"கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. புதிய வாக்காளர் பட்டியலை தயார்செய்து, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை தேர்தல் அதிகாரியாகக்கொண்டு, மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும்வரை தனி அதிகாரி நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்கலாம்...' என நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை ஐசரி கணேஷ் வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளது விஷால் தரப்பு.
2019, ஜூன் 23-ல் 40 லட்ச ரூபாய் செலவில் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் பதிவான வாக்குச் சீட்டுகள் அடங்கிய ஐந்து பெட்டிகளை, ஸ்டெர்லிங் ரோடு சவுத் இந்தியன் வங்கிக் கிளையின் லாக்கரில் வைப்பதற்காக இதுவரை செலவழிக்கப்பட்ட வாடகைக் கட்டணம் சுமார் இரண்டு லட்ச ரூபாய்... என செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
விஷால் தரப்பின் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
2015 தேர்தலில் பதவிக்கு வந்த நாசர் தலைமையிலான விஷாலின் பாண்டவர் அணி... மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்தபின் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால்... நடிகர்சங்க கட்டிட பணியை முடிக்க வேண்டியதை காரணம் காட்டி... செயற்குழுவைக் கூட்டி... தங்கள் நிர்வாகம் மேலும் ஆறு மாதங் கள் பதவியில் நீடிக்க ஒப்புதல் பெற்றனர். பிறகு தன்னிச்சையாக தேர்தல் அறிவிப்பை வெளி யிட்டனர். அதனால்தான் இந்த தேர்தல் அறிவிப்பே சட்ட விரோதம் என சங்கங்களின் பதிவாளர் சொல்கிறார்.
சங்கத்தில் உறுப்பின ராகச் சேர, மேடை நாடகக் கலை அனுபவம் பெற்றி ருக்க வேண்டும் அல்லது ஒரு திரைப்படத்தில் குறைந்த பட்சம் சில நிமிடங்களாவது தோன்றியிருக்க வேண்டும். அவர் களுக்குத்தான் ஓட்டுரிமை. ஆனால்... நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர்களில் தகுதியில்லாதவர்கள் என சந்தேகப்பட்ட 44 உறுப் பினர்களின் ஓட்டுரிமையை அதிரடியாக ரத்து செய்தனர். இவர்கள் எப்போதுமே ராதாரவி ஆதரவாளர்கள். ராதாரவி ஐசரி தரப்பை ஆதரிக்கிறார்.
ஐசரி கணேஷ் தரப்பின் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
பிரமாண்டமாக அமையும் நடிகர்சங்க கட்டிடத்தில் உறுப்பினர்களின் குடும்பத்திற்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு வாடகைக்கு விடும்படியாகவும் நவீன கல்யாண மண்டபம் அமைகிறது. இதற்கு தனது தந்தை ஐசரி வேலன் பெயரை வைக்கச் சொன்னார் ஐசரி கணேஷ். இதற்கு தன் ஆளும்கட்சி செல்வாக்கை பயன் படுத்தினார். ஆனால்... இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நடிகர்சங்க பிரமுகர் பூச்சி முருகன், "என்னோட அப்பா வும் சங்கத்துக்கு உழைச்சவர்தான். அவர் பெயரை வைங்க...'’என எதிர்பாட்டு பாடினார். இதற்காக தனது தி.மு.