்டு... அவளை அந்த நிலைமைக்கு ஆளாக்கினவர்களை பழிவாங்குவார் ஸ்ரீதேவி. இதுதான் "மாம்'’கதை.
ஏற்ற பாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியதால் "சிறந்த நடிகை'க்கான தேசிய விருது ஸ்ரீதேவிக்கு தரப்பட்டுள்ளது.
இசை, பின்னணிப் பாடகர்... என தமிழ் சினிமாவுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. "மாம்' படத்திற்காக... உயிர்ப்பான பின்னணி இசையைத் தந்ததற்காக ஒரு தேசிய விருதும், கார்த்தி நடிப்பில், மணிரத்னத்தின் "காற்று வெளியிடை'’படத்தின் இசைக்காக ஒரு விருதும்... என இரண்டு விருதுகளை ஒரே நேரத்தில் வென்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் ‘"வான் வருவான்'’ என்கிற பாடலைப் பாடிய ஷாஷா திரிபாதி ‘"சிறந்த பின்னணிப் பாடகி'’ விருதைப் பெற்றிருக்கிறார்.
பாலாவின் "பரதேசி'’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இயக்கிய, இன்னும் மக்கள் அரங்கிற்கு வெளிவராத படம் "டூலெட். குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு மாற வேண்டிய கட்டாயத்திலுள்ள ஒரு இளம் தம்பதியின் நிலைதான் ‘டூலெட்’ படக்கதை. ஏற்கனவே சில சர்வதேச படவிழாக்களில் விருது வென்ற இந்த தமிழ்ப்படம்... சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆறுமுறை தேசிய விருது பெற்றுள்ள கே.ஜே.யேசுதாஸ் "போயி மறஞ்ச காலம்'’படத்தின் மலையாளப் பாடலுக்காக ஏழாவது முறையாக "சிறந்த பாடகர்'’விருதைப் பெற்றுள்ளார்.
இந்திய அளவில் சிறந்த இயக்குநராக "பயநாகம்'’மலையாளப் படத்தை இயக்கிய ஜெயராஜ் தேர்வு பெற்றுள்ளார். சிறந்த படமாக "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்'’என்கிற அசாமியப் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக "நகர் கிர்தன்' என்ற வங்கப் படத்திற்காக ரித்திசென் தேர்வாகியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் ஃபஹத் ஃபாசில் சிறந்த துணை நடிகர் விருதை மலையாளப் படத்திற்காக பெற்றுள்ளார். நடுவர்களால் தரப்படும் விருது "பூ',’"மரியான்'’ உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் பார்வதி மேனனுக்கு, ‘"டேக் ஆஃப்'’மலையாளப் படத்திற்காக தரப்பட்டுள்ளது.
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த ஆக்ஷன், சிறந்த பொழுதுபோக்கு... என மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது ‘"பாகுபலி-2'.’
கடந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் மலையாள திரையுலகம் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று முதலாவதாக நிற்க... தமிழ் சினிமா ரொம்பப் பின்னாடி நிற்குது.
"போராடுறதுதான் காரணம்'னு அரசியல் ரீதியா பார்க்கிறதவிட... "போராடாததுதான் காரணம்... இன்னும் சிறப்பான படைப்புகளைத் தர... போராடாததுதான் காரணம்'னு சவாலா எடுத்துக்கிட்டு... அடுத்த வருஷம் விருதை அள்ளீரணும்... தமிழ் சினிமா.
--------------------------------
வெளிநாட்டு விருது!
இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதுகளுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படம்’ பிரிவில் பிரான்ஸ் உட்பட பலநாட்டு படங்களுடன் மோதிய விஜய்யின் ‘"மெர்சல்'’படம் வெற்றி பெற்றிருக்கிறது.
-ஆர்.டி.எ(க்)ஸ்