கமிட்டாகும் க்ரித்தி!
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் க்ரித்தி ஷெட்டி, ஜெயம்ரவியின் "ஜீனி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் கார்த்தியின் 26வது படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து மூன்றாவது படமாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்.ஐ.சி.’ படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், காதலைச் சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக இப்படம் உருவாகிறது. லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. க்ரித்திஷெட்டி நடித்த படம் இதுவரை தமிழில் வெளிவராத போதும், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுவாரா மாளவிகா?
"தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன், கைவசம் "யுத்ரா' என்ற இந்தி படத்தை வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் பிரபாஸ் நடிப் பில் உருவாகும் "ராஜா டீலக்ஸ்' படத்தில் நடிப்பதாக கூறப் படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி யுள்ளது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்தீப்ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் "அனிமல்.' இப்படம் கலவையான விமர்சனங்களும், சில மோசமான கண்டனங்களையும் எதிர்கொண்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதில் மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்ய படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படத்தையும் பான் இந்தியா பாணியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் முதல் பாகத்தில் தென்னிந்தியாவிலிருந்து ராஷ்மிகாவை நடிக்க வைத்து ஹிட்டடித்ததால், அதே ஃபார்முலாவை இரண்டாம் பாகத்திலும் பின்பற்ற படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால்தான் மாளவிகா மோகனன் நல்ல சாய்ஸாக இருக்கும் என படக்குழு நினைப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
அபிஷேக்கிற்கு குறி!
இயக்குநர் மோகன்ராஜா தற்போது "தனி ஒருவன் 2' படத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஜெயம்ரவி, நயன்தாராவை புக் செய்த அவர், வில்லனுக்காக பல்வேறு முன்னணி நடிகர்களை அணுகிவருகிறார். முதல் பாகத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால், இரண்டாம் பாகத்தில் வில்லனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. அதை பூர்த்திசெய்யும் வகையில் நிறைய நடிகர்களைத் தேடி வந்த அவர், முதற்கட்டமாக பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே "வேலைக்காரன்' படத்தில் மோகன்ராஜாவும் பகத்பாசிலும் இணைந்து பணியாற்றியுள்ளதால் இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது வேறொரு தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம், மோகன்ராஜா பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
லோகேஷ் யுனிவர்ஸ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ள நிலையில், அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். தனது படங்களில் "கைதி' படத்தின் கதையை "விக்ரம்' படத்துடன் தொடர்புபடுத்தி இயக்கியிருந்த நிலையில்... அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதை "லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடைசியாக அவர் இயக்கிய "லியோ' படத்திலும் "கைதி' படத்தில் வந்த போலீஸ் கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தியிருந்தார். இதையடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கும் படம் "லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் பாணியில் வராது' என தெளிவாக கூறியிருந்தார். இப்படத்தை முடித்துவிட்டு, "கைதி இரண்டாம் பாகம்' எடுக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், அதற்கு முன்பாக ஒரு குறும்படம் வெளியிடவுள்ளார். 10 நிமிடம் எடுக்கவுள்ள இப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்க்கான ஆரம்பக் கதையாக இருக்கவுள்ளது. இதில் நரேனும் சேர்ந்து பணியாற்றியுள்ளார். இதை அவரே "குயின் எலிசபத்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
-கவிதாசன் ஜெ.