தமிழில் அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களை எடுத்துவரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், ஸ்ரீதேவியைப் போல் தனது மகள் ஜான்வியையும் தமிழில் பெரிய ஆளாக்க ஆசைப்படுகிறார்.
ஆனால் அவரின் ஆசைக்கு ஏனோ முட்டுக்கட்டை போட்டுவருகிறார் ஜான்வி. சமீபத்தில் விஜயதேவரகொண்டாவுடன் தெலுங்கில் "ஜனகனமன' படத்தில் நடிக்கப்போவதாக செய்தி பரவ... "நான் எந்த தெலுங்கு, தமிழ் படங்களிலும் இப்போது வரை ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒருவேளை நடிப்பதாக இருந்தால் எனது அப்பாவே அந்தப் படத்தை பற்றி அறிவிப்பார்'' என்று காட்டமாகச் சொல்-யுள்ளார். இவரின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்ப் படங்கள் மூலம்தான் புகழ்பெற்றார். ஆனால் ஜான்வி தமிழ் சினிமாவை வெறுப்பது ஏனோ?
மீண்டும் சுதா கொக்ரா - சூர்யா கூட்டணி!
பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஆண் இயக்குநர்கள் கோலோச்சி வரும் காலகட்டத்தில் பெண் இயக்குநராக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் சுதா கொங்கரா. "இறுதிச் சுற்று', "சூரரைப் போற்று' படங்களுக்குப்பிறகு சூர்யாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். அண்மையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி "கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். "சூரரைப் போற்று' பாணியில் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படமும் உருவாகிறதாம். பான் இந்தியா படமாக உருவாக்க உள்ள இதில் யார் ஹீரோ எனக் கேள்விகள் எழுந்துவந்துள்ள சூழலில், இதில் சூர்யாவே ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்பார்ப்பில் சமந்தா -விஜய் தேவரகொண்டா ஜோடி!
"அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கும் "லைகர்' படத்தில் நடித்து முடித்துள் ளார். லைகர் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவர கொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருந்த சூழலில், தற்போது அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே "மகாநதி' படத்தில் இந்த ஜோடி ரசிகர்களால் விரும்பப்பட்ட நிலையில், தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர். காஷ்மீரில் நடக்கும் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் தனுஷ்!
இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் நடிக்கும் "தலைவர் 169' படத்தை இயக்கவுள்ளதாக "பீஸ்ட்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் "பீஸ்ட்' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், "தலைவர் 169' படத்தின் இயக்குநரை மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், நெல்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உள்ள சுயவிவரத்தில் "தலைவர் 169' படத்தினை இயக்குவதை உறுதிசெய்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜூலை மாதம் ரஜினி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள நெல்சன், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவார் எனச் சொல்லப்படுகிறது.
ரீ-என்ட்ரி நஸ்ரியா!
தமிழ் சினிமாவிற்கு 'நேரம்' படம் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். நேரம் படத்தைத் தொடர்ந்து, "ராஜா ராணி', "நையாண்டி', "வாயை மூடி பேசவும்' என, தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் வெகு விரை வாகவே முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறினார். பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது, நானி நடிப்பில் உருவாகியுள்ள "அண்டே சுந்தரானிகி'’ படத்தின் மூலம் தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளார்.
தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகப்போவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டு அவற்றிற்கான டீசரும் வெளியிடப்பட்டது. தமிழில் "அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியாகும் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியாவுக்கு தமிழில் ரீ-என்ட்ரி படம் என்பதால், அவரது தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்போதே இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது.
-எம்.கே.