நடிகர் சங்கத் தேர்தலில் உருவெடுத்தது சிம்பு, விஷால் இடையேயான கருத்து வேறுபாடு. ஆனாலும் இருவரும் தனிப்பட்ட நட்போடுதான் இருந்துவந்தனர். ஆனால்... சிம்பு நடித்த "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட பிரச்சினைதான், விஷால் மீதான சிம்புவின் கோபத்தை அதிகப்படுத்தியது.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டு உருவான "அ அ அ' படம் அரைகுறையாக ஒரு பாகம் மட்டும் எடுக்கப்பட்டு... தோல்விப் படமாகவும் அமைந்தது.
"ஷூட்டிங்கிற்கு சரியாக வராமல் பிரச்சினை செய்தார்... டப்பிங் பேசவும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை. சிம்புவின் இந்த அலட்சியத்தால்தான்... பொருளாதார ரீதியாக நான் மிகப்பெறும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறேன். எனக்கு சிம்புவால் 20 கோடி ரூபாய் நஷ்டம். அதை சிம்புவிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். அதுவரை சிம்பு புதிய படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும்'’ என "அ அ அ' படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
"இந்தப் படத்தில் நடிக்க எனக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் ஒரு கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே தந்தார்கள். எனவே மீதிப் பணத்தை மைக்கேல் ராயப்பனிடமிருந்து வசூலித்து தரவேண்டும்' என நடிகர்சங்கத்தில் சிம்பு புகார் கொடுத்தார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு ஒரு முன்னணி ஹீரோவின் பிரச்சினையை கையாளுவதில் தயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மூலம் சிம்புவுக்கு விளக்கம் கேட்டு அழைப்பு விடப்பட்டது. ஆனால்... சிம்பு பலமுறை விடுக்கப்பட்ட அழைப்பையும் ஏற்கவில்லை.
இதனால் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் "சிம்புவுக்கு ரெட் கார்டு' எனப்படும் தடை போட முடிவு செய்யப்பட்டது.
ஆனால்... இது பிரச்சினையை பெரிதாக்கும் என்பதால் சிம்புவுக்கு தடைபோட எடுத்த முடிவை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் விஷால்.
சிம்புவோ, தான் இப்போது நடித்துவரும் "வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்காக பதியப்பட்ட ஒரு பாட்டில் "எனக்கே ரெட் கார்டா? எடுத்துப்பாரு என் ரெக்கார்ட' என்ற வரிகளைப் பாடி அதிரவிட்டார்.
இன்னொருபுறம்... தன் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லாத தயாரிப்பாளர் சங்கம் மீது மைக்கேல் ராயப்பனும் விமர்சன ரீதியாக கருத்துக்களை பரப்பினார்.
இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர் சங்க பிரமுகர்கள்... "சிம்புவின் செயலை விமர்சித்தும், தனது சங்க உறுப்பினர்களிடம் ‘சிம்புவை வைத்து படம் எடுப்பதாக இருந்தால் யோசித்துச் செய்யுங்கள்' என்றும், சிம்புவை வைத்து "இது நம்ம ஆளு' படம் எடுத்து மனக் கஷ்டங்களை சந்தித்த டைரக்டர் பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரை உதாரணம் சொல்லியும்... ஆஃப் த ரெக்கார்டாக தெரிவித்தனர்.
இந்நிலையில்தான்... சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் சிம்பு.
"என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பிவரும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் எனக்கு எதிராக நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளை விடவேண்டும். நான் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாவதற்கு தடைவிதிக்கக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான் விஷாலுக்கு எதிராக செயல்பட்டதால் அந்தப் பகையை மனதில் வைத்து விஷால் பழி வாங்குகிறார்' என அந்த வழக்கில் தெரிவித்துள்ளார் சிம்பு.
விஷாலுக்கும், மைக்கேல் ராயப்பனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
"சிம்புவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ரெட் கார்டு போட்டு... வழிக்குக் கொண்டு வந்திருப்போம். ஆனால் விஷால்தான் சிம்பு மீது ரெட் போடவிடாமல் தடுத்துவிட்டார்...' என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
"கலைப்புலி' தாணு தயாரிப்பில், சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்ட அரசியல் படம் "பகலவன்'.
கால்ஷீட் தருவதாக விஜய் உறுதியாகச் சொன்னதால்... முழு திரைக்கதையையும், வசனத்தையும் எழுதி தயாராக இருந்தார் சீமான். ஆனால், சீமான் அரசியலில் தீவிரமான நிலையில்... இந்தப் படத்தில் நடிக்கத் தயங்கி... முடிவெடுக்காமல் நழுவிவந்தார் விஜய்.
இந்தப் பட சங்கதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சீமான்.
சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான்... ""தமிழக அரசியல்ல வெற்றிடம் இருக்கு. அதனாலதான் அரசியலுக்கு வரப்போறேன்'னு ரஜினி சொல்றார். சுடுகாட்டுல கூடத்தான் வெற்றிடம் இருக்கு. காலி மைதானத்துல கம்பு சுத்துறார் கமல். என் தம்பி விஜய்... வசனம் பேசி நடிக்கிறார். "நான்தான் பேசுனேன்'னு நிக்கணுமில்ல. பிரச்சினை வந்ததும்... "நான் முதலமைச்சர் ஜெயலலிதாமேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன்'னு சொல்றது. "முதல்வரை பார்க்க நேரம் கேட்டிருக்கேன்'னு சொல்றது... ஒரு விரல் புரட்சியாம்... புரட்சி, வறட்சினுகிட்டு. விஜய் என் படத்துல நடிக்க மாட்டார். ஆனா... நான் மேடையில பேசுறத சினிமாவுல பேசுறார். சூப்பர் ஸ்டார் என் தம்பி சிம்புதான். சிம்புவும், நானும் சேர்ந்து மூணு படங்கள் பண்ணப்போறோம். அதப்பத்தி நான் பேசப்போறதில்ல. அந்தப் படங்கள் பேசும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தப் பட வேலைகள் தொடங்கி தீபாவளியில் வெளியாகுமாம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்