நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய... என்பதைவிட நல்லா குழப்புறாங்கய்யா பீதிய... என்றுதான் சொல்ல வேண்டும்.
பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் ஆகியோருடன் "சின்னச் சின்ன ஆசை'’மதுபாலா நடித்துள்ள ‘"அக்னிதேவ்'’படத்தின் ட்ரெய்லர் பரபரப்பான தோற்றம் மற்றும் வசனங்களால் வெளியாகியிருக்கிறது.
"படத்தின் வில்லியாக... சகுந்தலாதேவியாக நடித்துள்ள மதுபாலாவின் கெட்-அப்பும், பாடி லாங்வேஜும், வசனமும் ஜெயலலிதாவைக் குறிக்கிறதா? சசிகலாவைக் குறிக்கிறதா?' என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுற விலாங்குமீன் போல... மத்தவங்களுக்கு, ஜெயலலிதா என்பதுபோலவும், ஆளுங்கட்சிக்கு, சசிகலா என்பதுபோலவும்' நினைக்கக்கூடிய வகையில் ஸீன் போட்டிருக்காங்க. ஆனா... வில்லி பாத்திரம் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார்.
ஜெயலலிதா இறந்தபிறகு... நடை, உடை, பாவனை, கூந்தல், நெற்றிப்பொட்டு... என முழுக்க ஜெ.வாக உருமாறினார் சசிகலா. காலர் வைத்த கை நீளமான ஜாக்கெட்-புடவையில் இருக்கும் சசிகலா போலவே இருக்கு சகுந்தலா கெட்-அப். சகுந்தலாவுக்கு பின்னால் இருக்கும் சுவரில் ஜெ.வின் இளமைக்கால புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆன சமயத்தில் வெள்ளைச்சேலை, வெள்ளை ஜாக்கெட் அணிந்திருந்தார் ஜெ. அதுபோலவே மதுபாலா ஒரு காட்சியில் வருகிறார்.
ஜெ. வீட்டில் பணிப்பெண்ணாகவே இருந்தார் ஆரம்பத்தில் சசிகலா. அப்படி... பணிபெண் உடுத்தும் ஒரு சாதாரண சேலையில் மதுபாலா ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
"அக்னிதேவ்'க்கு அக்னிப் பரிட்சை இருக்குமோ?
சின்ன பட்ஜெட்டில் தயாராகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘"மரகத நாணயம்'’ படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், அதர்வா முரளி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு... "மின்னல் வீரன்'’பட வேலைகளை துவங்கினார் தயாரிப்பாளர் மதியழகன்.
இந்தச் சமயத்தில்...
அதர்வா ஹீரோவாக நடித்து, தயாரித்த படம் "செம போத ஆகாதே'’ரிலீஸுக்கு தயாரானது.
பெரிய பெரிய தயாரிப்பாளர்களே தங்களின் பட ரிலீஸ் நேரத்தில் பல சிக்கல்களை சந்திப்பது வழக்கமாக இருக்கிறது. அப்படி ஒரு சிக்கலில்தான் அதர்வாவும் சிக்கினார். படத்தின் ஒட்டுமொத்த உரிமையை தயாரிப்பாளர் மதியழகனின் நிறுவனத்திற்கு கொடுத்தார் அதர்வா. ஆனாலும் அதர்வா செய்யவேண்டிய செட்டில்மெண்ட்டுகளை சரியான நேரத்திற்கு செய்ய முடியாததால்... படத்தின் ரிலீஸ் நாளன்று காலை மற்றும் மதியக் காட்சிகளை தமிழகம் முழுக்க வெளியிட முடியவில்லை. இந்த குளறுபடியால்... தியேட்டர் கமிட்மெண்ட், விநியோகம் உள்ளிட்ட வர்த்தக முறையில் குழப்பம் வந்தது.
இதனால் மதியழகனுக்கு சுமார் ஐந்துகோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நஷ்டத்தை "மின்னல் வீரன்'’படத்தில் சரிக்கட்டும்படி அதர்வாவிடம் கேட்டார் மதியழகன். ‘"ஒப்பந்தப்படி "மின்னல் வீரன்'’ படத்தை எடுத்துவிடுங்கள். அதன்பிறகு... சம்பளம் வாங்காமல் ஒரு படம் உங்களுக்கு நடித்துத் தருகிறேன்'’எனச் சொன்னார் அதர்வா.
அதை தயாரிப்பாளர் ஏற்கவில்லை. "மின்னல் வீரன்'’படத்திலேயே சரிக்கட்டும் யோசனையை வலியுறுத்தினார்.
ஆனால் அதர்வா இதை ஏற்கவில்லை.
தகராறு வந்தா தயாரிப்பாளர் சங்கத்துக்கு போய்த்தானே ஆகணும்.
இருதரப்பையும் அழைத்து பஞ்சாயத்து பேசினார் சங்கத் தலைவர் விஷால்.
கிட்டத்தட்ட மூணுமணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் "மின்னல் வீரன்'’ படத்திலேயே அதர்வாவை நடித்துக் கொடுக்கும்படி முடிவு எட்டப்பட்டது. அதர்வாவும் இதை ஏற்றுக்கொண்டார்.
நிலமை சுமுகமாச்சு!
-ஆர்.டி.எ(க்)ஸ்