இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்த சூழலில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக ஷங்கர் அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். அதன் பின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதால், விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இப்படத்தைத் தொடங்குவதில் காஜலால் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாம். கௌதம் கிச்சலு என்பவரைக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட காஜல், தற்போது கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க முடியாது எனக் கூறி, வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்து வருகிறாராம் அவர்.
இதனைத் தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் அவருக்குப் பதிலாக மற்ற நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். மேலும், காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தையும் புதிய ஹீரோயினை வைத்து மீண்டும் படமாக்கத் திட்டமிட்டு வரு கிறதாம் படக்குழு. கருவுற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து காஜலிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, "சரியான நேரம் வரும்போது இதற்கு பதில் சொல்கிறேன்" என பட்டும் படாமல் பதில் சொல்லியிருக்கிறாராம்.
கீர்த்தியின் ஸ்பீடு!
ரஜினியுடன் அண்ணாத்த, சிரஞ்சீவியுடன் 'வேதாளம்' ரீமேக், மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா', மோகன் லாலுடன் மரக்கார் எனத் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றிவரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளாராம்.
சினிமா குடும்ப பின்னணியில் இருந்து சினிமாத்துறைக்கு வந்த கீர்த்தி சுரேஷ், குறுகிய காலகட்டத்திலேயே, தென்னிந்தியா வின் உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் நடித்துள்ளதோடு, "மகா நடி'’ படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார். அடுத்தடுத்து இவரது படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ள சூழலில், தான் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தைத் தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். விஷ்ணு ஜி ராகவ் இயக்கத்தில் ‘வாஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக "மாரி 2' படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார்.
விக்ரம் @ ரஷ்யா
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோப்ரா'. கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.
படத்தின் 80 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளைப் படமாக்க விக்ரமுக்காக காத்திருக்கிறதாம் படக்குழு. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'மகான்', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் விக்ரம் பிஸியாக நடித்துவருவதால், அவற்றின் பணிகளை அவர் முடித்த பிறகே இப்படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளதாம். படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட சில காட்சிகளைப் படமாக்குவதற்காக ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ள படக்குழு, விக்ரமிற்காக தனது மற்ற பணிகளை முடிப்பதற்காக வெயிட்டிங்காம். "இம்மாத இறுதிக்குள் விக்ரம் மற்ற பணிகளை முடித்துவிடுவார் என்றும், அதன் பின்னர் படக்குழு ரஷ்யா செல்லும்' என்றும் கூறுகின்றன சினிமா வட்டாரங்கள்.
-எம்.கே.