ஜெயிப்பாரா ஜெய்?

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் போகாததால், அப்செட்டில் இருக்கிறாராம். இருப்பினும், தான் கமிட்டான படங்களில் நம்பிக்கையோடு நடித்துவரும் ஜெய், கதை தேர்வில் அதீத கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நல்ல கதையம்சம் இருந்தால் வெப் தொடரில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஏனென்றால் ஜெய் நடிப்பில் ஏற்கனவே வெளியான "ட்ரிப்பிள்ஸ்' வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். இந்தநிலையில்தான் "கனா', "நெஞ்சுக்கு நீதி' படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜும், ஜெய்யும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் இணைவது படத்திற்காக இல்லையாம். அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கும் வெப் தொடரில் ஜெய், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும், பிரபல ஓ.டி.டி. நிறுவனம் இதனை தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். அதற்கான முதற்கட்ட வேலைகளையும் அருண்ராஜா காமராஜ் தொடங்கியும்விட்டாராம்.

Advertisment

cc

பாலிவுட்டில் கே.டி!

மதுமிதா இயக்கத்தில் ராமசாமி, நாக விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த படம் "கே.டி என்கிற கருப்புதுரை'. 80 வயது நிறைந்த முதியவருக்கும் எட்டு வயது சிறு வனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தம் கலந்து அழகாக காண்பித்திருப்பார் இயக்குநர் மதுமிதா. மேலும் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாகவிஷாலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் "கே.டி. என்கிற கருப்புதுரை' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இயக்கிய மதுமிதாவே இந்தியிலும் இயக்க, 80 வயதான ராமசாமி கதாபாத்திரத்தில் அபிஷேக்பச்சன் நடிக்கவுள்ளாராம். மேலும் பாலிவுட் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மதுமிதா, திரைக்கதை மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதனை நிகில் அத்வானி தயாரிக்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

உற்சாக லட்சுமி!

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் விஷாலின் "ஆக்ஷன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெளியான தனுஷின் "ஜகமே தந்திரம்', "கார்கி', "கேப்டன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் "பொன்னியின் செல்வன்' படம் தான் அவரது சினிமா கிராஃப்பை உயர்த்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக வெளியான "கட்டா குஸ்தி' படத்தில் அதிக சம்பளம் பெற்று நடித்தாக கூறப்பட்ட நிலையில், "அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல பாஸ், சம்பளம் எல்லாம் உயர்த்தவில்லை, அது வெறும் வதந்தி' என தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, "பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் தேடி வருகிறதாம். இதில் "குமரி', "அம்மு' போன்ற படங்களும் வெற்றிபெற்றதால் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கவும் இயக்குநர்கள் ஐஸ்வர்யா லட்சுமியை அணுகி வருகிறார்களாம். இப்படி தொடர் வாய்ப்புகள் வருவதால், ஐஸ்வர்யா லட்சுமி உற்சாகத்தில் இருக்கிறாராம்.

கேமியோ கமல்!

விஜய்யை வைத்து வம்சி இயக்கிவரும் "வாரிசு' படம் அஜித்தின் 'துணிவு' படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் "தளபதி 67' படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதால், தற்போதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் லோகேஷ் "தளபதி 67' படத்தின் பணிகளில் தீவிரம்காட்டி வருகிறாராம். ஏற்கனவே படத்தின் கதாநாயகியாக திரிஷாவையும், வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய்தத்தையும் புக் செய்து வைத்துள்ள லோகேஷ், மற்ற நடிகர்களை தேர்வுசெய்யும் பணியில் முனைப்பு காட்டி வருகிறாராம். "கைதி' படத்தின் சீக்குவலாக வெளியான "விக்ரம்' படத்தில், கேமியோ ரோலில் சூர்யாவை கொண்டுவந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுபோல் "தளபதி 67' படத்திலும் அதே ஃபார்முலாவை பின்பற்ற லோகேஷ் முடி வெடுத்துள்ளாராம். அதன்படி இந்தப் படத்தில் கமல்ஹாசனை கேமியோ ரோலில் நடிக்கவைக்க முடிவெடுத்த லோகேஷ், அவரிடம் கதை சொல்லி ஓ.கே.வும் வாங்கிவிட்டாராம். கமலும், தன் சினிமா கேரியரில் வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படத்தை லோகேஷ் கொடுத்ததால், இதற்கு தலையசைத்துவிட்டதாகவும் விஜய்யும் தன் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பதால் இப்படத்திற்கு க்ரீன் சிக்னல் தந்துள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.