க. செல்வாக்கை துணைக்கு வைத்துக்கொண்டார். இந்த அரசியல் லாவணி வேண்டாம் என்று... யாருடைய பெயரை வைப்பதானாலும் பொதுக்குழுதான் முடிவெடுக் கும் எனச் சொன்னார். அதனால் விஷால் மீது ஐசரிக்கு கோபம். விஷால்-கார்த்தி நடிக்க... நடிகர் சங்க நிதிக்காக ஐசரி பணம் போட்டு ஒரு படத்தை தயாரிக்கவும், அந்த படம் வெளியாகும்போது கிடைக்கும் லாபத்தை சங்கமும், ஐசரியும் பகிர்ந்துகொள்வதாகவும் ஏற்பாடானது. விஷால், கார்த்தி... இருவரும் நடிக்க சம்மதித்ததோடு, தங்களுக்கான இந்தப் பட சம்பளத்தை நடிகர்சங்க நிதிக்கு தந்துவிடவும் முடிவுசெய்தனர். பிரபுதேவா இயக்கவும் முடி வானது. ‘"கறுப்புராஜா வெள்ளைராஜா'’ என்ற தலைப்பில் பட ஏற்பாடுகள் நடந்தன. டைரக்டர் கே.சுபாஷ் இதற்கான கதையை எழுதியிருந் தார். திடீரென கே.சுபாஷ் மாரடைப்பால் காலமானதையடுத்து... பிரபுதேவாவும், ஐசரியும் இந்தக் கதையில் நிறைய மாற்றங் களைச் செய்தனர். இதனால் கருத்து வேறு பாடு உருவாகி... விஷாலும், கார்த்தியும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றிபெற்றதால்.... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் விஷால். இதனால் விஷாலையும், கார்த்தியையும் அழைத் துப் பேசிய ஐசரி,‘"கறுப்புராஜா வெள்ளைராஜா'’ படத்தில் இருவரும் நடிக்க மறுத்தது பற்றி கேட்கத் தொடங்கி... அப்படியே... ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஆவேசமாக கேட்டதால் இரு தரப்பிற்கும் முட்டிக்கொண்டது.
இதுபோக... ஆர்.கே.நகர் தேர்தல் குடைச்சல், ஜெ. நியூஸ் சேனல் ஆரம்பிக்க ஏது பணம்? என்கிற கேள்வி, அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் தொடர் கருத்து வேறுபாடு... அரசை விமர்சிக்கும் கமலை ஆதரிப்பது... என விஷால் போகும் போக்கு ஆளும் தரப்பிற்கும் பிடிக்கவில்லை. அதன் எதிரொலிதான் நடிகர்சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் உள்ளிட்ட குடைச்சல்கள்.
நடிகர் சங்க கட்டிடத்தின் சிவில் ஒர்க் எனப்படும் கட்டுமானப் பணிகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. உள் வேலைப்பாடு மட்டுமே செய்ய வேண்டும். 22 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு கட்டிடப் பணி துவங்கப்பட்டது. சென்னை நட்சத்திர கிரிக்கெட், மலேசிய கலைநிகழ்ச்சி, லைகா நிறுவனம் கொடுத்த ஒரு கோடி, கமல் கொடுத்த ஒரு கோடி என 22 கோடி ரூபாயில் கட்டிடப்பணி தொடங்கினாலும்... விலைவாசி உயர்வால், இன்னும் 18 கோடி ரூபாய் இருந்தால்தான் கட்டிட வேலை முழுவதும் முடியும். சிங்கப்பூரில் கலைநிகழ்ச்சி நடத்தி 12 கோடி திரட்டுவதுடன் கார்த்தியும், விஷாலும் தலா 3 கோடி ரூபாய் போட்டு இந்த 18 கோடியை திரட்டுவது என விஷால் தரப்பு முடிவெடுத்துள்ளது.
கலைநிகழ்ச்சி என்ற பெயரில் நட்சத்திரங்களை ஏன் அலைக்கழிக்கவேண்டும்? தனது கம்பெனி படங் களில் நடிக்கும் நடிகர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்ப துடன், அதில் வரும் லாபத்தில் கட்டிடத்திற்கான மீதித் தொகையை ஏற்பாடுசெய்து தர விரும்புகிறார் ஐசரி கணேஷ்.
திட்டமிட்டபடி நடிகர்சங்க கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டால்... வாடகை மூலம் ஆண்டுக்கு பலகோடி ரூபாய் வருமானம் உள்ள சங்கமாக நடிகர்சங்கம் மாறிவிடும்.
பணம் விளையாடும் இடத்தில் அதிகாரமும் விளையாடிப் பார்க்கத்தானே ஆசைப்படும்?!
-ஆர்.டி.எ(க்)ஸ்